பார்லிமெண்ட் கூட்டத்தொடர்!- எப்படி நடத்தலாம் என்று ஆலோசனை!

பார்லிமெண்ட் கூட்டத்தொடர்!- எப்படி நடத்தலாம் என்று ஆலோசனை!

நாடெங்கும் கோர ஆட்சி செய்து மக்களைக் கொடுமையாகக் கொலை செய்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவலுக்கு இடையே நடத்த வேண்டிய பாராளுமன்ற கூட்டத்தொடரை எப்படி நடத்துவது என்று இரு அவைகளின் தலைவர்களும், அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்திய பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், ஜூலை மாதம் நடப்பது வழக்கம். அதே கால அட்டவணைப்படி, கூட்டத்தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா பரவலுக்கு இடையே கூட்டத்தொடரை எப்படி நடத்துவது என்பது பற்றி விவாதிக்க மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் இணைந்து ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தினர். அதில், இரு அவைகளின் செயலாளர்களும் பங்கேற்றனர்.

கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளின்படி, தனிமனித இடைவெளியை பின்பற்றி, ஒரு மீட்டர் இடைவெளி விட்டே எம்.பி.க்கள் அமர வைக்கப்பட வேண்டும். அப்படி அமர வைத்தால், மக்களவையில் 100 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 60 எம்.பி.க்களும் மட்டுமே அமர முடியும் என்று இரு அவைகளின் செயலாளர்களும் தெரிவித்தனர். பார்வையாளர் மாடத்திலும் எம்.பி.க்களை அமர வைத்தால் கூட எல்லோருக்கும் இடம் கிடைக்காது என்று அவர்கள் தெரிவித்தனர்.

பாராளுமன்ற மைய மண்டபத்திலோ அல்லது விஞ்ஞான் பவன் அரங்கத்திலோ பாராளுமன்ற கூட்டத்தொடரை நடத்தினால் கூட இடவசதி போதாது என்று அவர்கள் எடுத்துரைத்தனர். அப்படியே அங்கு நடத்தினாலும், ஏ.சி. வசதியோ, உடனுக்குடன் மொழி பெயர்ப்பு வசதியோ அங்கு செய்ய முடியாது என்றும் தெரிவித்தனர்.

எனவே, வேறு வழிமுறைகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் ஒன்றாக, முழுக்க முழுக்க ஆன்லைன் முறையில் கூட்டத்தொடரை நடத்துவது பற்றி பேசப்பட்டது. மற்றொரு வழிமுறையாக, பாதி எம்.பி.க்களை நேரடியாகவும், மீதி எம்.பி.க்களை ஆன்லைன் மூலமாகவும் பங்கேற்க வைக்கலாமா? என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

மற்றொரு வழிமுறையாக, அன்றாட அடிப்படையில், பல்வேறு அலுவல்களில் பங்கேற்க அவசியமான எம்.பி.க்கள் பட்டியலை தயாரித்து, அவர்களை மட்டும் அவரவர் அவைகளில் தனிமனித இடைவெளியுடன் பங்கேற்க செய்யலாமா? என்று பரிசீலிக்கப்பட்டது.

பாராளுமன்ற நிலைக்குழு கூட்டங்களை ஆன்லைன் முறையில் நடத்த வேண்டுமானால், விதிமுறை மாற்றங்கள் குறித்து அவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று இரு அவைகளின் செயலாளர்களும் சுட்டிக்காட்டினர். அவர்கள் கூறியதை கேட்ட ஓம் பிர்லாவும், வெங்கையா நாயுடுவும், ஆன்லைன் முறையில் கூட்டத்தொடரை நடத்துவதற்கான பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டனர்.