இன்னும் 300 வருஷம் குழந்தை திருமணங்கள் நடக்கும் – யுனிசெஃப் அப்செட்!

இன்னும் 300 வருஷம் குழந்தை திருமணங்கள் நடக்கும் – யுனிசெஃப் அப்செட்!

ர்வதேச அளவில் உலக அளவில் ஒரு நிமிடத்தில் 30க்கும் அதிகமான பெண் குழந்தை திருமணங்கள் நடக்கின்றன. இதனால் பெண் கல்வி பாதிக்கப்படுகிறது. இளம் வயதில் தாயார் ஆவதால் உடல் பலவீனமடைகிறது. குழந்தை திருமணம் செய்துகொண்ட சிறுமிகளில் 28 சதவீதம் பேர் பிரசவத்தின்போது உயிரிழக்கின்றனர். அதிலும் உலக அளவில் நடைபெறும் குழந்தை திருமணங்களில் 33 சதவீதம் இந்தியாவில்தான் நடக்கிறது என்ற தகவல் எப்போதோ வெளியான நிலையில் “உலகளவில் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை குறைத்து வருகிறது என்பது உண்மை. ஆனால் இந்த நூற்றாண்டில் இந்த நடைமுறையை முழுமையாக அகற்ற முடியுமா என்றால், அதற்கு மிக மிக குறைவான வாய்ப்பே உள்ளது” என ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி யுனிசெஃப் எனப்படும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போதைய நிலவரப்படி குழந்தை திருமணங்கள் குறைந்துள்ளன. யுனிசெஃப் அதை வரவேற்கிறது. ஆனால் 2030-ல் அடைய வேண்டிய வளர்ச்சி இலக்கை இன்னும் நாம் நெருங்கக்கூட இல்லை” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1891-ம் ஆண்டு ஜனவரியில் சட்ட முன்வடிவாக வைக்கப்பட்டு 1929 செப்டம்பரில் குழந்தை திருமண தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் இச்சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. தற்போதுள்ள சட்டத்தின்படி பெண்ணின் திருமண வயது 18, ஆணின் திருமண வயது 21 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைவிட குறைவான வயதுள்ளவர்களுக்கு திருமணம் செய்துவைத்தால், சம்பந்தப்பட்டோருக்கு ரூ.1 லட்சம் அபராதம், 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.

திருமணத்தை நடத்தி வைப்பவர்கள் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் வழக்கு பதிவு செய்ய சட்டத்தில் இடம் உள்ளது. சிறுமிகளை வற்புறுத்தியோ அல்லது தொடர்ந்து அழுத்தம் கொடுத்தோ நடத்தப்படும் திருமணங்கள் செல்லாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் யுனிசெஃப் வெளியிட்ட ஓர் அறிக்கையில், “உலகளவில் கடந்த 10 ஆண்டுகளில், குழந்தை திருமணங்களின் சதவீதம் 23-லிருந்து 19 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இருப்பினும் இப்போதும் 18 வயதுக்குட்பட்ட, 12 மில்லியனுக்கும் அதிமான பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் உலகில் திருமணம் செய்துகொள்கிறார்கள். இதேநிலை தொடர்ந்தால், இந்த உலகில் குழந்தை திருமணங்கள் முற்றிலும் ஒழிய இன்னும் 300 ஆண்டுகள் தேவைப்படும். தற்போதுள்ள திருமணமான பெண்கள் பட்டியலில், 640 மில்லியன் பெண்கள் தங்களின் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்துள்ளனர். இப்போதும் ஐந்தில் ஒரு குழந்தைக்கு, தங்களின் 18 வயதுக்கு முன்பே திருமணமாகிவிடுகிறது.

குழந்தை திருமணத்திற்கு பெரும்பாலும் வறுமை, பெண்களுக்கான வரையறுக்கப்பட்ட சமூக சூழல்கள், பாலின சமத்துவமின்மை, பலவீனமான சட்டங்கள் மற்றும் பெண்களுக்கு சமூகத்தால் தரப்படும் புற பிரச்னைகள் ஆதியவைதான் காரணங்களாக உள்ளன. சுகாதார நெருக்கடிகள், நாடுகளுக்கு இடையேயான மோதல்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் போன்றவையும் அவ்வப்போது குழந்தை திருமணங்களை இன்னும் அதிகரிக்கின்றன. எப்படியெனில் அவை பெண்களின் கல்விக்கு இடையூறாக வந்து, பள்ளி செல்லா நிலைக்கும், அதன்பிறகு குழந்தை திருமண நிலைக்கும் அவர்களை தள்ளுகின்றன. ” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!