குழந்தை அழும் கால அளவு அதிகரிக்கிறதா?

குழந்தை அழும் கால அளவு அதிகரிக்கிறதா?

குழந்தை வளர்ப்பில், கைக்குழந்தையைக் கையாள்வது ஒவ்வொரு தாய்க்கும் சவாலான விஷயம்தான். அதிலும் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தை அதிகமாக அழும்போது, அது எதற்காக அழுகிறது, என்ன செய்தால் அழுகை நிற்கும் எனத் தெரியாமல் திகைக்கிற தாய்மார்தான் அதிகம். கைக்குழந்தையைப் பொறுத்தவரை ‘அழுகை’என்பது ஒரு மொழி. தாயின் கவனத்தைத் தன் மீது ஈர்ப்பதற்குப் பயன்படுத்தும் எளிய வழி. பசி, தாகம், தனிமை, களைப்பு போன்ற சாதாரணக் காரணங்களால் குழந்தை தினமும் மொத்தத்தில் சுமார் ஒரு மணி நேரம் அழுவது இயல்பு. இந்தக் கால அளவு அதிகரித்தால் அல்லது குழந்தை தொடர்ந்து அழுகிறது என்றால், அதைக் கவனிக்க வேண்டும்.

பசிக்கு அழும் குழந்தை!

குழந்தை பசிக்காகத்தான் அழுகிறது என்பது பல தாய்மாரின் முதன்மைக் கணிப்பு. இது பெரும்பாலும் உண்மைதான் என்றாலும், பசியையும் தாண்டிப் பல காரணங்களால் குழந்தை அழக்கூடும்.

குழந்தை பசிக்காகத்தான் அழுகிறதா என்பதை உறுதிசெய்ய, தாயானவர் தன் விரலை நன்றாகச் சுத்தப்படுத்திக் கொண்டு, குழந்தையின் வாய்க்குள் வைத்தால், உடனே குழந்தை விரலைச் சப்பத் தொடங்கிவிடும். இதன் மூலம் குழந்தை பசியால் அழுகிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். பொதுவாக, குழந்தை போதிய அளவு பால் குடித்த பின்னர், இரண்டு மணி நேரத்துக்குள் அழுதால், அது நிச்சயம் பசிக்காக இருக்காது. வேறு காரணத்தால் அது அழக்கூடும்.

பசிக்கு அடுத்தபடியாகத் தாகம் எடுத்தால் குழந்தை அழும். உதாரணமாக, திட உணவு சாப்பிடும் குழந்தைக்குச் சில தாய்மார் உணவைக் கெட்டியாகப் பிசைந்து கொடுத்துவிடுவார்கள். இதனால் உணவு விக்கிக்கொள்ளும். குழந்தைக்குத் தாகம் எடுக்கும். இதனால் சாப்பிட்ட பிறகு குழந்தை அழும். அப்போது கொஞ்சம் தண்ணீரைக் கொடுத்தால், குழந்தையின் அழுகை நின்றுவிடும்.

பால் குடித்த பிறகு சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது போன்றவற்றால் உள்ளாடை, படுக்கை போன்றவை ஈரமாகி விடும்போது, அதைத் தெரியப்படுத்தவும் குழந்தை அழும். குழந்தை இரவில் அழுவதற்குப் பெரும்பாலும், இதுதான் காரணமாக இருக்கும். ஈரமான துணியை மாற்றிவிட்டால் அழுகை நிற்கும்.

ஆடைகளில் கவனம்!

அதிகக் கனமான ஆடைகள், இறுக்கமான ஆடைகள், உறுத்துகிற ஆடைகள் மற்றும் கால் கொலுசு, கழுத்து செயின், இடுப்பு ஆபரணங்கள் ஆகியவற்றாலும் குழந்தை அடிக்கடி அழலாம். பருத்தி நூலில் தயாரிக்கப்பட்ட `டயபரு’க்குப் பதிலாக, நாகரிகம் என்ற பெயரில் இப்போது செயற்கை இழையில் தயாரிக்கப்பட்ட `டயபரை’த்தான் குழந்தைக்குப் பெரும்பாலும் அணிவிக்கிறார்கள்.

அதிலும் `டயபர்’ என்பது அவசரத் தேவைக்கு என்பது போய், இப்போது எந்த நேரமும் அணிவிக்கப்படும் ஓர் உள்ளாடையாக அது மாறிவிட்டது. இதனால் ஒவ்வாமை ஏற்பட்டு, குழந்தைக்கு அரிப்பும் தடிப்பும் உண்டாகின்றன. இதன் காரணமாகவும் குழந்தைகள் அடிக்கடி அழுவதுண்டு.

பூச்சி கடித்தால்?

தன்னுடைய உடலில் ஏதேனும் புதிதாக ஊர்வது போல் உணர்ந்தால், அப்போது குழந்தை அழலாம். எறும்பு, கொசு, பூச்சி, பேன் கடித்தாலோ, சருமம் அரித்தாலோ குழந்தை அழும். புட்டிப்பாலில் சர்க்கரை கலந்து குழந்தைக்குக் கொடுக்கும்போது, அதில் சில சொட்டுகள் வாய் ஓரத்தில் ஒழுகியிருக்கும். சர்க்கரை வாசனைக்கு வரும் எறும்பு கடித்துவிடும். அப்போது குழந்தையின் சருமத்தில் ஒவ்வாமை ஏற்பட்டுச் சிவந்த தடிப்புகள் ஏற்படலாம்.

சில நேரம், ஒவ்வாமை குழந்தையின் குரல் நாணையும் தாக்கியிருந்தால், சருமத் தடிப்புகளோடு சரியாக மூச்சுவிட முடியாமல் குழந்தை அழும். அப்போது குழந்தையின் குரலும் மாறுபட்டிருக்கும்.

வயிற்று வலி – காது வலி

குழந்தைக்கு வயிற்று வலியும் காது வலியும் ஏற்படுவது மிகவும் சகஜம். குழந்தை தன்னுடைய தொடையை வயிற்றில் மடித்து வைத்துக்கொண்டு அழுதால், அதற்கு வயிற்றில் வலி இருக்கிறது என்று புரிந்துகொள்ளலாம்.

குழந்தைக்கு அளவுக்கு அதிகமாகப் பால் அல்லது திட உணவைக் கொடுத்துவிட்டால், வயிறு உப்பி அழ ஆரம்பிக்கும். இதுபோல் உணவுடன் அதிகக் காற்று வயிற்றுக்குள் சென்றுவிட்டாலும், குழந்தை அழும். தாய்ப்பால் கொடுத்து முடித்தவுடன், ஒவ்வொரு முறையும் குழந்தையைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு அதன் முதுகைத் தட்டிக் கொடுக்க வேண்டும். இதனால் குழந்தையின் வயிறு தாயின் தோளில் அழுந்திக் காற்று வெளியேறிவிடும். குழந்தையும் அழுவதை நிறுத்திவிடும்.

சில வேளை குழந்தைக்குக் குடல் சொருகிக்கொள்ளும். இதனால் குழந்தைக்கு வயிறு வீங்கி, வலி தாங்க முடியாமல் தொடர்ந்து அழும். அப்போது மலத்தில் ரத்தம் போகும். கூடவே வாந்தியும் வரும். உணவு ஒவ்வாமை காரணமாகவும் வயிற்றில் வலி வந்து குழந்தை அழும்.

காதின் உட்பகுதியில் செவிப்பறைக்குப் பின்னால் சீழ் இருக்கும்போது குழந்தைக்குக் காது வலிக்கும். அப்போது காதுப் பகுதியைத் தொட்டால், அதிகமாக அழும். செவிப்பறையில் சீழின் அழுத்தம் அதிகமாகி அதில் துளை விழுந்து, வெளிக்காதின் வழியாகச் சீழ் வடிந்துவிட்டது என்றால், காது வலி குறைந்துவிடும். இதன் பிறகு குழந்தை அழாது.

சளி, ஜலதோஷம், வயிற்றுப்போக்கு

சளி, மூக்கு ஒழுகல், மூக்கு அடைப்பு, காய்ச்சல், தலைவலி, உடல் வலி, இளைப்பு, நெஞ்சில் வலி, சிறுநீர்க் கடுப்பு, மலச் சிக்கல், வாந்தி போன்ற காரணங்களாலும் குழந்தை அழக்கூடும். இந்த மாதிரி நேரங்களில் குழந்தை பால் குடிக்காது; தொடர்ந்து அழுவது, வீறிட்டு அழுவது, உடலை முறுக்கி அழுவது என்று அழுகைச் சத்தம் வேறுபடும்.

வயிற்றுப்போக்கு காரணமாகக் குழந்தைக்கு வயிற்றில் வலி வந்து அழும் அல்லது உடலில் நீர்ச்சத்து அதிகமாக வெளியேறி, தாகம் அதிகரித்து நாக்கு வறண்டு அழுவது வழக்கம். மருத்துவரைப் பார்ப்பதற்குள் சிறிது உப்புச் சர்க்கரைக் கரைசலைத் தண்ணீரில் கலந்து குழந்தைக்குக் கொடுத்தால், அழுகை நின்றுவிடும்.

குழந்தைக்குக் குளிர் அடித்தாலும் அழும். புழுக்கமாக இருந்து உடல் வியர்த்தாலும் அழும். வாஷிங் மெஷின், வாக்குவம் கிளீனர், ஹேர் டிரையர் போன்றவற்றின் சத்தம் பிடிக்காமல் குழந்தை அழலாம். இந்தப் பிரச்சினைகளைச் சரி செய்தால் மட்டுமே குழந்தையின் அழுகை நிற்கும்.

பால் பற்கள் ஒவ்வொன்றாக முளைக்கத் தொடங்கும்போது குழந்தை அழும். சில மருந்துகளின் பக்க விளைவால் வயிற்றைப் புரட்டும்; வாந்தி வருவது போலிருக்கும். இதனாலும் குழந்தை அழலாம்.

தூக்கும்போது கவனம்!

ஆறு மாதங்கள் வரையிலும் குழந்தையின் தலை நிற்காதபோது, கழுத்துப் பகுதியை நல்ல பிடிமானம் கொடுத்துத்தான் தூக்க வேண்டும். இல்லையென்றால், குழந்தைக்குக் கழுத்து சுளுக்கி வலி ஏற்படும். அப்போது தொடர்ச்சியாக அழும். இதற்குச் சுளுக்கு எடுக்கிறேன் என்று சுய மருத்துவம் செய்யக் கூடாது. உரிய மருத்துவரை அணுகித் தகுந்த சிகிச்சையைப் பெற்றுக்கொண்டால் மட்டுமே சரியான தீர்வு கிடைக்கும்.

களைப்பும் உறக்கமும்

குழந்தை தொடர்ச்சியாக அழுவதற்குக் களைப்பு ஒரு முக்கியக் காரணம். எந்த நேரமும் குழந்தையைத் தூக்கிவைத்துக் கொஞ்சுவது, விளையாடுவது, தொட்டிலில் போட்டு ஆட்டுவது, உறவினர் படையெடுப்பு போன்றவற்றால் குழந்தை களைத்துவிடும். இதனாலும் அழும். இந்தப் பழக்கங்களைக் குறைத்துக்கொண்டால் குழந்தை அழுவதும் குறையும்.

குழந்தைகளுக்குப் பொழுதுபோகாதபோது, தனியாக இருக்கும்போது, விளையாடத் துணை கிடைக்காதபோது, தன்னை யாரும் கவனிக்கவில்லை என்று நினைக்கும்போது… இப்படிப் பல சந்தர்ப்பங்களில் குழந்தைகள் அழும். அப்போது குழந்தையைக் கைகளில் தூக்கி வைத்துக்கொண்டாலேயே அழுகையை நிறுத்திவிடும். அல்லது, குழந்தையுடன் பேசி, சேர்ந்து விளையாடி, சிரிப்பூட்டினால் அழுகை நிற்கும்.

பொம்மை, பந்து என்று வயதுக்கு ஏற்ற விளையாட்டுப் பொருட்களைக் கையில் கொடுத்துவிட்டால் குழந்தை அழுவதை நிறுத்திவிடும். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தையாக இருந்தால் சிறிது நேரம் காரில்/இரண்டு சக்கர வாகனத்தில் பாதுகாப்பாக வெளியே அழைத்துச் செல்லலாம்.

குழந்தைக்கு உறக்கம் வந்தால்கூட, சிறிது நேரம் அழும். அப்போது தாலாட்டுப் பாடி உறங்க வைப்பதுதான் ஒரே தீர்வு. ஆனால், இன்றைக்கு எத்தனை இளம் தாய்மாருக்குத் தாலாட்டுப் பாடத் தெரியும்? இதற்கும் ஒரு வழி இருக்கிறது. செல்போனில் தாலாட்டுப் பாடல்களைப் பதிந்துகொண்டு, இம்மாதிரி நேரங்களில் போட்டுவிட்டால், அதைக் கேட்டுக்கொண்டே குழந்தை உறங்கிவிடும்.

டாக்டர்.செந்தில் வசந்த்

error: Content is protected !!