இடியாப்பத்துக்கே வந்த சிக்கல்’: இனி விற்க FSSAI உரிமம்/கையுறை கட்டாயம்!

இடியாப்பத்துக்கே வந்த சிக்கல்’: இனி விற்க FSSAI உரிமம்/கையுறை கட்டாயம்!

மிழகத்தின் பெருநகரங்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் ‘இடியாப்பேம்ம்ம்…’ என்ற குரலைக் கடக்காதவர்களே இருக்க முடியாது. சைக்கிள் கேரியரில் பெரிய பாத்திரத்தைக் கட்டி வீதி வீதியாக விற்கப்படும் இந்த இடியாப்பத் தொழில், இன்று மிக முக்கியமான உணவுத் துறையாக வளர்ந்துள்ளது.அந்த வகையில் பிரியாணி கடைகளுக்கு இணையாக இடியாப்பம் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான கேள்விகளும் எழத் தொடங்கியுள்ளன. சில இடங்களில் இடியாப்பம் தயாரிப்பதும், அதை விற்பனை செய்வதும் முறையான சுகாதார விதிகளுக்கு உட்படாமல் நடைபெறுகிறது என்ற புகார்கள் உணவு பாதுகாப்புத் துறைக்கு சென்றுள்ள நிலையில்  இடியாப்பம் விற்பனை செய்ய உரிமம் கட்டாயம் என்று தமிழக உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

சங்க காலம் முதல் இன்று வரை: ஒரு வரலாற்றுப் பயணம்

இடியாப்பம் ஏதோ சமீபத்திய உணவு அல்ல; இது 1-ஆம் நூற்றாண்டிலேயே இந்தியாவில் புழக்கத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.

  • இலக்கியச் சான்றுகள்: ‘சூடாமணி நிகண்டு’, ‘பெரும்பானாற்றுப்படை’, ‘சிலப்பதிகாரம்’ மற்றும் ‘மதுரைக்காஞ்சி’ போன்ற சங்க இலக்கியங்களில் இடியாப்பம் பற்றிய குறிப்புகள் உள்ளன.

  • பெயர்க்காரணம்: ‘இடி’ என்றால் நெல்லிலிருந்து எடுக்கப்படும் மாவு. இந்த மாவைக் கொண்டு செய்யப்படும் அப்பமே ‘இடியாப்பம்’.

  • உலகப் புகழ்: கன்னடத்தில் ‘நூபுட்’, மலேசியாவில் ‘புட்டுமாயம்’ என அழைக்கப்படும் இது, இலங்கை வரை புகழ்பெற்ற உணவாகும்.

  • மூங்கில் பயன்பாடு: போர்ச்சுகீசியர்கள் இதைக் கொண்டு வந்ததாக ஒரு கருத்து இருந்தாலும், மூங்கில் தட்டுகளைக் கொண்டு சமைக்கும் முறை அவர்களுக்கு 19-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் தெரியும் என்பதால், இது தமிழர்களின் பூர்வீக உணவே என்பது உறுதியாகிறது.

‘இடியாப்பம்’: மருத்துவப் பலன்கள்

இடியாப்பம் எண்ணெய் சேர்க்காமல் ஆவியில் வேகவைக்கப்படுவதால், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.

ஊட்டச்சத்து மதிப்பு (ஒரு இடியாப்பத்தில்):

  • கலோரிகள்: 45 kcal

  • கார்போஹைட்ரேட்: 9.68 கிராம்

  • புரோட்டீன்: 0.72 கிராம்

  • கொழுப்பு: 0.27 கிராம்

சுகாதாரப் பலன்கள்:

  • செரிமானம்: எளிதில் செரிமானமாகும். வயிற்றுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

  • ஆயுர்வேதம்: உடலில் வாதம் மற்றும் பித்தத்தைச் சமநிலையில் வைக்க உதவும்.

  • சத்துக்கள்: கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் உடலைக் கட்டுக்கோப்பாக வைக்கும்.

பல்வேறு உடல்நலக் குறைபாடுகளுக்கான தீர்வுகள்:

  • ஜுரம்: இளஞ்சூடான நீருடன் சேர்த்து சாப்பிடலாம்.

  • வயிற்றுப்போக்கு: மோர் மற்றும் கல் உப்புடன் சேர்த்து உண்ணலாம்.

  • பசியின்மை: எலுமிச்சை அல்லது தக்காளி சேவையாகச் செய்து சுவைக்கலாம்.

  • கர்ப்பிணிகள்: தேங்காய்ப்பால், நெய், நாட்டுச்சர்க்கரை மற்றும் நட்ஸ் சேர்த்து உண்பது கூடுதல் வலு சேர்க்கும்.

கோதுமை இடியாப்பத்தின் சிறப்பு:

கோதுமையில் இடியாப்பம் செய்யும்போது பின்வரும் நன்மைகள் கிடைக்கின்றன:

  • நார்ச்சத்து: சீரான செரிமானத்திற்கு உதவுகிறது.

  • இதய ஆரோக்கியம்: கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இதய நோய் அபாயத்தைக் கட்டுப்படுத்தும்.

  • சர்க்கரை நோய்: ரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்கவும் உடல் எடையைக் குறைக்கவும் சிறந்தது.

  • சருமம்: இதில் உள்ள வைட்டமின்-ஈ சருமத்திற்குப் பொலிவைத் தரும்.

சத்துக்களும் சுவைகளும்

அரிசி மாவில் உப்பு, சிறிது எண்ணெய் சேர்த்து ஆவியில் வேகவைக்கப்படும் இடியாப்பம், மிகச்சிறந்த ஆரோக்கியமான காலை உணவு. தேங்காய்ப்பால், மீன் குழம்பு, ஆட்டுக்கால் பாயா அல்லது கேரள பாணியில் கொண்டைக்கடலை கிரேவியுடன் இது அபார சுவை தரும். இன்று தினை, வரகு, கம்பு போன்ற சிறுதானியங்களிலும் இடியாப்பம் செய்யப்பட்டு அதன் மகத்துவம் பெருகியுள்ளது.

உணவு பாதுகாப்புத் துறையின் புதிய அதிரடி உத்தரவு

இப்பேர்பட்ட இடியாப்ப விற்பனையை முறைப்படுத்தவும் சுகாதாரத்தைப் பேணவும் தமிழக உணவு பாதுகாப்புத் துறை புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது:

  1. கட்டாயப் பதிவு: தள்ளுவண்டி, சைக்கிள் அல்லது பைக்கில் சென்று விற்பனை செய்பவர்கள் அனைவரும் இனி உணவு பாதுகாப்பு உரிமம் (FSSAI Registration) பெற்றிருக்க வேண்டும்.

  2. சுகாதார முறைகள்: வியாபாரிகள் உணவு தயாரிக்கும் போதும், விற்கும் போதும் கட்டாயம் கையுறைகள் மற்றும் தலைக்கவசம் (Hairnet) அணிந்திருக்க வேண்டும்.

  3. தூய்மை: உணவு கொண்டு செல்லும் பாத்திரங்கள் மற்றும் வாகனங்கள் மிகவும் தூய்மையாகப் பராமரிக்கப்பட வேண்டும்.

  4. புதுப்பித்தல்: இந்த உரிமத்தை ஆண்டுக்கு ஒருமுறை முறையாகப் புதுப்பிக்க வேண்டும்.

சிறு வியாபாரிகளுக்கு நற்செய்தியும் ,கிடுக்குப்பிடியும்

இந்த உத்தரவு இடியாப்பம் மட்டுமல்லாமல், காய்கறிகள், பழங்கள், வடை, சமோசா, கேக் வகைகள், பஞ்சுமிட்டாய், அதிரசம், முறுக்கு, இட்லி மற்றும் தோசை மாவு, மிட்டாய் வகைகள், பழச்சாறு, ஊறுகாய், அப்பளம், மிக்சர், காரச்சேவு உள்ளிட்ட பாக்கெட்டுகளில் அடைத்து அல்லது உடனடியாக தயாரித்து நடந்து சென்றோ அல்லது வாகனங்களில் சென்றோ விற்பனை செய்யப்படும் அனைத்து உணவுப் பொருட்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த அறிவிப்பால் சிறு வியாபாரிகள் அஞ்சத் தேவையில்லை. இந்த உரிமத்தைப் பெற எவ்விதக் கட்டணமும் கிடையாது. ஆன்லைன் வாயிலாக இலவசமாகவே பதிவு செய்துகொள்ளலாம். எளிய முறையில் பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளதால், வியாபாரிகள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Related Posts

error: Content is protected !!