வா வாத்தியார்- விமர்சனம்!
‘வாத்தியார்’ – தமிழ் சினிமாவுல இந்த ஒரு சொல்லுக்கு இருக்கிற வெயிட்டே தனி. அந்தப் பேரக் கேட்டாலே, கண்ணு முன்னாடி வந்து நிக்கிற அந்தத் தொப்பி போட்ட தங்கமான மனுஷன், இன்னைக்கும் அரசியல், சினிமா, மக்கள் மனசுன்னு எல்லா இடத்துலயும் ‘வாழ்க!’ கோஷத்தோட வாழ்ந்துட்டு இருக்காரு. “அந்த எம்.ஜி.ஆர் மட்டும் இப்போ உயிரோட இருந்தா, இந்த நாட்டுல நடக்குற அநியாயங்களை எப்படிக் தட்டிக்கேட்பாரு?” அப்படிங்கிற ‘ஒன்லைன்’ கான்செப்டை பிடிச்சு, அதுல ஒரு சூப்பர் ஹீரோ ஃபேண்டஸியை மிக்ஸ் பண்ணி, ‘வா. வாத்தியார்’னு குதிச்சிருக்காரு நம்ம நலன் குமாரசாமி.
கதைக்களம்:
எம்.ஜி.ஆர் மறைஞ்ச அதே நேரத்துல பொறக்குறாரு நம்ம ஹீரோ ராமேஸ்வரன் (கார்த்தி). பேரன் பொறந்த ராசியோ என்னவோ, தாத்தா பூமிபிச்சைக்கு (ராஜ்கிரண்) தன் பேரன் மேல ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை – இவன் ‘வாத்தியார்’ மறுபிறவினு! தாத்தாவோட அதீத அன்புல எம்.ஜி.ஆர் கொள்கைப்படியே வளர்ற கார்த்தி, ஒரு கட்டத்துல “நல்லவனா இருந்தா நடுத்தெருவுல தான் நிக்கணும்”னு ரியலைஸ் பண்றாரு. அப்புறம் என்ன? இனி நான் போற பாதை ‘நம்பியார்’ பாதைனு ரூட்டை மாத்தி, வெளியே போலீஸ், உள்ளே லஞ்சப் பேய்னு டபுள் கேம் ஆடுறாரு. இன்னொரு பக்கம் பெரியசுவாமி (சத்யராஜ்) ஒரு கார்ப்பரேட் நிறுவனத்துக்காக மக்கள் போராட்டத்தை நசுக்க பிளான் போடுறாரு. தடம் மாறுற ராமுவையும், தப்பு பண்ற சுவாமியையும் நம்ம மறைந்தும் / ‘வாத்தியார்’ எப்படித் தடுத்து நிப்பாட்டுறாருங்கிறது தான் இந்த கலர்ஃபுல் டிராமா.
பெர்பார்மென்ஸ்:
-
கார்த்தி: மனுஷன் உழைப்புல ஒரு ‘புரட்சித் தலைவர்’ தான்! எம்.ஜி.ஆர்-ஆ மாறாம, அவரோட மேனரிசங்கள், டயலாக் டெலிவரி, அந்த காலத்து உடைகள்னு எல்லாத்துலயும் ஒரு ரெஃபரன்ஸா மட்டும் வெச்சுக்கிட்டு பின்னி எடுத்திருக்காரு. ‘நான் ஆணையிட்டால்’னு அவர் வசனம் பேசுறப்போ தியேட்டர்ல விசில் பறக்குது.
-
ராஜ்கிரண்: அந்த வெள்ளை உள்ளம் கொண்ட ரசிக தாத்தாவா அப்படியே வாழ்ந்திருக்காரு. படத்தோட எமோஷனல் சென்டரே இவர்தான்.
- கீர்த்திஷெட்டி: ஹீரோயின் என்றால் ஹீரோ என்ன செய்தாலும் கூடவே இருப்பார் என்ற இலக்கணத்தை அட்சரம் பிசமாமல் செய்து இருக்கிறார்.
-
சத்யராஜ்: வில்லத்தனத்துல இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருக்கலாம்னு தோணுது.
-
டெக்னிக்கல் டீம்: சந்தோஷ் நாராயணன் மியூசிக்ல ‘யார் மனிதன்’ பாடலும், பின்னணி இசைல பழைய எம்.ஜி.ஆர் பாடல்களோட டச்சும் படத்தோட பெரிய பிளஸ். ஆர்ட் டைரக்ஷன்ல இருந்து காஸ்ட்யூம் வரைக்கும் அந்த ஃபேண்டஸி உலகத்தை நம்ப வைக்க நல்லா மெனக்கெட்டிருக்காங்க.
ஆந்தை அலசல்:
படத்தோட முதல் பாதியில வர்ற அந்த எம்.ஜி.ஆர் கனெக்ட், ஒரு புதுவித அனுபவத்தைத் தருது. ஆனா, ரெண்டாம் பாதியில திரைக்கதையில இன்னும் கொஞ்சம் தெம்பு காட்டியிருக்கலாம். சில ட்விஸ்ட்டுகளை நாமளே ‘யூகிச்சுடுறது’னால, எதிர்பார்த்த அந்த தீவிரம் கடைசியில கொஞ்சம் மிஸ் ஆகுது. மத்தபடி, ஒரு புது ஐடியாவை ட்ரை பண்ண நலன் குமாரசாமியைப் பாராட்டலாம்.
மொத்தத்தில்
எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு இது ஒரு ‘ரெட்டை இலை’ விருந்து! கார்த்தி ரசிகர்களுக்கு ஒரு மாஸ் ஃபேண்டஸி! வாத்தியார் பாடம் எடுக்குறதை விட, நினைவுகளால ரசிகர்களை அதிகமா கவர்கிறார்.
மார்க்: 3.5 / 5


