வேலைவாய்ப்பு 2026: டிகிரி முக்கியம் இல்ல.. அனுபவம் தான் ‘கெத்து’!
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் வேலை கிடைப்பது என்பது முன்பை விட இப்போது பெரும் சவாலாக மாறியுள்ளது. ஒரு காலத்தில் பட்டயப்படிப்பு முடித்த கையோடு வேலை கிடைத்த நிலை மாறி, இன்று ‘அனுப்புவம்’ (Experience) என்பது தவிர்க்க முடியாத தகுதியாக உருவெடுத்துள்ளது.
எகிறும் அனுபவத் தேவை
லிங்க்ட்இன் (LinkedIn) தரவுகளின்படி, இந்தியாவில் டாப் நிறுவனங்களில் பணியாற்றுவதற்குத் தேவைப்படும் சராசரி அனுபவக் காலம் 2016-இல் 1.8 ஆண்டுகளாக இருந்தது. ஆனால், 2025-இல் இது 3.7 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. அதே சமயம், ஆரம்பநிலை வேலைவாய்ப்புகள் (Entry-level hiring) 46.3 சதவீதத்திலிருந்து 41.6 சதவீதமாகக் குறைந்துள்ளன.

ஏன் இந்த மாற்றம்? “செயற்கை நுண்ணறிவு (AI) வருகைக்குப் பின், நிறுவனங்கள் மிக வேகமாகச் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. எனவே, பயிற்சி அளிக்கத் தேவைப்படும் காலத்தைக் குறைத்து, பணியில் சேர்ந்த முதல் நாளே ஆக்கப்பூர்வமாகச் செயல்படக்கூடிய அனுபவம் வாய்ந்தவர்களுக்கே நிறுவனங்கள் முன்னுரிமை அளிக்கின்றன” என்கிறார் CIEL HR நிறுவனத்தின் சி.இ.ஓ ஆதித்யா மிஸ்ரா.
பட்டங்களுக்குப் பதில் போர்ட்ஃபோலியோ
கிளவுட் கம்ப்யூட்டிங், டிஜிட்டல் மார்க்கெட்டிங், UI/UX டிசைன், சைபர் செக்யூரிட்டி மற்றும் டேட்டா அனலிட்டிக்ஸ் போன்ற துறைகளில் இப்போது பாரம்பரியப் பட்டங்களை விட, ஒருவரின் நேரடித் திறமை, சான்றிதழ்கள் மற்றும் அவர் செய்துள்ள புராஜெக்ட்கள் (Portfolios) மட்டுமே முக்கியமாகக் கருதப்படுகின்றன.
வேலையில்லாத் திண்டாட்டமும் கசப்பான உண்மையும்
‘அன்ஸ்டாப் டேலண்ட் ரிப்போர்ட் 2026’ (Unstop Talent Report) அதிர்ச்சிகரமான தகவல்களைப் பகிர்ந்துள்ளது:
-
சுமார் 88% நிறுவனங்கள் ஆட்களைத் தேர்வு செய்வதாகக் கூறினாலும், நடைமுறையில் வேலைவாய்ப்பு பெறுவோர் எண்ணிக்கை மிகக் குறைவு.
-
எம்.பி.ஏ (MBA) மாணவர்களில் 26% பேரும், பொறியியல் மாணவர்களில் 15% பேரும் மட்டுமே வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
-
சுமார் 70% முதல் 85% வரையிலான பட்டதாரிகள் வேலையில்லாமல் இருக்கும் சூழலில், இளங்கலை (UG) மாணவர்களே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரஷ்ஷர்கள் (Freshers) ஜெயிக்க வழி என்ன?
சவால் நிறைந்த இந்தச் சந்தையில் புதிய பட்டதாரிகள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள சில முக்கியத் தகுதிகள் அவசியமாகின்றன:
-
தொழில்நுட்ப வேகம்: புதிய மென்பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களை மின்னல் வேகத்தில் கற்றுக் கொள்ளும் திறன்.
-
நெகிழ்வுத்தன்மை (Agility): மாறிவரும் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளுதல்.
-
கூட்டுப்பணி (Teamwork): AI சார்ந்த திட்டங்கள் அனைத்தும் பல்துறை சார்ந்தவை என்பதால், மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றும் திறன் மிக முக்கியம்.
இருப்பினும், ஒரு சில பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இப்போதும் புதியவர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு AI சார்ந்த பயிற்சிகளை அளித்து எதிர்காலத் தேவைக்காகத் தயார்படுத்தி வருகின்றன என்பது ஒரு சிறிய ஆறுதல்.


