LGBTQIA+ சார்புள்ளவர்கள் திருமண வழக்கு சர்ச்சை!

LGBTQIA+ சார்புள்ளவர்கள் திருமண வழக்கு சர்ச்சை!

LGBTQIA+ சார்புள்ளவர்கள் திருமணம் செய்து கொள்வதை சட்டபூர்வமாக்க வேண்டி நிலுவையில் இருக்கும் வழக்கு சம்பந்தமாக மத்திய அரசு இன்னொரு அஃபிடவிட் தாக்கல் செய்திருக்கிறது. ‘அவர்கள் திருமணம் செய்து கொண்டால் பூமாதேவி பூமியைப் பிளந்து விடுவாள்,’ என்ற வாக்கியம் மட்டும்தான் அதில் மிஸ்ஸிங். மீதி எல்லா பூச்சாண்டி வாக்கியங்களும் இருக்கின்றன. அது ஒரு புறம் இருக்க, அந்த அஃபிடவிட்டில் அவர்கள் குறிப்பிட்டிருந்த ஒரு முக்கிய விஷயம் என் கவனத்தை ஈர்த்தது. LGBTQIA+ திருமணங்களுக்கு எதிராக இந்து மதம் மட்டுமல்ல, இஸ்லாமும் கூட இருக்கிறது, என்று இஸ்லாத்தை துணைக்கு அழைத்திருக்கிறார்கள்.

அதாவது இத்தனை காலம் இஸ்லாத்தை குற்றம் குறை சொல்லி நிந்தனை செய்வதையும், முஸ்லிம்களை அடக்கி ஒடுக்குவதையும் மட்டுமே வாழ்வியல் நோக்கமாக ஏற்று செயல்பட்டு வந்த ஒரு கட்சியின் அரசு இன்றைக்கு ‘பாருப்பா, இஸ்லாத்திலும் தன்பாலின ஈர்ப்புக்கு எதிரா நிலைப்பாடு இருக்குது!’ என்று ஆதரவுக்கு அழைத்திருக்கிறது. சிறார் மணத்தை தடை செய்த சாரதா சட்டத்துக்கு எதிராக பிராமணர்களும், இமாம்களும் கையோடு கை கோர்த்து வாரணாசியில் ஊர்வலம் போன சம்பவம்தான் நினைவுக்கு வருகிறது. வேறு எல்லா விஷயங்களுக்கும் அடித்து உதைத்து ஊரை ரத்தக் களரியாக்கும் இந்த மதங்கள், ஒடுக்குமுறைக்கு மட்டும் கூட்டணி சேர்ந்து கொள்ளத் தயங்குவதில்லை.

அது ஒரு புறம் இருக்க, அரசின் இந்த ஆதார நிலைப்பாடே கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டியது: அதென்ன இந்து, இஸ்லாம் இரண்டில் எதிர் நிலைப்பாடு இருந்தால் அது தடை செய்யப்பட வேண்டுமா? இந்து இஸ்லாம் இரண்டில் ஆதரவு இருந்தால் அது மட்டும் சட்டபூர்வமாக்கப்பட வேண்டுமா? அப்படி எந்த வகையில் இந்த மதங்கள் அதாரிட்டி என்று அவற்றை மேற்கோள் காட்டி சமூக முடிவுகளை எடுக்க வேண்டும் என்கிறார்கள்? கோவிட் பரவல் சம்பந்தப்பட்ட முடிவுகள் எடுக்கும் முன்பு தர்ம சாஸ்திரம் எதையாவது consult செய்தார்களா? யூனியன் பட்ஜெட் போடுவதற்கு முன் குர்-ஆன் அல்லது ஹதீஸ் எதையாவது பரிசீலித்தார்களா? தடுப்பு ஊசி ஆராய்ச்சிக்காக பைபிளைப் புரட்டி குறிப்புகள் தேடினார்களா? அணு மின் நிலையங்கள் கட்டமைப்பதற்காக குரு கிரந்த சாஹிப்பில் இருந்து ஃபார்முலா எடுத்துக் கொண்டார்களா?

நல்ல விஷயம் என்னவெனில் அரசின் இந்த மூட அறிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது. ஆண் குறி அல்லது பெண் குறியை மட்டும் வைத்து ஒருவரின் பாலினத்தை முடிவு செய்வதே பழமபஞ்சாங்க அணுகுமுறை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. Biological Man அல்லது Biological Woman என்று எளிமையான வரையறை செய்வதே இன்றைய நிலையில் சாத்தியமில்லை. அந்த ஃபர்னீச்சர்களை அறிவியல் உடைத்துப் போட்டு மாமாங்கங்கள் ஆகின்றன. பாலினம் என்பது பல்வேறு விஷயங்கள் முடிவு செய்யும் மிகவும் சிக்கலான விஷயம் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்து இருக்கிறது. எனவே, Special Marriage Act ஐ திருத்தி அதில் பாலினம் குறிப்பிடப்பட்டிருப்பதை நீக்கி விடலாமா என்று பரிசீலித்து வருவதாக தெரிவித்திருக்கிறது. அதாவது திருமணம் என்பது Gender-Neutral என்று ஆகி விடும். அப்போது யாரும் யாரையும் திருமணம் செய்து கொள்வது சாத்தியமாகி விடும். இந்த சட்டத் திருத்தம் விரைவில் அமுலாக்கப்பட்டு விடும் என்று நினைக்கிறேன்.

சமூக மாற்றங்களை அறிவியலாளர்கள் பார்த்துக் கொள்வார்கள். மத நம்பிக்கையாளர்கள் கோயில், மசூதி, பூஜை புனஸ்காரம் என்று மட்டும் நிறுத்திக் கொள்ளுங்கள். நாங்களும் உங்களை விமர்சனம் செய்யவோ எதிர்த்து நிற்கவோ மாட்டோம். நீங்கள் பாட்டுக்கு சிவனேன்னு கிடந்தா அல்லது அல்லாஹ்வேன்னு கிடந்தா நாங்கள் ஏன் உங்கள் வம்புக்கு வருகிறோம்!

– ஸ்ரீதர் சுப்ரமணியம்

Related Posts