கழுவேத்தி மூர்க்கன் – விமர்சனம்!

கழுவேத்தி மூர்க்கன் – விமர்சனம்!

ம் தமிழ் திரைப்படங்கள் பெரும்பாலும் மசாலா, குடும்பம், அதிரடி, காதல், நகைச்சுவை போன்ற வகைகளை கொண்டு மட்டுமே தயாரிக்கப்பட்டு வருகின்றன.. இவைகளைத் தாண்டி வேறெந்த மொழிகளிலும் இல்லாத ஒரு புதுவகை சினிமா கோலிவுட்டில் உருவாகுவது அதிகரித்து வருகிறது. . அதாவது சாதியை தூக்கிப் பிடிக்கும் வகையிலான சினிமாக்கள். ஆம்.. தமிழில் சர்வசாதாரணமாக சின்னக் கவுண்டர், பெரிய கவுண்டர், நாட்டாமை, தேவர்மகன் என்று சாதி பெயர்களை தாங்கி வந்த படங்கள் ஏராளம். இவை சாதியின் பெயரோடு சாதிய அடையாளங்களையும் பெருமையாக பார்வையாளர்கள் மீது திணித்தது. விளைவாக தமிழ் சினிமா சாதிய வேறுபாடுகளை அங்கீகரிக்க ஆரம்பித்தது. அதிலும் பா.இரஞ்சித் போன்றோரின்  போக்கால் வெள்ளித் திரையில் சாதியின் தீவிரத்தை, அதன் இருப்பை அதிகரித்தது. அதே சமயம் சில படங்கள் சாதிகள் தேவையில்லை என்று சொல்வதாக நினைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட சாதியின் பெருமையை திரையில் மறைமுகமாக ஆதரிப்பதெல்லாம் யதார்த்தமாகி போய் விட்டது. அந்த சாதியப் பட பட்டியலில் இணைய வந்திருக்கும் இன்னொரு படமே கழுவேத்தி மூர்க்கன்.. இதிலும் சில சாதி பழக்க வழக்கங்களை அப்பட்டமாக காட்டி  சுயநலம் பிடித்தவர்கள் செய்யும் சதியால்தான் சாதிக் கலவரம் எல்லாம் ஏற்படுகிறது என்று எடுத்துக் காட்டி சாதியை ஒழிப்போம் என்று சொல்ல முயன்று இருக்கிறார் டைரக்டர் கெளதம ராஜ்.

கதை என்னவென்றால் வழக்கம் போல் இராமநாதபுரம் மாவட்டம் . அங்குள்ள ஒரு கிராமத்தில் உயர்சாதி, ஒடுக்கப்பட்ட சாதி ஆகிய இரு சாதி மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இதில் உயர்சாதி ஹீரோவின் உயிர் நண்பனாக ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் இருக்கிறார். இவர்களின் ஈருடல், ஈருயீர் நட்பு சாதி அரசியல் செய்வர்களுக்கு இடையூறாக உள்ளது. இதனிடையில் ஹீரோவின் நண்பர் கொலை செய்யப்பட, அந்த பழி ஹீரோ மீது விழுகிறது. இதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் ‘கழுவேத்தி மூர்க்கன்’ திரைக்கதை..!

தென்னகத்தில் உலாவரும் கோக்குமாக்கான பலரில் ஒருவன் தோற்றத்தில் அதாவது அய்யனார் மீசையுடன் மிடுக்கான உடல் மொழியுடன் அனல் பறக்க மூர்க்கனாய் வரும் அருள்நிதி ஆக்ஷனில் மிரட்டுகிறார். சணடைக் காட்சிகளில் ஒவ்வொரு அடியும் நிஜமாகவே நடப்பது போல் அட்டகாசம்.. கூடவே ரொமான்ஸ் சீன்களிலும் கலக்கி இருக்கிறார். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் கல்வியின் முக்கியத்துவத்தை பற்றி பேசும் சந்தோஷ் பிரதாப்பின் நடிப்பு சிறப்பு.

சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்களை அடுத்து இந்த படத்திலும் அருமையாக நடித்திருக்கிறார் துஷாரா விஜயன். அந்த கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். சாயா தேவி, முனிஷ்காந்த், சுப்ரமணியன் ஆகியோரின் நடிப்பையும் பாராட்டியே ஆக வேண்டும்.

கேமராமேன் ஶ்ரீதர் பார்வையில் கிராமிய வாழ்க்கை துல்லியமாக வெளிப்பட்டிருக்கிறது. அஹிலும் சேசிங் சீன்களில் ஸ்ரீதரின் பங்களிப்பு அபாரம்.

டி. இமானின் இசை படத்திற்கு தனி வெயிட்டை வழங்கி இருக்கிறது..

இரு மாறுப்பட்ட சமுதாயங்களுக்கிடையே உள்ள உறவையும், சிக்கலையும் பேசும் கதை என்பதால் மிகக் கவனமாக திரைக்கதையைச் செதுக்கி அடடே சொல்ல வைத்து விடுகிறார் டைரக்டர். அதிலும் பல வசனங்கள் பலே ரகம்.. சாம்பிளுக்கு ‘உன் நியாயம், என் நியாயம் என்று தனித்தனியாக எதுவும் கிடையாது. நியாயம் என்பது எப்போதும் ஒரே மாதிரிதான் இருக்கும்’ ‘அரசியல்ல மேல ஏற ஏற கொத்துறதுக்கு பாம்பும் வரும், குத்துறதுக்கு கத்தியும் வரும்’ ‘எங்கள அடுத்த கட்டத்துக்கு கூட்டிட்டு போகாட்டியும் பரவாயில்லை, ஆனால் எங்கள 50 வருஷம் பின்னாடி தள்ளிராதீங்க..’ ‘காப்பாத்த தான்டா சாமி…, சாமி பேர சொல்லிக்கிட்டு வெட்டிக்கிட்டு சாவிங்கன்னா… உங்களுக்கெல்லாம் சாமி கும்பிடறதுக்கே தகுதி இல்லடா..’

மொத்தத்தில் இந்த கழுவேத்தி மூர்க்கன் – சமீப காலக் கண்ணாடி

மார்க் 3.25/5

error: Content is protected !!