குபேரா – விமர்சனம்!
மணி லாண்டரிங் அதாவது ரஜினி நடித்த சிவாஜி படத்தில் கொள்ளையடித்த பணத்தை வெளிநாட்டுக்கு அனுப்பி அதை திரும்பப் பெறும் டெக்னிக்கான சட்டவிரோத பண பரிவர்த்தனை வார்த்தை சமீப காலமாக அடிக்கடி தென்படுவதும் அது தொடர்பாக அமலாக்கத்துறை ரெய்டு நடப்பதும் அன்றாடச் செய்திகளாக வந்துக் கொண்டிருக்கின்றன. அப்படியான நிகழ்வுகளில் கொஞ்சம் நிஜம், கொஞ்சம் கற்பனை கூடவே, கொஞ்சம் செண்டிமெண்ட்டையும் கலந்து, பிசைந்து, உருட்டி, குழைத்து குபேரா என்ற பெயரில் வழங்கி கவரவே செய்கிறார்கள்.
அதாவது நம் நாட்டிலும் நிறைந்துள்ள வங்க பெருங்கடலில் ஒரு பெரிய எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்படுகிறது. இதை தெரிந்துகொள்ளும் கார்பரேட் முதலாளியான நீரஜ் (ஜிம் சர்ப்) மத்திய ஆட்சியாளர்களுக்கு லஞ்சம் கொடுத்து அந்த எண்ணெய் உற்பத்தி செய்யும் காண்டிராக்டை கைபற்றுகிறார். பதிலுக்கு அமைச்சர் முதல் பிற அரசியல்வாதிகளுக்கு ஒரு லட்சம் கோடி டீல் பேசப்படுகிறது. இந்த பணத்தை எந்த வித பிரச்சனையும் இல்லாமல் கைமாற்ற முன்னாள் சிபிஐ அதிகாரியான தீபக் (நாகர்ஜூனா) பயன்படுத்தப் படுகிறார். ஆம்.. நேர்மையான சிபிஐ அதிகாரியாக இருந்த தீப்க் மீது பொய் வழக்கு போட்டு அவரை சிறைக்கு அனுப்புவதால் இந்த அரசின் மீது, சட்ட திட்டங்கள் மீதும் விரக்தியாகி இந்த ஊழலில் அவரும் கலந்துகொள்கிறார்.
பிரச்சனையில் மாட்டிக் கொள்ளாமல் பணத்தை கைமாற்ற ஐந்து பிச்சைக்காரர்களை தேர்வு செய்து அவர்களை பினாமியான தொழில் அதிபர்களாக மாற்றி அவர்கள் மூலம் பணத்தை கைமாற்ற திட்டமிடுகிறார். அந்த வேலை முடிந்ததும் ஒவ்வொருவராக கொலை செய்யப்படுகிறார்கள். அப்படி மாற்றம் கண்ட ஐந்து பிச்சைக்காரர்களில் ஒருவர்தான் அப்பாவியான கதை நாயகன் தேவா (தனுஷ்). ஒரு கட்டத்தில் இவர்களின் சதியை அறிந்த தேவா அந்த கூட்டத்திடமிருந்து தப்பித்து விடுகிறார். அவரை பிடிக்க எல்லா பக்கத்திலும் அடியாட்கள் தேடுகின்றனர். அவர்களிடமிருந்து தேவா தப்பினாரா? தன் பெயரில் பினாமியாக வைக்கப்பட்ட பத்தாயிரம் கோடி ரூபாயை என்ன செய்கிறார் என்பதுதான் குபேரா படக் கதை.
படம் தொடங்கி கிட்டத்தட்ட இருபது நிமிடங்களுக்குப் பிறகே தனுஷ் என்ட்ரி ஆகிறார். அதன் பிறகு படம் முழுக்க தேவா எனும் பாத்திரமாக, அசத்தல் நடிப்பைத் தந்திருக்கிறார். பல்வேறு காலகட்டங்களில் படம்பிடிக்கப்பட்டபோதும், அந்த வித்தியாசம் நம் கண்களுக்குப் புலப்படாமல் இருக்கச் செய்வதில் வெற்றி பெற்றிருக்கிறார். குறிப்பாக பிச்சைக்கார வாழ்க்கை பணக்கார வாழ்க்கை மீண்டும் பிச்சைக்காரருக்கான அத்தனை விஷயங்களையும் தன் நடிப்பின் மூலம் சரிவரக் கலவையில் சிறப்பாகக் கொடுத்துப் பார்ப்பவர்கள் கண்களைக் குலமாக்கும்படியான நடிப்பையும் கொடுத்து அசத்துகிறார்.
குறிப்பாகச் சொல்வதானால் இவரைத் தவிர இப்படியொரு கதாபாத்திரத்தில் இங்கு இருக்கும் எந்த நடிகரும் நடிக்கத் துணிய மாட்டார்கள் என்பது உறுதி. மூன்றே மூன்று உடைகள். உடைந்த வலது கை. ஒப்பனையில்லாத பாத்திரம். கடைசி வரை அந்தப் பாத்திரமாகவே வருகிறார். ஒரு நாயகனுக்கான எந்தவிதமான பலமும் இல்லாத ஒரு பாத்திரம். சண்டை கிடையாது. பாடல்கள் கிடையாது. ஸ்லோ மோஷனில் நடை கிடையாது. தேவா என்ற கதாபாத்திரம் தான் முன்னால் தெரிகிறது. அதே சமயம் ஆங்காங்கே சில இடங்களில் சிரிப்பையும் வரவைத்து சில இடங்களில் முதிர்ச்சியான நடிப்பை நிறைவாகக் கொடுத்துப் பார்ப்பவர்களைக் கைதட்ட வைத்து அதன் மூலம் திரையரங்கை அதிரச் செய்து இருக்கிறார்.
சீனியர் ஆக்டர் நாகார்ஜுனா தான் கமிட் ஆகி உள்ள ரோல் நல்லவரா? கெட்டவரா ?? என்பதை புரிந்து கொள்ளாமல் நடித்திருப்பதை அப்பட்டமாக எக்ஸ்போஸ் செய்து ஸ்கோர் செய்து விடுகிறார். . கிரே ஷேடில் வரும் இவரது ரோல் சிறப்பாக அமைந்து அதற்கு உரிய பங்களிப்பை செய்திருக்கிறார். ஒரு சூழலில் செய்வதெல்லாம் தவறென்று புரிந்து குற்ற உணர்ச்சியால் இரு பக்கமும் சாய முடியாமல் நடுவே நிற்கும் கதாபாத்திரமாக மாறி பின்பு கடைசியில் வந்த இடத்திலேயே வந்து நின்று முடியும்படியான கேரக்டரசேசனை சிறப்பாகக் கையாண்டுள்ளார் .
அப்பாவி பெண்ணாக நடித்திருக்கும் ராஷ்மிகா மந்தானாவுக்கு மேக்கப் இல்லை காஸ்டியூம் இல்லை டான்ஸ் இல்லை பாடல்கள் இல்லை இருந்தாலும் அழகாக இருக்கிறார். கிடைத்த வாய்ப்பை சிறப்பான பயன்படுத்தி ஒரு சூப்பர் ஹிட் படத்தில் இருப்பதை உறுதி செய்துள்ளார். இவருக்கும் தனுஷுக்குமான கெமிஸ்ட்ரி மிக மிக சிறப்பாக அமைந்து அழகான நடிப்பை இருவரும் மாறி மாறி கொடுத்து படத்திற்கு உயிர் கொடுத்திருக்கின்றனர். வில்லன்கள் ஜிம் சர்ப், ஹரிஷ் பெரோடி ஆகியோர் வழக்கமான வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கின்றனர்.
சுனைனா, ஜெயப்பிரகாஷ், சாயாஜி ஷிண்டே, பாக்யராஜ் உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் தங்கள் பங்களிப்பை சரியாக் செய்திருக்கிறார்கள்
மியூசிக் டைரக்டர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசை மூன்று மணி நேரம் திரைப்படத்தை அலுப்பு தெரியாமல் பார்க்க வைக்கிறது.
கேமராமேன் நிகேத் பொம்மி ரெட்டியின் ஒளிப்பதிவில் திரைப்படங்களில் பார்த்திராத லொக்கேஷன்கள் மூலம் கண்களுக்கு விருந்துபடைத்திருக்கிறது. காட்சிகள் மட்டும் இன்றி கதாபாத்திரங்களை பார்வையாளர்கள் மனதில் பதிய வைப்பதிலும் அதிக பங்காற்றியிருக்கிறார்.
பண முதலைகள் எப்படி தங்களது பினாமிகளை உருவாக்குகிறார்கள், போலியான நிறுவனங்களை உருவாக்கி எப்படி சட்டவிராத பண பரிமாற்றம் செய்கிறார்கள் என்பதை தோலுரித்துக் காட்டியிருக்கும் இந்த டீம் எடிட்டிங்கில் இன்னும் கொஞ்சம் அக்கறைக் காட்டி இருக்கலாம்.
என்றாலும் ஒரு பிச்சைக்காரன் பார்வையில் முழுப் படத்தைக் காட்டி ஒவ்வொரு ரசிகனையும் குபேர மனநிலையில் அனுப்பும் வித்தையில் பாஸாகி விட்டது இப்படம்
மார்க் 4/5


