32°C
விளம்பரம்
Advertisement

‘டோரதி’ OST சர்ப்ரைஸ்: இளையராஜா – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியின் புதிய சாதனை!

admin Published: September 4, 2026 4 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


யக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு புதிய மைல்கல்லை எட்டவுள்ளது. படத்தில் இடம்பெற்ற “கல்யாண விருந்து…” மற்றும் “முத்துமணி..” ஆகிய இரண்டு பாடல்களும் இணையதளங்களிலும் குடும்ப நிகழ்வுகளிலும் அசுர ஹிட் அடித்துள்ள நிலையில், படம் வெளியாவதற்கு முன்பாகவே பின்னணி இசை தொகுப்பை (OST) பிரமாண்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

திரையுலகில் முதன்முறை: நேரலை சிம்பொனியாக வெளியாகும் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்

பொதுவாகத் திரைப்படங்கள் வெளியான பிறகே பின்னணி இசைத் தொகுப்பு வெளியாவது வழக்கம். ஆனால், இசைஞானி இளையராஜாவின் யோசனைப்படி செப்டம்பர் 5 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் பிரமாண்ட இசை நிகழ்ச்சியில், ‘டோரதி’ படத்தின் பின்னணி இசைத் தொகுப்பு நேரடியாக வெளியிடப்படுகிறது.

இது குறித்துப் பேசிய கார்த்திக் சுப்புராஜ், “ராஜா சார் படம் பார்த்து முடித்த உடனே, இந்த படத்தின் பின்னணி இசை தொகுப்பை படம் வெளியாவதற்கு முன்பாகவே வெளியிடலாம் என்றார். பாடல்கள் வெளியீட்டை எப்படி வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், ஆனால் சவுண்ட் ட்ராக்கை நேரடியாக வெளியிடலாம் என்ற யோசனையைக் கூறினார். அப்படியானால் வினைல்லையும் வெளியிடலாம் என்று நான் கேட்டுக்கொண்டேன்.

அப்படி தான் இந்த ஐடியா உருவானது. மொத்தம் 40 நிமிடங்கள் ஒலிக்க கூடிய ஒரு நிகழ்வாக இது இருக்கும். சிம்பொனி போல் படத்தின் பின்னணி இசையை ராஜா சார் நேரடியாக இசைக்க இருக்கிறார். இது ஒரு படத்தின் நிகழ்ச்சியாக பார்க்காமல், ராஜா சாரின் இசையை அனுபவிக்கும் நிகழ்வாக இருக்க வேண்டும்” என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

மதுரை வாழ்வியலும் ஆறு ஆண்டு காலத் திரைக்கதை உழைப்பும்

தன் திரைப்பயணத்தின் 10-வது படமாக ‘டோரதி’ அமைந்திருந்தாலும், ‘பீட்சா’ படத்தின் போது இருந்த அதே பதற்றத்துடனும் ஆர்வத்துடனும் இருப்பதாகக் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். மதுரையில் தான் வாழ்ந்த நாட்களையும், அங்கிருந்த மனிதர்களையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு பர்சனலான கற்பனைக் கதை இது. சிறுவயது நண்பர்களான இரு இளைஞர்களின் வாழ்க்கையில் ஒரு பெண் வந்த பிறகு நடக்கும் சுவாரஸ்யமான திருப்பங்களே படத்தின் கருவாகும்.

எழுத்தாளர் சரவணன் சந்திரனுடன் இணைந்து 6 முதல் 7 முறை திரைக்கதையை மாற்றி அமைத்து, பல ஆண்டுகள் கழித்தே இப்படத்தை அவர் உருவாக்கியுள்ளார். ‘மகான்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ மற்றும் சூர்யாவுடனான ‘ரெட்ரோ’ போன்ற படங்களால் தள்ளிப்போன இக்கதையை, “இப்போது பண்ணவில்லை என்றால் எப்போதும் பண்ண முடியாமல் போய்விடும்” என்ற கட்டாயத்தில் உடனடியாகத் தொடங்கியதாகக் கூறுகிறார்.

டொரொண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் வேர்ல்ட் பிரீமியர்

உலகளாவிய பிக்-5 திரைப்பட விழாக்களில் ஒன்றான டொரொண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (TIFF) செப்டம்பர் 11 ஆம் தேதி ‘டோரதி’ திரைப்படம் உலகளவில் முதன்முறையாகத் திரையிடப்பட தேர்வாகியுள்ளது.

ஆஸ்கார் விருது பெற்ற குனித் மோங்கா கபூரின் ‘ஷிக்யா எண்டர்டெயின்மெண்ட்’, தம்மம் பிலிம்ஸ் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம் குறித்துப் பேசிய இயக்குநர், “கதை எழுதி முடித்த உடனேயே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட வேண்டும் என்று முடிவு செய்தேன். இது எனக்கு முதல் அனுபவம் தான். சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்பதால் இது விழாக்களுக்கான படம் என்று நினைக்க வேண்டாம். நம்ம மக்களுக்கு ஏற்ற தியேட்டர் கொண்டாட்டங்கள், பாடல்கள் நிறைந்த படமாகவும், அதே சமயம் நம்ம கலாச்சாரம், வாழ்வியலை உலகளவில் எடுத்துச் செல்லும் படமாகவும் இருக்கும்” என்று தெளிவுபடுத்தினார்.

புதுமுக நடிகர்களின் அனுபவமும் ராஜா சாரின் அசாத்திய மேஜிக்

இப்படத்தில் மதுரை இளைஞர்களாக நடித்துள்ள புதுமுகங்களின் நடிப்பு குறித்து இயக்குநர் பேசுகையில், சனத் கதாபாத்திரத்திற்கு முதலிலேயே தேர்வாகிவிட்டதாகவும், ரிஷிகாந்த் ஆடிஷன் மூலம் தேர்வானதாகவும் தெரிவித்தார்.

தனது அனுபவம் குறித்துப் பேசிய நடிகர் ரிஷிகாந்த், “கார்த்திக் சுப்புராஜ் அண்ணன் படத்தில் நடித்தது கற்பனை கூட செய்து பார்க்க முடியாதது போல் இருக்கிறது. அதிலும், ராஜா சார் இசை, அவரது பாடலுக்கு நடித்தது என்ன நடக்கிறது என்று யோசிக்கும் அளவுக்கு பிரமிப்பாக இருக்கிறது” என்றார்.

நடிகர் சனத் பேசுகையில், “எனக்கு, ரிஷிகாந்த் மற்றும் கார்த்திக் அண்ணன் மூன்று பேருக்கும் இந்த படம் மிக முக்கியமான படம். எனவே, படம் வெளியான பிறகு படம் பற்றி விரிவாகப் பேசினால் நன்றாக இருக்கும்” என்று குறிப்பிட்டார்.

இளையராஜாவுடனான கூட்டணி குறித்துப் பேசிய கார்த்திக் சுப்புராஜ், “இந்த கதைக்கு அவர் தான் இசையமைக்க வேண்டும் என்று முன்பே முடிவு செய்தேன், ஆனால் அவரிடம் கேட்க தயக்கமாக இருந்தது. கதையை தயாரிப்பாளர்களுக்கு அனுப்பும் போதே இசை ராஜா சார் தான் என்று போட்டு அனுப்பினேன். படப்பிடிப்பை முடித்துப் பார்த்த பிறகு, ராஜா சாரிடம் காட்டினேன். அவர் பார்த்த உடன் மறுநாளே பணியை தொடங்கி விட்டார். கலையை அவரைப் போல் யாராலும் நேசிக்க முடியாது. ‘பேஷன்’ என்ற வார்த்தைக்கு சரியான நபர் அவர் தான்” என்று புகழாரம் சூட்டினார்.

திரு ஒளிப்பதிவில், கணேஷ் சிவா படத்தொகுப்பில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம், டொரொண்டோ விழாவில் திரையிடப்பட்ட பிறகு, வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

உடனடி செய்திகள்