‘லெக் பீஸ்’ -விமர்சனம்!

இந்திய மக்களை முட்டாள் ஆக்குவதாக நினைத்துக் கொண்டு ஒரு அரசே முட்டாளாகிய 2000 ரூபாய் நோட்டு நினைவிருக்கிறதுதானே? அந்த நோட்டு புழக்கத்தில் இருக்கும் போது தொடங்கும் கதை, 2000 ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெற்ற காலக்கட்டத்தில் முடிவடைகிறது. அந்தக் காலக்கட்ட சம்பவங்களை முழுக்க முழுக்க நகைச்சுவையாக வடிவமைத்த்திருந்தாலும் கேஷூவல் எண்டர்டெயின்மெண்டாக சென்று கொண்டிருந்த படமானது, எதிர்பாராமல பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் தொடர்பான பிரச்சனையை கையில் எடுத்து அதற்கு தீர்வு என்னவாக இருக்க வேண்டும் என்பதை காட்டி கைதட்டல் வாங்கி விடுகிறது லெக் பீச் டீம். அதே சமயம் படம் முழுவதும் வரும் யோகி பாபு, வழக்கமான பாணியின் மூலம் சிரிக்க வைத்தாலும், தன் மனைவி குறித்து காமெடி என்ற பெயரில் பேசும் வசனங்கள் அனைத்துமே அநாகரிகமானதாக இருக்கிறது என்பதுதான் மஹா உறுத்தல்.
கதை என்னவென்றால் இதில் நான்கு ஹீரோக்கள். அதில் ஒருவரான ரமேஷ் திலக் ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட். ஆனாலும் வியாபாரிகளுக்கு விற்பனையைப் பெருக்க பல குரலில் பேசி அன்றாடப் பாட்டுக்கு சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். அடுத்தவர் மணிகண்டன் – சிக்கு முடிகளை வாங்கி விற்கும் தொழிலில் இருப்பதால் வாழ்க்கையும் வறுமையில் சிக்கி கவலையுற வைத்தப்படி இருக்கிறது. மூன்றாமர் ஓரிடத்தில் கெட்ட ஆவி இருக்கிறதா இல்லையா என்பதை தன் கண்களாலேயே பார்த்து கண்டுபிடித்து விடக்கூடிய அசாத்திய சக்தி கொண்டிருக்கிறார் ஸ்ரீநாத். ஆனால் அஞ்சு பைசா கூட கொண்டு வருவதில்லை. நாங்காமர் அடுத்தவர்களுக்கு இன்னது நடக்கும் என்று துல்லியமாகக் கணித்து சொல்லக்கூடிய கிளி ஜோசியர் கருணாகரனுக்கு தன் அடுத்த வேளை உணவு இருக்குமா என்று சொல்ல முடியாத துர்பாக்யத்தில் நடமாடிக் கொண்டிருக்கிறார். இவர்கள் நால்வரும் ”அரசு பானம்”- அதாங்க டாஸ்மாக் தயவில் சந்தித்து நண்பர்களாகி விடுகின்றனர். ஒரு சூழலில் இவர்கள் கள்ள நோட்டு கொடுத்து விட்டதாக, பார் ஓனர் மொட்டை ராஜேந்திரன் நால்வரையும் தூக்கி போர் தனது அடியாட்களிடம் நால்வரையும் கொன்று விடுங்கள் என்றும் கூறிவிடுகிறார். அப்போது இன்னும் சற்று நேரத்தில் நீயே இறந்துவிடுவாய் என்று மொட்டை ராஜேந்திரனை பார்த்து, கருணாகரன் கூற, மொட்டை ராஜேந்திரன் சிரிக்கிறார்.சற்று நேரத்தில் அங்கு, போலீஸான மைம் கோபியும் மாரிமுத்துவும் வருகிறார்கள். இதை அடுத்து நால்வரையும் தனி அறையில் அடைத்து விடுகிறார் மொட்டை ராஜேந்திரன்.கூடவே தன்னை மைம் கோபி கொல்ல வந்திருப்பதையும் அறிந்து கொள்கிறார். அந்த சமயத்தில் ஹெல்மெட் அணிந்த இருவர் அங்கிருந்த மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உட்பட அனைவரையும் கொன்று விடுகின்றனர். இந்த கொலைகளை நேரில் பார்த்து விடும் கருணாகரன் டீம் அங்கிருந்து தப்பித்து ஓட்டம் பிடிக்கின்றனர். அதே சமயம், இந்த கொலைகளை எல்லாம் செய்தது நால்வர் என நினைத்து போலீஸார் அவர்களை தேடி வருகின்றனர்.ஆக.. ஹெல்மெட் அணிந்து வந்த அந்த இருவர் யார்.? எதற்காக அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.?கொலையாளிகள் எப்படி பிடிபட்டார்கள்? நாலவரின் கதி என்னவானது என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடை அளிப்பதுதான் லெக் பீஸ்.
நாயகர்கள் செய்யும் தொழிலை கேட்டாலே குபீர் சிரிப்பு கொப்பளிக்கத் தொடங்கி விடுகிறது.. இந்த நான்கு பேர்கள் அடிக்கும் ரவுசு ஒரு பக்கமென்றால் யோகிபாபு, வி டி வி கணேஷ், ரவிமரியா, மொட்டை ராஜேந்திரன் இன்னொரு பக்கம் ரவுசு காட்டி காமெடி சரவெடி கொளுத்துகின்றனர்.
குறிப்பிட்டு சொல்வதானால் ரமேஷ் திலக்கின் தியாகக் காதல் நெகிழ வைக்கிறது. அதேபோல், கருணாகரனின் சோதிடக் காதலும், வறுமையால் சோதனைக்குள்ளாகிறது.ஸ்ரீநாத்துக்கு காதல் கத்தரிக்காய் எல்லாம் நேரமில்லாமல் உடன் பிறந்த தங்கைக்காகவே வாழ்ந்து, தங்கை மறைவுக்குப் பின் தறி கெட்டுப் போகிறது. ஆனால் மணிகண்டன்தான் கொஞ்சம் குஜால் பேர்வழி. குயில் என்ற பாத்திரத்தில் வரும் அவர் கூடுவதற்கு ஜோடி கிடைத்துவிட்டால் குஜால் ஆகிவிடுகிறார். அப்படி அவர் யோகி பாபுவின் மனைவியிடம் ரூட் போட்டு கூடவே ரூமும் போட்டு கொஞ்சம் பணத்தையும் லவட்டிக் கொண்டு வருவதில் கில்லாடியாகத் தெரிகிறார்.இவர்களுடன் கோலிவுட் செட் பிராபர்ட்டி யோகிபாபு இவர்களெல்லாம் பத்தாது என்று விடிவி கணேஷ், ரவி மரியா, நான் கடவுள் ராஜேந்திரன், மைம் கோபி, ஜான் விஜய், சரவண சுப்பையா, ஜி.மாரிமுத்து, மதுசூதன ராவ் என்று “வாவ்..! ” சொல்ல வைக்கும் ஒரு காமெடிப் பட்டாளமே களம் இறங்கி இருக்கிறது. அவரவர்கள் பாணியில் அவரவர்கள் அடிக்கும் லூட்டி ஒர்க் அவுட் ஆகி உள்ளது.
கேமராமேன் மாசாணியின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சிகளுக் கலர்புல்லாக படமாகி ரசிக்க வைக்கிறது.மியூசிக் டைரக்டர் பிஜோர்ன் சுர்ராவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கமர்ஷியல் அம்சங்களோடு பயணித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. எடிட்டர் இளையராஜா.எஸ், ஆரம்பத்தில் சற்று தடுமாறியிருந்தாலும், இரண்டாம் பாதியில் திரைக்கதையில் இருக்கும் திருப்பங்கள் மூலம் சுவாரஸ்யமாகவும், வசனங்களில் இருக்கும் நகைச்சுவை மூலம் கலகலப்பாகவும் படம் நகரும்படி காட்சிகளை நேர்த்தியாக தொகுத்திருக்கிறார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் எஸ்.ஏ.பத்மநாபன், லெக் பீஸ் படத்தின் முதுகெலும்பு என்று சொல்லலாம். டைரக்டர் ஸ்ரீநாத் முதல் பாதியை விட இரண்டாவது பாதியில் கவனம் செலுத்தி இருப்பதால் வேகமாகவும், காமெடியாகவும் கடக்கிறது. இத்தனை நடிகர்களை வைத்து வேலை வாங்கி இருக்கும் அவர் தானும் நடித்திருப்பது ஆகப்பெரிய விஷயம்.
சமீப காலமாக காமெடி ஜர்னர் ஒன்று இருப்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள். அந்த குறையை நீக்க ஒரு பக்கா காமெடி படமாக வந்திருக்கிறது லெக் பீஸ். ஆனாலும் ஆரம்ப பேராவில் சொன்ன அந்த யோகிபாபு டயலாக் உவ்வே
மார்க் 3/5