உடுப்பி: நாளை – பிப்ரவரி 14ம் தேதி முதல் 19 வரை 144 தடை உத்தரவு!
ஹிஜாப் சர்ச்சைக்கு மத்தியில், கர்நாடகாவின் உடுப்பி மாவட்ட நிர்வாகம் பிப்ரவரி 14 முதல் பிப்ரவரி 19 வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளிகளை சுற்றியுள்ள பகுதிகளில் 144வது பிரிவின் கீழ் தடை விதித்துள்ளது. மேல்நிலைப் பள்ளிகளுக்கு அருகில் உள்ள இடங்கள் மக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்படும். ஊர்வலம் மற்றும் கோஷங்கள் எழுப்புவதற்கும் தடை விதிக்கப்படும்.
உடுப்பி மாவட்ட நிர்வாகத்தின் இந்த உத்தரவு பிப்ரவரி 14ஆம் தேதி காலை 6 மணி முதல் பிப்ரவரி 19ஆம் தேதி மாலை 6 மணி வரை அமலில் இருக்கும். இந்த உத்தரவின்படி, உயர்நிலைப் பள்ளிகளை சுற்றி 200 மீட்டர் தொலைவிற்குள் 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூடுவது தடைசெய்யப்படும். ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடத்தவும் தடை விதிக்கப்படும். கோஷம் எழுப்பவோ, பாடல்கள் பாடவோ, உரை நிகழ்த்தவோ கடுமையான தடை விதிக்கப்படும்.
திங்கள்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டப்பிரிவு 144 அமலுக்கு வந்த பிறகு, உருவ பொம்மைகளை எரித்தல், பட்டாசு வெடித்தல், ஆயுதங்கள் மற்றும் கற்களை எடுத்துச் செல்வது அல்லது கட்டி மிரட்டுவது, பொது இடங்களில் இனிப்புகள் வழங்குவது, பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொள்வது ஆகியவை தடை செய்யப்படும்.