பாஸ்போர்ட் பெற வரும் நேர்காணலுக்கு அசல் சான்றிதழ்களை கொண்டு வர தேவையில்லை!
பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பவர்கள் நேர்காணலின்போது, ‘டிஜிலாக்கர்’ செயலி மூலம் சான்றிதழ்களை சமர்ப்பிக்கும் வசதியை பாஸ்போர்ட் அலுவலகம் அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம், ஆவணங்களை பத்திரமாக கையாள முடிவதோடு, நேரமும் மிச்சமாகும் என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.கோவேந்தன் தெரிவித்தார்.
வேலைவாய்ப்பு, வியாபாரம், சுற்றுலா, கல்வி, மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மக்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் எடுப்பது கட்டாயம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை பாஸ்போர்ட் எடுப்பது மிகவும் கடினமான காரியமாக இருந்தது. ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தற்போது பாஸ்போர்ட் எடுப்பது மிக எளிதாக மாறிவிட்டது.
இருப்பினும், இன்னும் எளிதாக, விரைவாக பாஸ்போர்ட் பெற வசதியாக அவ்வப்போது புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. அந்த வகையில், தற்போது ‘டிஜிலாக்கர்’ செயலி மூலம் சான்றிதழ்களை சமர்ப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.கோவேந்தன் கூறியதாவது:–
மத்திய அரசின் மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், ‘டிஜிலாக்கர்’ என்ற மின்னணு பாதுகாப்பு பெட்டக வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில், பொதுமக்கள் தங்களது கல்வி, சாதி, இருப்பிட, வருமான சான்றிதழ்கள், ஓட்டுநர் உரிமம், வீட்டுப் பத்திரங்கள், காப்பீட்டு ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய ஆவணங்களையும் மின்னணு முறையில் சேகரித்து வைக்க முடியும்.
மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், நாட்டு மக்கள் அனைவருக்கும் மின்னணு முறையில் சேவை மற்றும் அறிவுசார்ந்த பொருளாதாரத்தை உருவாக்குவது இதன் முக்கிய நோக்கமாகும்.
பொதுவாக, பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்கள் நேர்காணலுக்கு செல்லும்போது தங்களது அசல் சான்றிதழ்களை கொண்டு செல்ல வேண்டும். அவர்கள், டிஜிலாக்கர் செயலியில் தங்கள் ஆவணங்களை சேமித்து வைத்திருந்தால், நேர்காணலுக்கு அசல் சான்றிதழ்களை கையில் எடுத்துச் செல்ல அவசியம் இல்லை. டிஜிலாக்கரில் இருந்தே ஆவணங்கள் நேரடியாக சரிபார்க்கப்படும்.
இதனால், ஆவணங்கள் தொலைந்து போகுமோ, சேதம் அடையுமோ என அச்சப்பட தேவையில்லை.
தவிர, நேர்காணலின்போது அசல் ஆவணங்களை சரிபார்க்க சராசரியாக ஒரு நபருக்கு அரைமணி ஆகும் என்றால், டிஜிலாக்கர் மூலம் 15 நிமிடத்தில் சரிபார்த்து விடலாம். இதனால், நேரமும் மிச்சமாகும். தற்போது நேர்காணலுக்கு தினமும் சராசரியாக 2,100 பேர் வரை அழைக்கப்படுகின்றனர். ஆவணங்கள் சரிபார்த்தல் விரைவாக நடந்தால், இன்னும் கூடுதல் பேரை நேர்காணலுக்கு அழைக்க முடியும்.
டிஜிலாக்கரில் போலி ஆவணங்களை பதிவேற்றம் செய்ய முடியாது. இதனால், மோசடிகள் தடுக்கப்படும். அதையும் மீறி, போலி ஆவணங்களை பதிவேற்றம் செய்து அதன்மூலம் பாஸ்போர்ட் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.