காவல்துறை உங்கள் நண்பன் – விமர்சனம்!

காவல்துறை உங்கள் நண்பன் – விமர்சனம்!

காவல்துறை உங்கள் நண்பன் படத்தை பொறுப்பேற்று ரிலீஸ் செய்திருப்பவர்களில் ஒருவரான வெற்றிமாறன் “இந்த படத்தில் மிடில் க்ளாஸ் மக்கள் எந்த அளவுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழலுக்குள் இருக்கிறோம் என்று ரொம்ப வலுவாகச் சொன்ன மாதிரி இருக்கும். இந்த மாதிரியான படங்கள் காவல்துறையின் மீதான விமர்சனம் என்பதைவிட, மக்களுக்கும் அவர்களுக்குமான இடைவெளியைக் குறைப்பதற்கான இடமாகப் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன். ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தில் நடக்கும் விஷயங்கள் ஏதோ ஒரு இடத்தில் நாம் அன்றாடம் பார்த்ததாகவோ அல்லது சந்தித்தாகவோ இருக்கிறது:” என்று சொன்னதை உள்வாங்கிக் கொண்டு படம் பார்த்தால் நலம்.

அத்துடன் அண்மையில் ஒரு செய்தியை கவனித்திருக்கலாம் – அதாவது ‘ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட பகுதியில் சட்டம்–ஒழுங்கைப் பராமரிக்க 222 காவல் துறையினர் இருக்க வேண்டும் என்பது ஐ.நா.வின் பரிந்துரை. ஆனால், இந்தியாவில் 131 காவலர்கள்தான் ஒரு லட்சம் ஜனங்களுக்கு பாதுகாப்புக்கு இருக்கிறார்கள். இப்படி காவலர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் புலன் விசாரணைக்கும், ரோந்து பணிக்கும் போதுமான காவலர்கள் அனுப்பப் படுவது இல்லை. அதனால், காவல் துறையின் அடிப்படை கடமையான சட்டம்– ஒழுங்கைப் பராமரித்தல், குற்றத்தடுப்பு பணிகள் போன்றவை பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. அதன் காரணமாக, காவலர்களின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டு, பொது மக்களிடம் தங்களது கோபத்தை அவ்வப்பொழுது வெளிப்படுத்துவதாக உளவியல் ஆய்வு ஒன்று தெரியப்படுத்து கிறது’ – என்று வெளியான அந்த செய்தியை அடிப்படையாக கொண்டு உருவான கதைதான் ‘காவல்துறைஉங்கள் நண்பன்’ படம்!

அதாவது குடும்பத்தைப் பகைத்து காதலுடன் திருமணம் செய்து தனிக் குடித்தனமாய் வாழும் இளம் ஜோடி சுரேஷ் ரவி & ரவீனா. ஹேப்பியான சூழலில் தாய்மை அடைந்த ரவீனாவுக்கு ஒரு நாள் தனியாக வீடு திரும்பும் போது மோசமான அனுபவம் ஏற்பட்டதை கேட்டு கோபமாக பழிவாங்க மனைவியுடன் செல்லும் வழியில் நைட் ரவுண்ட்ஸ் போலீஸ் டீம் நிறுத்தி விசாரிக்க முற்பட்டதன் விளைவுதான் முழுப்படக் கதை.

ஹீரோ என்ற பெயரில் வரும் சுரேஷ் ரவிக்கு போலீசிடம் அடி வாங்குமளவு உடல்வாகு இருக்க வேண்டும் என்று மட்டும் எதிர்பார்த்திருப்பதால் அந்த ரோலுக்கு பக்காவாக இருக்கிறார். நாயகி ரவீனா ரவி தன் பங்களிப்பை முடிந்தளவுக் கொடுத்திருக்கிறார்.இன்ஸ்பெக்டராக வரும் மைம் கோபி தன் கூத்துப்பட்ட்டறை அனுபவம் மூலம் கிடைத்த கேரக்டருக்கு வலுவூட்டி இருக்கிறார். டைட்டிலுக்கு எதிரான மன நிலையிலேயே அவ்வளவு போலீஸூம் இருக்கிறார்கள் என்று தெரிந்து விடக் கூடாது என்பதற்காக ‘சூப்பர் குட்’ சுப்பிரமணி, ஈ.ராமதாஸ் ஆகியோரை ரொம்ப நல்ல போலீஸாக காட்டி இருக்கிறார்கள்.

ஆனால் படம் முழுக்க ஒரு தனி மனிதனை பழிவாங்கும் போலீஸ் டீமைக் காட்டி சலிப்படைய வைத்து விட்டார்கள். .நவீனமயமாகி விட்ட இக்காலச் சூழலில் முன்னரே சொன்னது போல் பெரும்பாலான போலீஸூக்கு தற்போதைய பணி காலம் சராசரியாக 14 மணி நேரத்திற்கும் அதிகமாக உள்ளது. பல மாநிலங்களில் வாரத்திற்கு ஒருநாள் கூட ஓய்வு அளிக்கப்படாததால், அழுத்தம், சோர்வினால் ஏற்படும் கோபதாபங்கள், பணியிடத்திலும், அவர்கள் குடும்ப வாழ்க்கையையும் பாதிக்கிறது. பத்தில் எட்டு காவலர்களுக்கு அதிக நேர வேலைக்கான கூடுதல் ஊதியம் கிடைப்பதில்லை.இது போன்ற பணிச் சுமையினால் உடல்நலம் மற்றும் மனநலம் பாதிப்படைந்திருக்கும் காவல்துறையில் மனநலம் பாதித்த போலீஸார் சிலர் இருப்பதைக் கண்டறிந்து உரிய சிகிச்சை & நிவாரணம் செய்து மக்கள் சேவை செய்து வரும் காவல்துறையை ஒட்டு மொத்தமாக களங்கப்படுத்தவென்றே ஒரு பக்கா ஸ்கிரிப்டை தயார் செய்து இருக்கிறார் இயக்குநர்.

செல்போன் என்றொரு சாதனம் வருமுன் நிகழந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான விசாரணை பாணியில் தயாராகி இருக்கும் இந்த கா.உ.ந. கொஞ்சம் அரைவேக்காடுத் தனம் என்று சொன்னாலும் இயக்குநர் சொல்ல வந்த பாணியில் ஜெயித்து விட்டார் என்றும் கூறலாம்

மொத்தத்தில் கறுப்பு ஆடொன்றைக் காட்டிக் கொடுக்கும் காவல்துறை படமிது.

மார்க் 3 / 5

error: Content is protected !!