“எனக்கு கிடைக்கும் ஹீரோக்களைத்தான் ரஜினி கமலாக பார்க்கிறேன்” ; இயக்குனர் பூபதி பாண்டியன்!
கமர்ஷியல் படங்களை நூறு சதவீதம் நகைச்சுவை கியாரண்டியுடன் தரக்கூடியவர் தான் இயக்குனர் பூபதி பாண்டியன். இவர் வசனங்கள் எழுதிய வின்னர், கிரி ஆகிய படங்களின் காமெடி காட்சிகள் தான் இப்போதும் டாப் டென் காமெடிகளில் இடம்பிடித்திருக்கின்றன. அதேபோல இவர் இயக்கிய தேவதையையை கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம், மலைக்கோட்டை உள்ளிட்ட படங்களில் உணர்வுப்பூர்வமான காட்சிகளுடன் நகைச்சுவைக்கும் சரிவிகித முக்கியத்துவம் கொடுத்திருந்தார். அப்படிப்பட்டவரின் இயக்கத்தில் விமல் – ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘மன்னர் வகையறா’ படம், வரும் ஜன – 26 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பிரபு, சரண்யா பொன்வண்ணன், ரோபோ சங்கர், சாந்தினி, கார்த்திக் குமார், வம்சி கிருஷ்ணா, யோகிபாபு உள்ளிட்ட முக்கிய நட்சத்திர பட்டாளத்துடன் கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்தப்படம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார் இயக்குனர் பூபதி பாண்டியன்.
“மன்னர் வகையறா படம் தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளது. மூன்று குடும்பங்களுக்குள் இருக்கும் வீரம், பாசம் இவற்றை முன்னிலைப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது. சண்டையோ, அடிதடியோ அது எதுவானாலும் குடும்பத்தினர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக அதேசமயம் அனைத்தையும் பாசிடிவாகவே இதில் அணுகியிருக்கிறோம்..
இந்தக்கதையின் ஒன்லைனை உருவாக்கியதுமே இதில் விமல் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். முதலில் இதை தயாரிப்பாளர் மதனின் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்துக்காக உருவாக்கினாலும் விமலுக்கு இந்த கதை பிடித்துப்போனதால் தானே தயாரிப்பதாக முழு மனதுடன் முன் வந்தார். அதனாலேயே இந்தப்படம் முடியும் வரை வேறு படங்களை ஒப்புக்கொள்ளாமல் இதிலேயே முழு கவனத்தையும் செலுத்தினார். இது எனக்கும் தெரிந்தே நடந்ததால், அவரது இந்த முடிவு எனக்கு பயத்தை ஏற்படுத்தியது.. என் பொறுப்பு இன்னும் அதிகமானது. நம் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டுமே என இரட்டிப்பு உத்வேகத்தை தந்தது. அவரும் என் எதிர்பார்ப்பை முழுதாக நிறைவேற்றியுளார்.
தனுஷ், விஷால் என முன்னணி ஹீரோக்களை இயக்கியதற்கும் விமல் படத்தை இயக்கியதற்கும் என்ன வித்தியாசம் என பலர் கேட்கின்றனர். எந்த வித்தியாசமும் இல்லை. தனுஷை வைத்து நான் ‘தேவதையை கண்டேன்’ படம் இயக்கும்போது, அதற்குமுன் அவர் பயணித்து வந்த விதம் வேறாக இருந்தது. அப்போது அவர் ஒரு கமர்ஷியல் வட்டத்திற்குள்ளேயே இல்லை.. ‘ஆடுகளம்’ படம் வெளியாகி அவருக்கு தேசிய விருது கிடைத்திருந்த நேரத்தில் கூட, அவரே ஒரு பேட்டியின்போது, தான் நடித்த படங்களில் சிரமப்பட்டு நடித்தது என்றால் அது ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படம் என்றுதான் கூறியுள்ளார்.
என்னை பொறுத்தவரை எனக்கு யார் ஹீரோவாக கிடைக்கிறார்களோ அவர்கள் தான் எனக்கு ரஜினி, கமல் என சொல்லுவேன்.. அவர்களை எனக்கு, என் கதைக்கு ஏற்ற மாதிரி மாற்றிக் கொள்வேன். அந்த வகையில் தனுஷ், விஷால், போல இந்த ‘மன்னர் வகையறா’வுக்கு விமல் பொருத்தமாக இருந்தார். படம் பார்க்கும்போது ‘அட விமலை வேறு மாதிரி பயன்படுத்தியுள்ளாரே என நீங்களே சொல்வீர்கள். குறிப்பாக நீங்கள் இதுவரை பார்க்காத, விமலின் இன்னொரு பக்கத்தை இதில் பார்க்கலாம்.
இப்படி ஒரு குடும்ப படத்தை எடுப்பதற்கு முக்கிய காரணமும் உள்ளது. தெலுங்கில் மகேஷ்பாபு, பவன் கல்யாண், அல்லு அர்ஜுன் உட்பட முன்னணி நடிகர்கள் அனைவருமே தவறாமல் அவ்வபோது குடும்பக்கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்கிறார்கள். அதனால் தான் அங்கே குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக வந்து என்ஜாய் பண்ணி படம் பார்க்கிறார்கள். அந்த சந்தோஷ மனநிலை தான் அவர்களை இன்னும் நான்கு படங்களை கூடுதலாக பார்க்க வைக்கும். குடும்ப உறவின் முக்கியத்துவத்தை ஒரு சின்ன நடிகர் சொல்வதைவிட ஒரு பெரிய நடிகர் சொல்லும்போது அதன் வீச்சு இன்னும் அதிகமாக இருக்கும். அதுபோல இங்கே தமிழிலும் முன்னணி நடிகர்கள் வருடத்திற்கு ஒரு குடும்ப படம் நடித்தால், நம் தமிழ்சினிமாவை அசைத்துக்கொள்ள முடியாது.
இந்தப்படத்தின் நாயகி ஆனந்தி, இதற்குமுன் பார்த்த படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு நடித்துள்ளார். குறிப்பாக காமெடி காட்சிகளில் நீங்கள் புதிய ஆனந்தியை பார்க்கலாம். இந்த கதையுடன் அவர் ஒன்றிப்போனதால் தான் சார் உங்களது அடுத்த படத்தில் நான் உதவி இயக்குனராக வேலை பார்க்க விரும்புகிறேன் என்றார்.. இந்தப்படம் வெளியானதுமே நீ பிசி யாகிடுவேம்மா.. அப்புறம் இதுக்கெல்லாம் உனக்கு நேரம் இருக்காதும்மா என அவரிடம் சொன்னேன். சும்மா விளையாட்டாகத்தான் சொல்கிறார் என நினைத்தால் படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையிலேயே அதை ஓப்பனாக சொன்னார்.
ஆனந்தி பற்றி சொல்லும்போது இன்னொரு சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. படத்தில் ஆனந்தி உணர்ச்சிகரமாக பேசி அழுதுகொண்டே நடிக்கவேண்டிய காட்சி.. அந்தக்காட்சி யை படமாக்கும்போது இணை இயக்குனர் ஒருவர் வசனத்தை சொல்லிக்கொடுத்தபடி ஆனந்தியும் நடித்துக்கொண்டிருந்தார். காட்சியை படமாக்கி முடிக்கும்போது பார்த்தால் அந்த உதவி இயக்குனரும் அழுது கொண்டே இருப்பதை பார்த்தேன். அப்புறம் தான் தெரிந்தது அவர் அந்த காட்சியை யதார்த்தமாக சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பதற்காக தானும் கிளிசரின் போட்டுக்கொண்டார் என்பது.
இந்தப்படத்தில் ஜாக்ஸ் பிஜாய் என்கிற புதிய இசையமைப்பாளர் இசையமைத்துள்ளார். எனது படங்களில் யுவன் சங்கர் ராஜா, இமான், மணிசர்மா என பல இசையமைப்பாளர்களுடன் வேலை பார்த்திருக்கிறேன். பாடல்களும் ஹிட் ஆகிவிடும். ஆனால் அது என்னவோ தெரியவில்லை அடுத்தடுத்து அவர்களுடன் இணைந்து பணியாற்ற முடியாமலேயே போய்விட்டது. இத்தனைக்கும் யாருடனும் எந்த மனஸ்தாபமும் இல்லை.. எல்லோருடனும் இப்போதும் நட்பாகவே இருக்கிறேன். ஆனாலும் இந்த மாற்றம் தானாகவே நிகழ்ந்து விடுகிறது.
இந்தப்படத்தில் ஏன் இவ்வளவு நட்சத்திரங்கள்.. ஸ்டார் வேல்யூவை ஏற்றுவதற்காகவா என பலரும் கேட்கிறார்கள். இந்த கதையை பொறுத்தவரை ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒரு பின்புலம் இருக்கும். அதை தாங்கி நடிக்கவேண்டும் என்றால் அது குறிப்பிட்ட ஒரு சிலரால் தான் முடியும். பிரபு சார் இதுவரை உருவாக்கி வைத்துள்ள இமேஜ் தான் அவரது கேரக்டருக்கு பலம் சேர்த்திருக்கிறது. அப்படித்தான் இதற்குள் அனைத்து நட்சத்திரங்களும் வந்தார்கள்.
இதில் சரண்யாவுக்கு மட்டும் தான் அவரது காட்சிகளை டெவலப் செய்து எழுதினேன். அதற்கு காரணம் இருக்கிறது. இந்தப்படத்தில் குடும்பத்து நபர்களுக்குள் நடக்கும் காமெடி காட்சிகள் ஹைலைட்டாக இருக்கும். அதில் சரண்யாவின் கேரக்டர் ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் அவரிடம் அவரது கேரக்டர் பற்றி சொல்லி, நீங்கள் நடிப்பதாக ஒப்புக்கொண்டால் மட்டும் தான், இன்னும் இதை டெவலப் செய்து மாற்ற முடியும் என கூறினேன்.. அவரும் சூப்பர்..சூப்பர் என சம்மதம் தெரிவித்தார்.
இதுவரை என்னுடைய படங்கள் ஜனரஞ்சகமாக, கமர்ஷியலாக, காமெடியாக இருக்கும் என ரசிகர்கள் நம்பி வருவதே எனக்கு மிகப்பெரிய கொடுப்பினை. எனது முந்தைய படங்கள் போல இந்தப்படத்தின் காமெடி காட்சிகளும் நீண்ட நாட்கள் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கும்.” என்றார் பூபதி பாண்டியன்.