‘காடுவெட்டி’ குரு வாழ்க்கை வரலாறுதான் படையாண்ட மாவீரா!- வ.கௌதமன் அறிவிப்பு!

‘காடுவெட்டி’ குரு வாழ்க்கை வரலாறுதான் படையாண்ட மாவீரா!- வ.கௌதமன் அறிவிப்பு!

நிர்மல் சரவணராஜ் மற்றும் எஸ். கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் வி.கே. புரொடக்ஷன்ஸ் வழங்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தை வ. கெளதமன் இயக்கி முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். பாடல்களுக்கு ஜி.வி. பிரகாஷ்குமாரும் பின்னணி இசைக்கு சாம் சி. எஸ்.-சும் பொறுப்பேற்றுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரையுலகினர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொள்ள சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. வ. கெளதமன், E. குறளமுதன், U.M. உமாதேவன், கே. பாஸ்கர், கே. பரமேஸ்வரி ஆகியோர் வி.கே. புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். சமுத்திரக்கனி, பூஜிதா, பாகுபலி பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், சாய் தீனா, ஆடுகளம் நரேன், மன்சூர் அலிகான், ஏ.எல். அழகப்பன், மதுசூதன ராவ், நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், தமிழ் கெளதமன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். வைரமுத்து பாடல்களை எழுத, கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, ராஜா முகமது படத்தொகுப்பை கவனிக்க, நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் சண்டைப் பயிற்சியை ஸ்டண்ட் சில்வாவும் கையாண்டுள்ளனர். ‘படையாண்ட மாவீரா’ இசை வெளியீட்டு விழா முக்கிய அம்சங்கள் வருமாறு:

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் தயாரிப்பாளர் எம்.ஜே.எஃப். லயன் பி.ஆர்.எஸ். சரவணராஜ் மற்றும் எஸ். கிருஷ்ணமூர்த்தி வரவேற்றன‌ர். ‘பிக் பாஸ்’ புகழ் முத்துக்குமரன் நிகழ்வை தொகுத்து வழங்கினார். தயாரிப்பாளர்கள் கே. பாஸ்கர், E. குறளமுதன், U.M. உமாதேவன், நடன இயக்குநர்கள் தினேஷ் மாஸ்டர், ஸ்ரீதர் மாஸ்டர், ஐநா கண்ணன் உள்ளிட்டோர் படக்குழுவினரை வாழ்த்தி பேசினர்.

நடிகர் இளவரசு பேசுகையில், “தமிழகத்திற்கு அறிமுகமான ஒரு மனிதனின் கதை இது. கதையை முன்னெடுத்து செல்லும் கதாபாத்திரம் ஒன்றில் நான் இப்படத்தில் நடித்துள்ளேன். இயக்குநர் கெளதமன் எனக்கு சுமார் 25 ஆண்டுகளாக பழக்கம். இந்த திரைப்படத்தை மிகவும் சிறப்பாக அவர் உருவாக்கியுள்ளர்,” என்றார்.

‘படையாண்ட மாவீரா’ படத்தின் இயக்குநரும் நாயகனுமான வ. கெளதமன் பேசுகையில், “இந்த மண்ணையும் மக்களையும் நேசிப்பது போலவே மற்றொருபுறம் எனது திரைத்துறையையும் நான் நேசிக்கிறேன். இது நான் இயக்கி நடித்திருக்கிற படைப்பு. உண்மையில் ஒரு படைப்பாளியின் படைப்பு தான் பேச வேண்டுமே தவிர அவன் பேசக்கூடாது என நான் நினைப்பேன். ஆனாலும் இந்த படத்தை பற்றி நான் பேசவேண்டியுள்ளது.இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் என் மீது மிகுந்த அக்கறை கொண்டு இந்த படத்தை உருவாக்க முன்வந்தார்கள். திரைத்துறையின் நான் இன்னும் அதிகம் சாதிக்க வேண்டும் என விரும்பினார்கள். மக்களுக்கான கதையை அவர்களுக்கு வழங்க வேண்டும் என விரும்பினோம். இவற்றின் விளைவு தான் ‘படையாண்ட மாவீரா’. இப்படத்திற்காக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து இணைந்து மிகச் சிறந்த பாடல்களை வழங்கியுள்ளார்கள் புலிக்கொடி பாடல் உணர்வுப்பூர்வமாகவும், ஜிவி பிரகாஷும் மது ஸ்ரீயும் பாடிய பட்டாம்பூச்சி பாடல் அழகுணர்ச்சியுடனும் அமைந்துள்ளன. சாம் சி. எஸ். சிறப்பான பின்னணி இசையை தந்துள்ளார். இப்படத்தின் முன்னோட்டம், பாடல்கள் மிகுந்த சிலிர்ப்பை ஏற்படுத்தி இருப்பதாக அனைவரும் கூறினீர்கள், மிக்க நன்றி. முழுப்படத்தையும் பார்த்ததும் உங்கள் உள்ளங்களில் பேரதிர்வை அது ஏற்படுத்தும், அது உறுதி.

எத்தனையோ படங்களுக்காகவும் எத்தனையோ பிரச்சினைகளுக்காகவும் நான் குரல் கொடுத்த போதெல்லாம் அமைதியாக எனக்கு எந்த சாயமும் பூசாமல் இருந்தவர்கள் காடுவெட்டி குரு அவர்கள் பற்றியும் ஒரு சமுதாயத்தை பற்றியும் தவறாக திரைப்படத்தில் காட்டிய போது அதற்கு எதிராக நான் நியாயமான கேள்விகளை எழுப்பியவுடன் என் மீது சாதி சாயம் பூசினார்கள். அந்த சமயத்தில் கௌதமன் கேட்டதில் என்ன தவறு என்று எனக்குத் தெரிந்த ஒரு ஊடக நண்பர், அப்படத்தின் இயக்குநரிடம் கேட்டபோது நான் தான் தாதா போன்று ரவுடி போன்று காட்டிவிட்டேன், வேண்டுமானால் ‘சந்தனக்காடு’ எடுத்தது போன்று குரு அவர்களை வாழ்க்கையை பற்றியும் கௌதமன் ஒரு படம் எடுக்கட்டுமே என்று கூறியுள்ளார். அந்த சவாலை ஏற்று தான் இந்த படமே தொடங்கியது. இது தனி சாதி படமல்ல, தமிழ் சாதி படமாக இருக்கும். சாதி, மதம் கடந்து மனிதனாக இருப்பவர்கள் யார் பார்த்தாலும் அரங்கம் மட்டுமல்ல அவர்கள் ஆன்மாவும் அதிரும், அறம் சார்ந்த ஒரு மாவீரனை அவர்கள் தரிசிப்பார்கள்.அனைவரும் ஆதரவு தாருங்கள், நன்றி,” என்றார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், “தம்பி கெளதமன் மிகுந்த‌ உரிமையாக அழைத்ததால் வெளியூரில் இருந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளேன், அதனால் ஏற்பட்ட தாமதத்திற்கு மன்னிக்கவும்.உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவன் மாவீரன் பிரபாகரன் என்று பேசியவர் அண்ணன் காடுவெட்டி குரு . அப்படிப்பட்ட காடுவெட்டி குரு வாழ்க்கையை தான் தம்பி கௌதமன் ‘படையாண்ட மாவீரா’ என்று வீரமும் அறமும் சுமந்த படைப்பாக எடுத்துள்ளார். கெளதமனின் படைப்பாற்றலை நாம் ஏற்கனவே கண்டுள்ளோம். ‘சந்தனக்காடு’, ‘மகிழ்ச்சி’ அவர் திறமைக்கான சான்றுகள். அவரின் அடுத்த படைப்பான‌ ‘படையாண்ட மாவீரா’ மிகவும் அருமையாக வந்துள்ளது. இதை திரைப்படமாக மட்டும் சுருக்கிவிட முடியாது. மிகுந்த உழைப்பு, சிரமத்திற்கு பிறகு இப்படம் உருவாகியுள்ளது. முன்னோட்டத்தையும், பாடல்களையும் பார்த்தேன், மிகச்சிறப்பு, படத்தை பார்க்க தூண்டுகின்றன. ‘படையாண்ட மாவீரா’ மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்,” என்றார்.

error: Content is protected !!