32°C
விளம்பரம்
Advertisement

‘7 ஸ்டார்ஸ்’ பாய்ஸ் -விமர்சனம்!

admin Published: September 4, 2026 2 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


ந்திய திரையுலகில் ஸ்போர்ட்ஸ் டிராமா என்றாலே வழக்கமாக பேட்டும் பந்துமாக கிரிக்கெட் மைதானங்களை மட்டுமே சுற்றிச் சுழலும். ஆனால், அந்த ஃபார்முலாவை உடைத்து, கேரள கிராமப்புறத்து ஏழைச் சிறுவர்களின் கால்பந்துப் பைத்தியத்தையும், அவர்களின் வாழ்வியல் போராட்டத்தையும் மிக எதார்த்தமான கோணத்தில் பதிவு செய்திருக்கிறது ‘7 ஸ்டார்ஸ்’.

பிஃபா காய்ச்சலும்… புழுதி பறக்கும் ஆத்தங்கரையும்!

கதையின் களம் 2018-ஆம் ஆண்டின் ஃபிஃபா உலகக்கோப்பை காலகட்டம். ஆத்தங்கரை என்ற எழில்மிக்க சிற்றூரில், உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி பெரும் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஊரே கால்பந்து போதையில் மிதக்க, 9 முதல் 14 வயதுக்குட்பட்ட ஏழு ஏழைச் சிறுவர்கள் மெஸ்ஸியையும் மரடோனாவையும் தங்கள் மனசாட்சியாகக் கொண்டு வாழ்கிறார்கள். காலணிகள் கூட இல்லாத வறுமைச் சூழல், சரியான விளையாட்டு உபகரணங்கள் இல்லை என்ற ஏளனம்—இவற்றுக்கு நடுவே ‘செவன் ஸ்டார் பாய்ஸ்’ என்ற அணியை உருவாக்கித் தெருக்களில் புழுதி பறக்கப் பந்தாடுகிறார்கள்.

இதே ஊருக்குத் திரும்பும் இஸ்மாயில் (ஆண்டனி வர்கீஸ்), கடந்த காலத்தில் இதேபோன்ற கால்பந்து கனவுகளைச் சுமந்து, உள்ளூர் சதியால் தன் லட்சியத்தையும் காதலையும் ஒரே நேரத்தில் இழந்து நிற்கும் ஒரு வீழ்ந்த நாயகன். இந்தச் சிறுவர்களின் கண்களில் தெரிய வெறியைப் பார்க்கும் இஸ்மாயில், அவர்களின் கனவுகளுக்கு சிறகு முளைக்க வைக்க முடிவு செய்கிறான். முன்னாள் இந்தியக் கால்பந்து வீரர் ஐ.எம். விஜயனைத் தேடிச் சென்று, சிறுவர்களுக்கு முறையான பயிற்சி கொடுக்க அழைக்கிறான்.

வறுமை, உள்ளூர் அரசியல், குடும்பங்களின் எதிர்ப்பு என அடுக்கடுக்கான முட்டுக்கட்டைகளைத் தாண்டி, இந்தச் சிறுவர்கள் மாவட்ட அளவிலான ஜூனியர் சூப்பர் லீக் தொடரில் முத்திரை பதித்தார்களா என்பதே இப்படக்கதை.

மிரட்டலான நடிப்பு மற்றும் ஆட்டக்களக் காட்சிகள்

ஆண்டனி வர்கீஸ் வழக்கமான அதிரடி நாயகன் பிம்பத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, தம்பிகளுக்கு வழிகாட்டும் அண்ணனாக மனதைக் கவர்கிறார். காதலியின் வீட்டில் புகுந்து செய்யும் அலப்பறையாகட்டும், சிறுவர்களுக்காக மைதானம் தேடி அலைவதாகட்டும்—மனிதர் மனிதநேயத்தில் ஸ்கோர் செய்கிறார்.

இரண்டாம் பாதியில் என்ட்ரி கொடுக்கும் முன்னாள் இந்திய வீரர் ஐ.எம். விஜயன், நிஜ வாழ்க்கைப் பயிற்சியாளராகவே களமிறங்கி மாஸ் காட்டுகிறார். சிறுவர்களில் மெஸ்ஸி ரசிகனாக வரும் டேனிஷ் பி.கே மற்றும் கேப்டன் அமல் ஆகிய இருவரும் கேமராவிற்கு முன் காட்டும் துடிப்பும், பந்தை லாவகமாகக் கையாளுவதும் சர்வதேச தரம்.

திரைப்பின்னணியில் தொழில்நுட்ப மாயாஜாலம்

ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை, மைதானத்தின் ஒவ்வொரு நகர்வையும் பார்வையாளர்களின் இதயத் துடிப்பாக மாற்றுகிறது. ஃபயஸ் சித்திக்கின் கேமரா, கிராமத்து பசுமையையும் மைதானத்தின் பரபரப்பையும் மிக நேர்த்தியாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

இயக்குநர் நிகில் பிரேம்ராஜ், உணர்ச்சிப்பூர்வமான ஒரு கதையை எந்தவிதச் செயற்கைத்தனமும் இல்லாமல், நேர்த்தியாக வடிவமைத்துள்ளார். குறிப்பாக, இறுதிப் போட்டியின் நிமிடங்கள் ஒவ்வொன்றும் பார்வையாளர்களின் நாடித் துடிப்பை எகிற வைக்கும் ரகம்.

மொத்தத்தில் ‘7 ஸ்டார்ஸ்’—குடும்பத்துடன் சென்று பார்த்து, கைதட்டி மகிழக்கூடிய ஒரு அருமையான திரைப் படைப்பு.

ரேட்டிங்: 3.75/5

உடனடி செய்திகள்