டிஜிட்டல் சந்தையில் சிரிப்பு விலைபோகுது… மனிதாபிமானம் சாகுது!
இன்றைய நவீன இந்தியாவின் டிஜிட்டல் சந்தைகளில் ஒரு விசித்திரமான வர்த்தகம் தினந்தோறும் அரங்கேறுகிறது. குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்து கொண்டு, சமூகத்தின் நடுத்தர மற்றும் மேல்தட்டு வர்க்க இளைஞர்கள் தங்கள் அலைபேசித் திரைகளைத் தேய்க்கிறார்கள். அங்கே சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை ஒரு வேடிக்கை நிகழ்ச்சியாக (Spectacle) ஓடுகிறது. அந்த மக்களின் துயரத்தைப் பார்த்து இவர்கள் பரிதாபப்படுவதில்லை; மாறாக ஒருவிதமான மேட்டிமைத்தனமான எள்ளலுடன் (Detached amusement) அதைச் சிரித்துக்கொண்டே கடக்கிறார்கள். இந்த வர்த்தகத்தின் கரன்சிதான் ‘போஸ்ட் மாடர்ன் ஐரனி’ (Postmodern Irony).
ஒரு காலத்தில் அதிகார வர்க்கத்திற்கு எதிரான கூர்மையான அரசியல் ஆயுதமாக இருந்த இந்தக் ‘கேலி’, இன்று ஒரு பண்பாட்டு நோயாகப் பரவியிருக்கிறது. எதையுமே உண்மையாக அணுக விடாமல் தடுக்கும் ஒரு தற்காப்புக் கேடயமாகவும், எதற்கும் துணியாத ஒரு சூனிய மனநிலையாகவும் (Nihilistic shield) இது மாறியிருக்கிறது. மனிதத் துன்பங்களை வெறும் ‘எட்ஜி என்டர்டெயின்மென்ட்’ (Edgy entertainment) ஆகக் குறைக்கும் இந்த மனநிலை, நம்மிடம் ஒரு கேள்வி கேட்கிறது: இந்தக் கேலித்தன்மைக்கு ஒரு எல்லை இல்லையா?

கோமாளிகள் நடத்தும் சர்க்கஸ்!
இந்தக் கலாச்சாரம் விளிம்புநிலை மக்களை மிக மோசமான முறையில் மனிதத்தன்மை அற்றவர்களாக மாற்றுகிறது. அவர்கள் பார்ப்பதற்கு கேலிக்குரியவர்களாக (Ridiculous) இருப்பதாலேயே அவர்கள் ரசிக்கத்தக்கவர்களாகவும் மாற்றப்படுகிறார்கள். இந்தக் கேலித்தனம் பார்ப்பவர்களுக்கு ஒரு போலி மேதாவித்தனத்தைத் தருகிறது. ஒட்டுமொத்த அரசியலையும் ஒரு ‘சர்க்கஸ்’ போலவும், அதன் பின்னால் இருக்கும் அதிகார வர்க்கத்தை வெறும் ‘கோமாளிகள்’ போலவும் பார்க்க வைக்கிறது. மக்கள் சிரித்துக் கொண்டிருக்கும்போதே, அந்த கோமாளிகள் தங்களின் சர்க்கஸ் வளையத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உண்மையான அரசியல் போராட்டங்கள் சிரிப்புச் சத்தத்தில் கரைந்து போகின்றன.
வரலாறும் தத்துவமும்: அன்று ஒரு வாள்!
வரலாற்று ரீதியாகப் பார்த்தால், ‘ஐரனி’ என்பது இவ்வளவு மலிவானது அல்ல. தத்துவஞானி லுட்விக் விட்கென்ஸ்டைன் (Ludwig Wittgenstein), “மிக ஆழமான கேள்விகளை நகைச்சுவை வடிவில் மட்டுமே விவாதிக்க முடியும்” என்று நம்பினார். அன்று, அதிகாரத்தின் நிழலில் வாழ்ந்த அடக்கப்பட்ட மக்களின் ஆயுதம் இது.

அரசியல் தத்துவஞானி லியோ ஸ்ட்ராஸ் (Leo Strauss) தனது ‘Persecution and the Art of Writing’ நூலில் சொல்வது போல, தணிக்கை நிலவும் காலங்களில் சிந்தனையாளர்கள் தங்கள் உண்மையான கருத்துக்களை ‘வரிகளுக்கு இடையில்’ (Between the lines) புதைத்து வைத்தார்கள். நுணுக்கமான அறிவுடையவர்களுக்கு மட்டுமே புரியும் வகையில் உண்மையைப் பாதுகாக்கும் ஒரு கவசமாகவும், அதிகாரத்தை எதிர்க்கும் வாளாகவும் அன்று கேலி பயன்பட்டது. ஐரனி என்பது சொல்ல வேண்டிய செய்தியைச் சுமந்து செல்லும் ஒரு கலன் (Vessel) மட்டுமே; அதுவே செய்தியாக இருந்ததில்லை.
உண்மையைக் கொல்லும் ‘ஐரனி’
ஆனால் இன்று, அந்தப் பாத்திரம் (Vessel) மட்டுமே எஞ்சியிருக்கிறது; உள்ளே இருக்க வேண்டிய செய்தி காணாமல் போய்விட்டது. எதையுமே உண்மையாக நம்பாத ஒரு மனநிலையில் இருந்து பிறக்கும் இன்றைய கேலி, மனிதாபிமானத்தின் வீழ்ச்சிக்கே வழிவகுக்கிறது. நாம் வரிகளுக்கு இடையில் உண்மையை வாசிக்கப் பழகிய காலம்போய், இன்று வரிகளையே கேலி செய்து உண்மையைச் சாகடித்துக் கொண்டிருக்கிறோம்.
மனிதர்களுக்கிடையேயான உண்மையான பிணைப்பும், அடுத்தவரின் துயரைத் தன் துயராகக் கருதும் பண்பும் (Empathy) தான் ஒரு சமூகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும். இந்தக் கேலி எனும் போதையிலிருந்து வெளியே வந்து, சக மனிதர்களின் கண்களை உற்றுப் பார்க்கும் காலமிது. இல்லையென்றால், நாம் ஒரு உணர்ச்சியற்ற இயந்திரச் சமூகமாகவே எஞ்சி நிற்போம்.


