வெளிப்புறப் படப்பிடிப்பில் கொடுமைகள்- தயாரிப்பாளர் கே. ராஜன் அரசுக்கு கோரிக்கை!!

தமிழ்நாட்டில் வெளிப்புற படப்பிடிப்புகளில் ஆளாளுக்கு லஞ்சம் கேட்டு தயாரிப்பாளர்களைக் கொடுமைப்படுத்துவதாகத் தயாரிப்பாளர் கே. ராஜன் அஞ்சாநெஞ்சன் திரைப்பட நிகழ்ச்சியில் பேசினார்.
இது பற்றிய விவரம் வருமாறு:
எம்எஸ்ஆர் (MSR film factory ) ஃபிலிம் ஃபேக்டரி வழங்கும் படம் ‘அஞ்சாநெஞ்சன்’. இந்தப் படத்தை இயக்கி இருப்பவர் தமிழன். கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி கதாநாயகனாக நடித்திருப்பவர் ஏ .ஆர். புகழ் பாண்டியன்.இசை- நரேஷ் குமார், எடிட்டிங்- எஸ்.பி. அகமது, ஒளிப்பதிவு- செந்தில்குமார்,ஸ்டண்ட் -ஹரி முருகன், நிர்வாகத் தயாரிப்பு: வசந்த் குழந்தைவேல்,தயாரிப்பு: ரஜினி சரவணன்,இணைத் தயாரிப்பு: மணிவண்ணன், சவுந்தர் குமார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை ஏற்கெனவே புரட்சி இயக்குநர் எஸ் .ஏ. சந்திரசேகரன் வெளியிட்டுப் படக்குழுவினரை வாழ்த்தியிருந்தார். இந்நிலையில் ‘அஞ்சா நெஞ்சன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு மற்றும் பட அறிமுக விழா சென்னை சிகரம் ஹாலில் நடைபெற்றது.ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி, பலரது பாராட்டுதல்களைப் பெற்றுள்ளது.
சிறப்பு விருந்தினராகத் தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே.ராஜன், தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம்,ஆக்சன் ரியாக்ஷன் ஜெனிஸ் ஆகியோர் கலந்துகொண்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டனர்.
இவ்விழாவில் படத்தின் இயக்குநர் தமிழன் பேசும்போது, “இப்படத்தைப் பற்றி பேசும்போது படத்தின் தலைப்பைப் பற்றி அனைவரும் பேசுகிறார்கள். ‘அஞ்சா நெஞ்சன்’ என்று எப்படி வைத்தீர்கள் என்று கேட்கிறார்கள்.இது வன்முறை சார்ந்த படமா என்கிறார்கள். தமிழனுக்கு வீரத்திற்கும் எவ்வளவு தூரம் சம்பந்தம் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும். தமிழன் என்றால் அவன் அஞ்சாத வீரத்துக்கு சொந்தக்காரன்.
இப் படத்தின் கதையை, புகழ் பாண்டியன் என்னிடம் முதலில் கூறினார் .எனக்குப் பிடித்திருந்தது.அது மட்டுமல்லாமல் படத்தில் வரக்கூடிய பாடல்களை அவரே பாடிக் காட்டினார். மிகவும் சிறப்பாக இருந்தன. அதற்குரிய பாடகர்களைத் தேடிப் பாட வைத்தால் சிறப்பாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். அப்படித்தான் அறிவு, சத்திய பிரகாஷ், வேல்முருகன், தஞ்சை சின்னப்பொண்ணு என்று பிரபலமான பாடகர்களைப் பாட வைத்தோம். படப்பிடிப்பு நடந்த அந்த ஊர்ப் பகுதி மக்கள் இந்தப் பாடல்களைப் பாராட்டினார்கள். அது மட்டுமல்ல எங்களுக்கு ஆரத்தி எடுத்து திருஷ்டி சுற்றிப் போட்டார்கள். அப்போதே எங்களுக்குப் படத்தின் மீது நம்பிக்கை வந்தது. இந்த படம் மிக சூப்பரான படம் என்று சொல்ல மாட்டேன். ஆனால் ஒரு பேசுபொருளாக இந்தப் படம் மாறிவிடும் என்று நான் சொல்வேன். எது பெரிய படம் எது சின்ன படம் என்றால், ஜெயிக்கிற படம் பெரிய படம் ஜெயிக்காத படம் சின்ன படம் அவ்வளவுதான். யாரும் ஒரு படத்தை பார்த்தவுடனே பெரிய படம் சின்ன படம் என்று முடிவு செய்ய முடியாது” என்றார்.
படத்தின் இணைத் தயாரிப்பாளர் மணிவண்ணன் பேசும்போது, ” எங்களுக்கும் சினிமாவிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நாங்கள் தர்மபுரி பகுதியில் விவசாயம், தொழில் என்று செய்து கொண்டிருப்பவர்கள். ஆனால் இந்தப் படத்தின் கதையைப் பற்றிக் கூறும் போது எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது .அதனால் நாங்கள் இதில் இணைந்திருக்கிறோம்” என்றார்.
படத்தை விநியோகம் செய்யும் ஆக்சன் ரியாக்ஷன் ஜெனிஸ் பேசும்போது,”இந்தப் படவேலைகள் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது .இந்த படத்தின் நாயகனுடன் நான் பல ஆண்டுகள் தொடர்பில் இருப்பவன். எனவே இந்தப் படத்தின் மீது நம்பிக்கை வந்தது.இந்தப் படத்தில் உள்ள தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் இப்படத்திற்கு பின் வளர்வார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது”
என்றார் .
படத்தின் கதை திரைக்கதை பாடல்கள் எழுதி கதாநாயகனாக நடித்திருக்கும் ஏ. ஆர். புகழ் பாண்டியன் பேசும்போது,”கொரோனா காலத்திற்குப் பிறகு பல்வேறு சிரமங்களை அனைவரும் அனுபவித்தது தெரியும் .அப்போது எங்களுக்கு வந்த யோசனை தான் இந்தப் படம். இப்படிப்பட்ட சூழலில் படம் எடுக்க முடியுமா? எடுத்து முடிக்க முடியுமா?வெளியிட முடியுமா என்று நினைத்தோம். நாங்கள் பெரிய போராட்டத்தில் மிகவும் சிரமப்பட்டு இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம். நாங்கள் சிரமப்பட்ட போது இதோ நான் இருக்கிறேன் ஜெயித்துக் காட்டுங்கள் என்று மனிதர் களில் கடவுளைப் போல் வந்தவர்தான் தயாரிப்பாளர் ரஜினி சரவணன்.அவரது நம்பிக்கையின்படி,விருப்பப்படி இப்படம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்” என்றார்.
விழாவில் தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே .ராஜன் பேசும்போது, ”என்னை ராஜன் என்று அழைத்தால் நான் கண்டுகொள்ள மாட்டேன்.கே. ராஜன் என்று கூப்பிட்டால் தான் நான் அவர்களுக்கு மதிப்பு கொடுப்பேன். ஏனென்றால் இனிஷியல் என்பது முக்கியம். பெற்றோரின் பெயருக்கு நாம் கொடுக்கும் மரியாதை அது. பெற்றோருக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? எதுவும் செய்ய மாட்டோம் .இனிஷியலையாவது போடுவோம். அதுதான் அவர்களுக்குக் கொடுக்கும் மரியாதை. ஒரு முறை சரத்குமார் ஒரு விழா மேடையில் ராஜன் என்று அழைத்தார். நான் எதுவும் பேசாமல் உட்கார்ந்து இருந்தேன். கண்டுகொள்ளவில்லை. அப்போது ராதிகா உங்களைத்தான் என்றார். என் பெயர் ராஜன் இல்லை. ஆயிரம் ராஜன் இருப்பார்கள். நான் கே .ராஜன் என்றேன்.
இங்கே சிறிய படம் பெரிய படம் என்று ஒரு பேச்சு வந்தது. சிறிய படம், பெரிய படம் என்பதை யார் முடிவு செய்வது? மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். லவ் டுடே என்றொரு படம் வந்தது.சிறிய படம் என்றார்கள். பெரிய படமாகிவிட்டது. டாடா என்றொரு படம் வந்தது. சிறிய படம் என்றார்கள். அது பெரிய படமாகிவிட்டது.அதன் தயாரிப்பாளர் வந்தவாசி தொகுதி எம்எல்ஏ. ஆனால் அவருக்கு முந்தைய படத்தால் நஷ்டம் ஏற்பட்டுக் கஷ்டப்பட்டவர்களுக்கு எல்லாம் பணத்தை திருப்பிக் கொடுத்தார். இப்படிப்பட்டவர்கள் சிலர் தான் இருப்பார்கள். இந்த விழா எளிமையாக நடக்கிறது.எளிமையாக நடப்பது தான் பெரிய அளவில் வளரும்.
இந்த படத்தலைப்பு அஞ்சா நெஞ்சன், நல்ல தமிழில் உள்ளது. தமிழில் தலைப்பு வைப்பதற்கு என்ன பிரச்சினை? தமிழில் தலைப்புகளா இல்லை? சிலப்பதிகாரத்தைப் பார்த்தால் அவ்வளவு தலைப்புகள் கிடைக்கும். கண்ணதாசன் எழுதியதை , வைரமுத்து எழுதியதைப் பாருங்கள். பாரதியாரைப் பாருங்கள், பாரதிதாசனைப் பாருங்கள். நல்ல தலைப்புகளுக்குப் பஞ்சம் இல்லை .ஏராளமாக இருக்கும். திருக்குறளைப் படியுங்கள் அவ்வளவு அற்புதமான தலைப்புகள் கிடைக்கும்.தமிழில் கதைகளைத் தேடுங்கள். தமிழ் மக்களிடம் அவ்வளவு கதைகள் உள்ளன. நம் வீட்டில், நம் தெருவில், நம் ஊரில் எத்தனையோ கதைகள் இருக்கின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது தமிழன் நாகரிகம். ஆனால் ஆங்கில மோகத்தில் இருக்கிறோம். ஒரு காலத்தில் ஆங்கிலத்தில் தலைப்புகள் வந்தன. இதைத் தடுப்பதற்காகக் கலைஞர் தமிழில் தலைப்பு வைத்த படங்களுக்கு மானியம் என்றார்.தமிழில் தலைப்பு வைத்தால் மூன்று லட்சம், ஐந்து லட்சம், ஏழு லட்சம் என்று மானியம் கொடுக்கப்பட்டது. பிறகு அதைக் காணவில்லை .அந்த மானியம் சிறுபடத் தயாரிப்பாளர்களுக்கு பெரிய வரப்பிரசாதமாக இருந்தது.
இப்பொழுது தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடக்க இருக்கிறது. நாங்கள் சில கோரிக்கைகள் வைத்துள்ளோம். தமிழ்ப் படம் எடுக்க வரும்போது அதுவும் தமிழ்நாட்டில் வெளிப்புறப் படபிடிப்பு எங்கு நடந்தாலும் அங்கே தயாரிப்பாளர் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. தமிழ்நாட்டில் இங்கே தலைமைச் செயலகத்தில் அனுமதி வாங்கினால் உள்ளூரில் எங்கு எடுத்தாலும் அங்கே பலருக்கும் காசு கொடுக்க வேண்டி இருக்கிறது. முதலில் ஒரு போலீஸ்காரர் வருவார், அவருக்குத் தர வேண்டும். பிறகு போலீஸ் ஜீப் வரும், அவர்களுக்குத் தர வேண்டும். பிறகு டிராபிக் போலீஸ் வருவார்.அவருக்குக் கொடுக்க வேண்டும். அங்கே அனுமதி வாங்கினோம் என்றால் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் .இங்கே தர வேண்டும் என்பார்கள்.இப்படி ஆளாளுக்கு தயாரிப்பாளரிடம் பிடுங்குகிறார்கள். கடற்கரைப பக்கம் போனால் அங்கே ஊர்ப் பகுதி பஞ்சாயத்து. ஆளாளுக்கு காசு பிடுங்கப் பார்ப்பார்கள். இப்படி ஒரு இடத்தில் அனுமதி கொடுத்தால் ஆங்காங்கே பணம் பிடுங்கும் கொடுமையை அரசு தடுக்க வேண்டும்.
இப்படி இருந்தால் எப்படிச் சிறுபடத் தயாரிப்பாளர்கள் படம் எடுப்பார்கள்? படப்பிடிப்பின் போது தயாரிப்பாளர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும்.சிறு பிரச்சினை என்றாலும் படப்பிடிப்பை நிறுத்துகிறார்கள். .இது தவறானது. எந்தப் பிரச்சினை என்றாலும் படப்பிடிப்பு முடிந்ததும், பேசித் தீர்த்துக் கொள்ளலாம். படப்பிடிப்பை மட்டும் நிறுத்தாதீர்கள். நான் என் உடல் நிலையையும் பொருட்படுத்தாது வந்து இப்படிச் சிறு தயாரிப்பாளர்களுக்காகப் பேசுகிறேன். அவர்களைக் காப்பாற்றுங்கள். இந்த அஞ்சா நெஞ்சன் படம் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்” என்றார்.