ஈரான்:-ஜனாதிபதி ஒரு மிதவாதம் போற்றும் தலைவர்தான்!

ஈரான்:-ஜனாதிபதி ஒரு மிதவாதம் போற்றும் தலைவர்தான்!

ரானின் ஜனாதிபதிக்கான மறு தேர்தலில் மசூத் பெசெஷ்கியன் வெற்றி பெற்றிருக்கிறார். இவர் ஒரு இதய அறுவை சிகிச்சை நிபுணர். ஈரான் ஈராக் போரில் ராணுவ டாக்டராக பங்களித்தவர். 1999ல் மொஹம்மது கடாமி தலைமையில் அமைந்த முதல் மிதவாத அரசில் சுகாதாரத் துறை அமைச்சராக பணியாற்றியவர். இவரே ஒரு மிதவாதம் போற்றும் தலைவர்தான். மேற்கு நாடுகளுடன் நட்புணர்வைப் பேணி ஈரான் மீதான பொருளாதாரத்தடைகளை நீக்க வேண்டும் என்பது இவரது கொள்கைகளில் ஒன்று. இதற்காக ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தையும் சமரசம் செய்து கொள்வார் என்று தெரிகிறது. பொருளாதார சுதந்திரத்தை மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்பவர். ஈரானின் பண வீக்கம் 40 சதவிகிதமாக உள்ள நிலையில் இவரது இந்த முயற்சிகள் வெற்றி பெற்றால் ஈரானின் பொருளாதாரம் முன்னேறும். வறுமை குறையும்.

அதை விட முக்கியமாக மத நியமங்கள் விஷயத்திலும் இவர் மிதவாதப் போக்கைக் கடைப்பிடிப்பவர். ஹிஜாப்பை சரியாகப் போடவில்லை என்ற குற்றத்துக்காக (!) மஹ்சா அமினி கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடியில் இறந்து போன பின்னர் கடும் போராட்டங்கள் எழுந்தன. அப்போது பழமைவாதிகளுக்கும் மதவாதிகளுக்கும் எதிராக ஷேர்வின் ஹாஜிபோர் என்பவர் எழுதிய விடுதலைப் பாடல் ஒன்று பெரும் பிரசித்தி பெற்றது. மாற்றம் விரும்பும் இளைஞர்களுக்கு அப்போது அது தேசிய கீதமாக மாறியது. அந்த ஷேர்வின் கூட தற்போது சிறையில்தான் உழன்று கொண்டிருக்கிறார். அதே பாடலை பெசெஷ்கியன் தனது பிரச்சாரத்துக்கு பயன்படுத்தி இருக்கிறார் என்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது.

ஆனால் எந்த அளவுக்கு மத சீர்திருத்தங்களை இவர் கொண்டு வர முடியும் என்பது விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. மத நியமங்களை அமுல்படுத்தும் ‘கலாச்சாரப் போலீஸ்’ ஜனாதிபதியின் வசம் இல்லை. அது ‘பெருந்தலைவர்’ எனப்படும் ஆயதொல்லா கமேனியிடம் இருக்கிறது. அவரே ஒரு மதத் தலைவர்தான் என்பதால் மதக் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வருவதை விரும்ப மாட்டார். ‘சீர்திருத்தப் பாடலை ஒலிக்க விடுவது வேறு. சீர் திருத்தங்களைக் கொண்டு வருவது வேறு; அதை செய்யும் அதிகாரத்தில் இல்லாதவர் எதற்கு அந்தப் பாடலை பயன்படுத்த வேண்டும்,’ என்று ஈரானின் மதவாதிகள் பெசெஷ்கியனைக் கிண்டல் செய்து வருகிறார்கள்.

எது எப்படியோ, குறைந்த பட்சம் முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் ரயிசி போல கல் நெஞ்சம் கொண்டவராக இல்லாமல் கொஞ்சமே கொஞ்சம் நவீன மனித உரிமைகளைக் குறித்து கவலைப்படும் ஒருவர் தலைமைக்கு வந்திருப்பது ஆறுதல் அளிக்கும் விஷயம். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குரூரக் கோமாளி டிரம்ப் வெற்றி அடையாமல், டெமாக்ரடிக் கட்சியின் வேட்பாளர் வென்றால் ஈரான் அமெரிக்க உறவில் மாற்றங்கள் தோன்றலாம். அது ஈரானின் பொருளாதாரம் மேம்பட உதவும். கூடவே கொஞ்சம் கொஞ்சமாக தன் குறை அதிகாரத்தை வைத்து இந்தக் ‘கலாச்சாரக் காவல் துறை’ எனும் ஏழாம் நூற்றாண்டு அவலத்துக்கு ஒரு முடிவு கட்டும் திசையில் உழைக்கத் துவங்கினால் ஈரானியப் பெண்களின் நிலை மேம்படும்.

இவற்றை எல்லாம் தன் வாழ்நாளிலேயே சாதித்து உலக வரலாற்றில் நிலையான இடம் பெற மசூத் பெசெஷ்கியன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

– ஸ்ரீதர் சுப்ரமணியம்

error: Content is protected !!