பட்டமும் சர்ச்சையும்….!
‘முத்தமிழ்ப் பேரறிஞர்’ என்னும் பட்டத்தை, வைரமுத்து அவர்களுக்கு வழங்கப் போவதாக, மதுரை தமிழிசைச் சங்கம்’ அறிவித்ததுமே, அது பற்றி சுபவீ அவர்கள் ஒரு காணொளி போட்டு விட்டார். ‘முத்தமிழ் அறிஞர்’ என்று கலைஞர் அழைக்கப்படும் நிலையில், கலைஞர்பால் மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்துள்ள வைரமுத்து அவர்கள் அப்பட்டத்தை அன்போடு மறுத்துவிட வேண்டுமென்பது சுபவீ அவர்களின் வேண்டுகோள். இந்த வேண்டுகோள் காரணமாகவோ என்னவோ, இப்போது அப்பட்டம் ‘முத்தமிழ்ப் பெருங்கவிஞர்’ என்று மாற்றப்பட்டு விட்டதாகத் தெரிகிறது.

சரி, இந்தப் பஞ்சாயத்துகளையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு, கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம். வைரமுத்து அவர்களுக்குக் ‘கவிப்பேரரசு’ என்னும் பட்டத்தைக் கொடுத்தவர் யார்? கலைஞர்தான் கொடுத்தார். அந்தக் காலத்தில் மட்டுமல்ல; அதற்கு முன்பிருந்தே கண்ணதாசனைத்தான் ‘கவியரசு’ என்று அனைவரும் அழைத்து வந்தார்கள். அப்போதெல்லாம் சினிமா உலகில் ‘கவிஞர்’ என்றாலே அது கண்ணதாசனை மட்டும்தான் குறிக்கும். ஆனாலும் கண்ணதாசன் தனது ‘லெட்டர் ஹெட்’டில் எந்த அடைமொழியையும் சேர்த்துக் கொண்டதில்லை. வெறுமனே ‘கண்ணதாசன்’ என்று மட்டும்தான் அச்சிட்டிருந்தார்.
கண்ணதாசனை விட்டுவிடுவோம். பாபநாசம் சிவனை எடுத்துக் கொள்வோம். இவர் சங்கீதக் கீர்த்தனைகளை மட்டுமே எழுதவில்லை. சினிமா பாடல்களும் எழுதினார். சென்னை சன் தியாட்டரில் 1944 தீபாவளிக்கு ரிலீசாகி, தொடர்ந்து அதே தியேட்டரில் 784 நாள்கள் ஓடி, மூன்று தீபாவளிகளைக் கண்ட படம் ஹரிதாஸ். அதில் பதினாறு பாடல்கள். அவற்றில், கதா நாயகனான தியாகராஜ பாகவதர் பாடிய ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ’ பாடலும் ‘கிருஷ்ணா முகுந்தா முராரே’ என்ற பாடலும் முணுமுணுக்கப்படாத வாய்களே இல்லை. இவற்றோடு மற்ற பாடல்களையும் எழுதியவர் பாபநாசம் சிவன்தான். என்றாலும் அவருக்கு எந்த அடைமொழியும் இல்லை. அவர் காலத்தில் பாடல்கள் எழுதிய தஞ்சை என். ராமையாதாஸ், அ. மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என யாருக்குமே அடைமொழிகள் இருந்ததில்லை. தனது காதல் பாடல்களில்கூட பொதுவுடைமைக் கருத்துகளை வலியுருத்தியதால், பட்டுக்கோட்டை மட்டுமே ‘மக்கள் கவிஞர்’ என அழைக்கப் பட்டார். அதன் பிறகு கண்ணதாசனுக்கு ‘கவிஞர்’ என்றும் ‘கவியரசு’ என்றும் சினிமாவில் டைட்டில் கார்டுகள் போடப்பட்டன. வாலிக்கு ‘கவிஞர் வாலி’ எனப் போடப் பட்டது. புலமைப்பித்தனுக்கு, அவர் படித்து வாங்கிய ‘புலவர்’ பட்டம் போடப்பட்டது.
சரி, நிகழ்காலத்திற்கு வருவோம். ‘கவிப்பேரரசு’ என்னும் பட்டத்தை, கலைஞர் வாலிக்குக் கொடுத்திருந்தால், வாலி அதை ஏற்றுக் கொண்டிருந்திருப்பாரா? நிச்சயமாக் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார். வாலி ஏற்றுக் கொண்டிருந்தால், வாலியை ‘வாடா போடா’ என்று அழைக்கும் அளவுக்கு நெருக்கமான நண்பரான ‘சோ’ தான் அதை எதிர்க்கும் முதல் ஆளாக இருந்திருப்பார். காரணம், வாலியும் சோவும் கண்ணதாசனை அத்தனை உயரத்தில் வைத்திருந்தார்கள். அமிழ்தத்திற்கு எதற்கு அடைமொழி?
கண்ணதாசனை மக்கள் ஏற்றி வைத்திருந்த உயரம், இளவயது நண்பரான கலைஞருக்கு மட்டும் தெரியாதா என்ன? அப்படியிருந்தும் வேறு எத்தனையோ பட்டங்கள் இருக்கும் நிலையில், கண்ணதாசனை விஞ்சும் வைகையில் ‘கவிப்பேரரசு’ என்னும் பட்டத்தை வைரமுத்து அவர்களுக்குக் கலைஞர் வழங்கியதன் அவசியமென்ன? இதையும் சுபவீ விளக்குவார் என நம்புவோம். கடைசியாக ஒன்று.’கவிச்சக்கரவர்த்தி’ என்னும் பட்டம் இருவருக்கு உண்டு. ஒருவன் ஒட்டக்கூத்தன். இன்னொருவன் கம்பன். ஒட்டக்கூத்தனுக்குக் கொடுத்தது மன்னன். கம்பனுக்குக் கொடுத்தது மக்கள். மக்கள் கொடுத்ததால் கம்பன் நிலைத்து நிற்கிறான். மன்னன் கொடுத்ததால் ஒட்டக்கூத்தனைத் தேட வேண்டியிருக்கிறது.


