32°C
விளம்பரம்
Advertisement

இம்மார்ட்டல் விமர்சனம்!

admin Published: September 5, 2026 3 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


திரைப்படங்களில் சஸ்பென்ஸ் திரில்லரோடு ஃபேன்டசி கூறுகளை இணைத்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துவது ஒரு சுவாரஸ்யமான கலை முயற்சி. அந்த வகையில் அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா, இந்த இரண்டு வெவ்வேறான ஜானர்களை ஒன்றிணைத்து வெள்ளித்திரையில் ஒரு பெரிய மேஜிக் நிகழ்த்த முயன்றிருக்கிறார். ஆனால், சுவாரஸ்யமான தொடக்கத்தைத் தந்த இயக்குநர், போகப்போகக் காட்சிகளில் கோட்டைவிட்ட லாஜிக் மீறல்களால் அந்த மேஜிக் முயற்சி இறுதியில் பலனளிக்காமல் போய்விட்டது.

கதைக்களம்: ஐந்து ரூபாய் வாடகையும் மர்ம வீடும்

வாடகைக்கு வீடு தேடிக் கொண்டிருக்கும் பேச்சுலரான நாயகன் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு, ஒரு பெண்ணிடம் இருந்து அழைப்பு வருகிறது. தன் வீட்டில் இருக்கும் இரு அறைகளில் ஒன்றை வாடகைக்கு விட இருப்பதாகவும், விருப்பம் இருந்தால் பார்க்க வரும்படியும் கூறுகிறார். அதன்படி செல்லும் ஜி.வி.பிரகாஷ், வசதியான அடுக்குமாடி குடியிருப்புடன், வீட்டின் உரிமையாளரான கயாடு லோஹரின் அழகையும் கவர்ச்சியையும் பார்த்துச் சொக்கிப் போகிறார். யோசிக்காமல் உடனடியாகக் குடியேறும் ஜி.வி, கயாடு லோஹருக்குக் காதல் வலை விரிக்க, அவரும் அதற்குச் சம்மதிக்கிறார்.

இதற்கிடையே திடீரென்று அந்த வீட்டில் கயாடு லோஹரின் தாத்தா என்று ஒருவர் நடமாடுகிறார். அதைத் தொடர்ந்து வீட்டில் பல்வேறு மர்மங்கள் இருப்பதை உணரும் ஜி.வி.பிரகாஷ், அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார். ஆனால் அது முடியாமல் போவதோடு, வீட்டைப் பற்றிய பல திடுக்கிடும் உண்மைகளும் தெரியவருகின்றன. அவர் அங்கிருந்து தப்பித்தாரா, அந்த வீட்டின் பின்னணியில் உள்ள மர்மம் என்னன்பதே ‘இம்மார்ட்டல்’ படத்தின் கதையாகும்.

நடிப்பு மற்றும் கதாபாத்திரங்கள்

படத்தின் கதாநாயகனாக வரும் ஜி.வி.பிரகாஷ் குமாருக்குக் காமநெறி, திகில், குழப்பம், மர்மத்தை உடைக்கும் வெறி எனப் பல பரிமாணங்களைக் காட்டத் தாராளமான வாய்ப்புகள் அமைந்திருந்தன. ஆபத்தைச் உணர்ந்து அஞ்சுவது, பயத்தைப் மறைத்துக் கொண்டு தப்பிக்கப் போராடுவது என நடிப்பில் தனித்துவம் காட்டப் பெரிய களம் இருந்தும், வழக்கமான ஒரே விதமான பாவங்களையே மீண்டும் பிரதிபலித்து முழுமையாகக் கோட்டை விட்டிருக்கிறார்.

மறுபுறம் ‘அழகான ராட்சசி’ என்ற சொல்லிற்கு மிகக் கச்சிதமாகப் பொருந்திப் போகிறார் நாயகி கயாடு லோஹர். தனது வசீகரமான அழகாலும் தாராளக் கிளாமராலும் முதல் பாதியில் ரசிகர்களைக் கிறங்க வைக்கும் இவர், இரண்டாம் பாதியில் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பையும் திறம்பட வெளிப்படுத்திப் படத்திற்குப் பெரும்பலமாக மாறுகிறார்.

இதுவரை நகைச்சுவை வேடங்களில் மட்டுமே வந்துபோன டி.எம்.கார்த்திக், இதில் சற்றும் எதிர்பார்க்காத புதுமையான பாத்திரத்தில் தோன்றித் தன் நடிப்பால் கைதட்டல் பெறுகிறார். லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர், அர்ஷு மஹாராஜ், பேமா சாம்சோ, சுனிதா ஷ்ரேஷ்டா ஆகியோரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பங்களிப்பைச் செய்து திரைக்கதையின் நகர்வுக்குத் துணை நின்றுள்ளனர்.

தொழில்நுட்பக் கலைஞர்கள்: கேமரா ஒளிர்ந்தது, இசை சறுக்கியது!

தொழில்நுட்பப் பிரிவில் ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணனின் உழைப்பு பளிச்சிடுகிறது. கதையின் முக்கியத் தேவையான நாயகியின் கவர்ச்சியையும், காட்சிப் பதிவுகளின் காட்சி அழகையும் (VFX) தனக்கே உரிய பாணியில் நுணுக்கமாகப் படம்பிடித்துப் படத்திற்கு அழகியல் வடிவம் கொடுத்துள்ளார்.

ஆனால், இசையமைப்பாளர் சாம் சி.எஸ்ஸின் பங்களிப்பு ரசிகர்களுக்கு ஏமாற்றமே. நினைவில் நிற்கும் பாடல்கள் இல்லாத சூழலில், பின்னணி இசையிலாவது மிரட்டுவார் என்ற எதிர்பார்ப்பை ஹாலிவுட் பாணி நகல் இசையால் பாழாக்கியுள்ளார். குறிப்பாக, மர்ம உயிரினத்திற்கான பின்னணி இசையில் அசல் தன்மை இல்லாதது பலவீனம். அதேவேளையில், படத்தொகுப்பாளர் ராஜேஷ்.எம் திரைக்கதையின் தொய்வுகளைச் சீரமைக்கக் கடுமையாகப் போராடியிருப்பது ஒவ்வொரு காட்சியிலும் புலப்படுகிறது.

மொத்தத்தில்: பாதியில் உடைந்த சஸ்பென்ஸ்!

முதல் பாதியில் அடுக்கடுக்கான கேள்விகளுடன் சுவாரஸ்யமாகத் தொடங்கும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் சஸ்பென்ஸ் உடைக்கப்பட்ட பிறகு முற்றிலும் தன் சுவாரஸ்யத்தை இழந்து விடுகிறது. மர்மம் விலகிய பின் கதையை நகர்த்திய விதம் மற்றும் லாஜிக் மீறல்கள் பார்வையாளர்களின் பொறுமையைச் சோதிக்கின்றன. இறுதியாகப் படத்தை எப்படியாவது முடித்தாக வேண்டும் என்ற அவசரத்தில், ‘சப்பென்று’ கொண்டு வரப்பட்ட முடிவு படத்தின் மிகப்பெரிய பலவீனமாக மாறிப்போகிறது. சஸ்பென்ஸ் விரும்பிகளுக்கு முதல் பாதி திருப்தி தந்தாலும், ஒட்டுமொத்தமாக ஒரு முழுமையான ஃபேன்டசி-த்ரில்லர் அனுபவத்தைத் தரத் தவறிவிட்டது இந்த ‘இம்மார்ட்டல்’.

ரேட்டிங்: 2.25/5

உடனடி செய்திகள்