ஐ.ஏ எஸ் . தேர்வு எழுதப் போகும் மாணவர்கள், பாவம் அவர்களை விட்டு விடுங்கள் மிஸ்டர் ரவி!

ஐ.ஏ எஸ் . தேர்வு எழுதப் போகும் மாணவர்கள், பாவம் அவர்களை விட்டு விடுங்கள் மிஸ்டர் ரவி!

ர் என் ரவிக்கு ஆங்கிலத்தில் எழுதப்பட்டதைப் படித்து புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கிறது என்று நினைக்கிறேன். கற்றல் குறைபாடு இருப்பவர், இந்திய, தமிழ்நாடு குடிமைப்பணி தேர்வுக்காக காத்திருப்பவர்களுக்கான பாடம் நடத்துவது நகை முரண்.
இந்திய அரசியலமைப்பில் சட்டமியற்றுவது, மக்களால் மக்களின் பிரதிநிதிகளைக் கொண்டு நடைபெற வேண்டியது என்பது அடிப்படை. கோடிக்கணக்கான மக்களால் இயற்றப்பட்ட சட்டத்தை, ஆளுநர் எனப்படும் ஒற்றை மனிதர், காரணம் எதுவும் கூறப்படவேண்டிய கடமை இல்லாமல் சாகடித்து விட முடியும் என்றால், அதற்குப் பெயர் சர்வாதிகாரம். மக்களாட்சி அல்ல. அரசியலமைப்பு பிரிவு 200 கூறுவது என்ன?

ஒரு மசோதா (Bill) இயற்றப்பட்டு ஆளுநரிடம் செல்கிறது என்றால் அவர் அதற்கு அனுமதி அளிக்கலாம், அனுமதியை நிறுத்தி (withhold) வைக்கலாம், குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அனுப்பலாம். பிரிவு 200ன் முதல் பகுதியை படித்து விட்டு ‘அட, நிறுத்தினால் நிறுத்தியதுதானே’ என்ற அற்ப மகிழ்ச்சியில் ரவி துள்ளிக் குதித்திருக்கிறார்.

கவனிக்க வேண்டியது, ஆளுநர் நிறுத்தக் கூடியது சட்டத்தை அல்ல. அனுமதியை (withholds assent). பிரிவின் எளிய நுட்பம், ரவிக்கு புரியவில்லை. மேலும் வித்ஹோல்ட் என்ற ஆங்கில வார்த்தைக்கு அர்த்தமும் தெரியவில்லை. வித்ஹோல்ட் அல்லது நிறுத்தி வைத்தல் என்றால் அது தற்காலிகமானது, நிரந்தரமானது அல்ல என்ற பொருள் இருப்பது சாதாரண ஒரு கல்லூரி மாணவனால் புரிந்து கொள்ளக் கூடியது. ரவியின் சிற்றறிவுக்குத் தெரியவில்லை.

அர்த்தம்தான் தெரியவில்லை என்றாலும் பிரிவு 200ன் இரண்டாம் பகுதி இதை தெளிவுபடுத்துகிறது. அதைப் படிக்க ரவிக்கு பொறுமை இல்லை. இரண்டாம் பகுதி ஆயினும் (Provided) என்று ஆரம்பிக்கிறது. அதாவது அவ்வாறு நிறுத்தி வைப்பது என்பது, இரண்டாம் பகுதியில் கூறப்பட்டதற்குக் கட்டுப்பட்டது என்று அர்த்தம்.

இனி இரண்டாம் பகுதி.

அந்த மசோதாவை மறுபரிசீலனை செய்யவோ அல்லது மாற்றங்களை செய்யவோ, ‘எவ்வளவு விரைவில் இயலுமோ அவ்வளவு விரைவில்’ ஆளுநர் அந்தச் மசோதாவை சட்டமன்றத்துக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.

முதல் பிரிவில் கண்ட மூன்று முறைகளில் (Optioins) திருப்பி அனுப்புவது என்பது நிறுத்தி வைத்தல் என்ற இரண்டாவது முறையில்தான் வருகிறது. நிறுத்தி வைத்தால் மசோதா செத்து விடும் என்று ரவி மாணவர்களிடம் உளறிக் கொட்டியது சரி என்றால் செத்த மசோதாவை எதற்கு திருப்பி அனுப்ப வேண்டும்; அதுவும் எவ்வளவு விரைவில் இயலுமோ அவ்வளவு விரைவாக (as soon as possible).

இனியும் ரவியின் மூளைக்குப் புரியவில்லை என்றால் பிரிவு 200ன் இறுதிப் பகுதியில் விளக்கம் இருக்கிறது.

திருப்பப்பட்ட மசோதாவானது மீண்டும் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டால் அதற்குப் பிறகும் அவர் அதை நிறுத்தி வைக்கக் கூடாது (Governor shall not withhold assent therefrom). ஷால் நாட் என்ற வார்த்தை கவனிக்கத்தகுந்தது.

இரண்டாம் முறை மசோதா அனுப்பப்படுகையில் ஆளுநருக்கான அதிகாரங்கள் மூன்றிலிருந்து இரண்டாக குறைந்து விடுகிறது. அவர் அனுமதியளிக்க வேண்டும் அல்லது குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அனுப்ப வேண்டும். அவ்வளவுதான். சாகடிக்க எல்லாம் முடியாது. கோடிக்கணக்கான மக்கள் தங்களுக்காக இயற்றிக் கொண்ட ஒரு சட்டத்தை ஒரு ரிட்டயர்ட் போலீஸ்காரர் சாகடித்து விட முடியும் என்று ரவி வேண்டுமானல் தனிமையில் நினைத்துக் கொண்டு புல்லரித்துக் கொள்ளட்டும்; தேர்வு எழுதப் போகும் மாணவர்கள், பாவம் அவர்களை விட்டு விடுங்கள்

ஏற்கனவே இருக்கும் வாட்ஸப் யுனிவர்சிட்டிகளே போதும்.

பிரபு ராஜதுரை

Related Posts

CLOSE
CLOSE
error: Content is protected !!