ஜனநாயகம் முடிந்துபோன கதை என்று முக்காடு போடும் கட்டத்துக்கு உலகம் வந்து விட்டதா?

ஜனநாயகம் முடிந்துபோன கதை என்று முக்காடு போடும் கட்டத்துக்கு உலகம் வந்து விட்டதா?

வில்லியம் ஜே டாப்சன் அமெரிக்க ஊடகர். சர்வதேச அரசியலை அலசுபவர். The Dictator’s Learning Curve: Inside the Global Battle for Democracy அவரோட பிரபலமான புத்தகம். ஜனநாயகத்தில் எப்படி சர்வாதிகாரிகள் உருவாகிறார்கள் என்பதை விவரித்து இருந்தார். இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியாவில் டாப்சன் பேட்டி வந்திருக்கிறது. சந்தித்தவர் நீலம் ராஜ். கேள்விகளை நீக்கினால் பதில்களை புரிந்து கொள்ள இயலாது என்பதால் இரண்டும் இங்கே சுருக்கமாக.

* இந்தியா இன்னும் ஜனநாயக நாடு தானா? என்ற கேள்வி மேலை ஊடகங்களால் பெரிதாக எழுப்பப்படுகிறது. இந்த சூழலில் நீங்களும் அதே கேள்வி பொதிந்த கட்டுரைகளை பலரிடம் கேட்டு வாங்கி உங்கள் Journal of Democracy பத்திரிகையில் பிரசுரம் செய்திருக்கிறீர்கள். இந்தியாவை மட்டம் தட்ட எத்தனை பேர் புறப்பட்டுள்ளீர்கள்? என்று இங்கே பலர் கொதிக்கிறார்கள், தெரியுமா?

** ஜனநாயகம் என்பதே கேள்விகளும் விவாதங்களும் நிறைந்தது தானே. ஆதரவும் எதிர்ப்பும் ஜனநாயகத்தின் பக்கங்கள். இந்திய ஜனநாயகம் குறித்து ஒரே மாதிரியான கருத்து கொண்டவர்களிடம் கட்டுரை வாங்கி பிரசுரிப்பதில் அர்த்தம் கிடையாது. அதை படித்து யார் என்ன தெரிந்து கொள்ள முடியும்? ஆகவே வெவ்வேறு பார்வை கொண்ட அறிஞர்களின் சிந்தனைகளை கட்டுரை தொகுப்பாக வெளியிட்டோம். அவற்றை படிப்பவர்கள் தமது எண்ணங்கள் ஊர்ஜிதம் ஆவதாக உணர்வார்கள். தமது எண்ணங்கள் அடியோடு தவறோ என்கிற தவிப்பையும் உணர்வார்கள். சிந்தனையை செம்மைப்படுத்த தூண்டுவதே நோக்கம்.

* இந்திய அரசியல் சாசனத்தின் நெறிகளிலும் இந்திய நிறுவனக் கட்டமைப்பின் ஊடாகவும் கொஞ்சமாக எதேச்சதிகாரத்தின் அணுக்கள் திணிக்கப்பட்டுள்ளது என்று வரலாறு ஆய்வாளர் திரிபுரத்தாமன் சிங் அவரது கட்டுரையில் சொல்கிறார். அந்த கருத்து, இந்தியாவில் ஜனநாயகம் பின்னோக்கி செல்வதாக சொல்வதற்கு முரணாக இல்லையா?

** நிச்சயமாக முரண் தான். சொன்னேனே, வெவ்வேறு சிந்தனைகளுக்கும் விவாதங்களுக்கும் இடம் தந்திருக்கிறேன் என்று. சிங் மிக வலுவாக தனது வாதத்தை முன்வைக்கிறார். இந்திய அரசியல் சாசனத்தின் ஜீவனையே பலரும் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று அடித்துச் சொல்கிறார். இந்திய அரசியல் சாசனம் வெறும் காகிதக் கத்தை கிடையாது. குடிமக்களுக்கு உரிமையும் அதிகாரமும் வழங்குவதற்காக மட்டும் எழுதப்பட்ட ஆவணம் அல்ல. மாறாக, புதிதாக உதயமாகும் ஒரு குடியரசின் அரசியல் எதார்த்தங்களையும் அதன் சமூக பொருளாதார தேவைகளையும் புரிந்து கொண்டு, அவற்றை பூர்த்தி செய்வதற்கு நாட்டின் தலைவன் எப்படி எல்லாம் தனது அதிகாரத்தை செலுத்த வேண்டும் என்பதை போதிக்கும் ஒரு பாட நூலாக அரசியல் சாசனத்தை பார்க்கிறார் சிங். அவரது கட்டுரையை படிக்கும்போது, உங்கள் அரசியல் சாசனம் எழுதப்பட்ட கால கட்டத்தை நினைவில் கொள்ள வேண்டும்.

* இந்தியாவில் ஜனநாயகம் செத்துக் கொண்டிருக்கிறது என்பது மிகைப்படுத்திய கருத்து என்கிறார் கல்வியாளர் ராகுல் வர்மா. ஜனநாயக சிதைவுக்கு பாரதிய ஜனதா கட்சி மீது மொத்தமாக பழி போடுவது தவறு என்கிறார். படித்த பணக்கார மேல்தட்டு மக்கள் இடதுசாரி வலதுசாரி என்று அனி வகுத்து நின்றதால், இரு பக்கமும் சாராத நடுநிலைவாதிகளுக்கான இடம் குறுகிப் போய்விட்டது என்ற சுவாரசியமான கருத்தையும் ராகுல் சர்மா முன்வைக்கிறார். நான் கேட்கிறேன், இந்தியாவில் மட்டும் தான் இப்படி நடக்கிறதா, என்ன?

** நிச்சயமாக இல்லை. இடது வலது என்று அணி பிரிந்து நிற்பது என்பது உலகளாவிய விஷயமாக மாறிவிட்டது. இரண்டில் எந்த அணி எல்லை தாண்டினாலும் அதை சுட்டிக் காட்டி சத்தம் போட்டு தடுத்து நிறுத்தும் பொதுமக்களின் எண்ணிக்கை பரிதாப நிலைக்கு சரிந்து விட்டது. இதில் கவலை அளிக்கும் விஷயம் எது என்றால், இங்கே அல்லது அங்கே என்று பிரிந்து நிற்கும் இரண்டு அணிகளில் உள்ளவர்களும் தங்களுடைய சுயநல கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள ஜனநாயக நெறிகளை பண்டமாற்று செய்யவும் துணிந்து விட்டார்கள் என்பது தான். தேர்ந்து எடுக்கப்பட்ட தலைவர்கள் இதை பார்த்து குஷியாகி விடுகிறார்கள். மக்களை எது பிரித்து வைக்கிறதோ அதே போன்ற புதுப்புது கோஷங்களை உருவாக்கி இரு தரப்பிலும் பரஸ்பர வெறுப்பை ஊக்குவித்து தங்கள் அதிகாரத்தை பெருக்கிக் கொள்கிறார்கள். பல நாடுகளிலும் இதே கதை அரங்கேறுகிறது.

* உண்மை தான். ஆனால், எல்லாம் போச்சு, ஜனநாயகம் முடிந்துபோன கதை என்று முக்காடு போடும் கட்டத்துக்கு உலகம் வந்து விட்டதா? ஆக்ஸ்போர்டு பேராசிரியர் மாயா ட்யூடர் சொல்வதை போல, இந்தியாவில் ஜனநாயகத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதே தவிர, நிச்சயமாக இது சரி செய்யக் கூடியது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?

** ஜனநாயகம் நோயில் விழுவதும் மீண்டு வருவதும் புதிதல்ல. தன்னை தானே சரி செய்து கொள்கிற ஆற்றல் ஜனநாயகத்துக்கு உண்டு. தாங்கள் தேர்ந்து எடுத்த தலைவர்கள் நாட்டை தவறான பாதையில் செலுத்தினால், அவர்களை தட்டியும் குட்டியும் தண்டிக்கும் அதிகாரம் குடிமக்களிடம் இருக்கிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் நடக்கிற தேர்தல்களில் மக்கள் அந்த அதிகாரத்தை பயன்படுத்துகிறார்கள். அதன் மூலமாக ஜனநாயகம் புத்துயிர் பெறுகிறது. பிரச்னை எங்கே வருகிறது என்றால், ஒரு ஜனநாயக நாட்டின் சட்டங்களும் அந்த சட்டங்களை அமுல்படுத்தும் அமைப்புகளுமே ஜனநாயகத்துக்கு எதிராக இயங்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டால் அங்கே ஜனநாயகத்தின் கதி முடிந்த கதையாகி விடுகிறது. ஹங்கேரியை உதாரணமாக சொல்லலாம். மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதமரே சர்வாதிகாரியாக மாறி, அரசியல் சாசன அமைப்புகளை பலவீனமாக்கி, தேர்தல் என்பதையே அர்த்தமற்றதாக ஆக்கிவிட்டார்.

* சர்வாதிகாரிகள் பற்றி நீங்கள் எழுதிய புத்தகம் வந்து பத்தாண்டு தாண்டி விட்டது. பல நாடுகளில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய உலகில் ஜனநாயகம் எப்படி இருப்பதாக நினைக்கிறீர்கள்?

** பொதுவாக சொல்வது என்றால், ஜனநாயகத்துக்கு நேரம் சரியில்லை. மக்கள் மனதில் மற்றவர்கள் குறித்த சந்தேகத்தை விதைத்து வெறுப்பை தூண்டுவது என்று ஒரு புறம்; மக்கள் மனதில் படிந்திருக்கும் பயங்களை போக்க தன்னால் மட்டுமே முடியும் என போலி பிம்பத்தை உருவாக்குவது இன்னொரு புறம். இப்படியாக சராசரி மக்களை ஏதோ ஒரு வகையில் தங்கள் பிடியில் அடக்கி வைக்க விரும்பும் தலைவர்களின் போக்கு பரவலாக தெரிகிறது. இதனால் ஜனநாயக நெறிகளின் மேல் மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது. அதே சமயம், அப்பாவி மக்களை ஏமாற்றும் தலைவர்களின் முகமூடிகள் கழன்று விழுவதும் நடக்கிறது. ஜனநாயகம் மீது நம்பிக்கை கொண்டவர்கள் வெறுமனே வேடிக்கை பார்க்காமல் அரசியல் ரீதியாக மக்களுடன் நெருங்கி செயல்படும் நாடுகளில் இது நடக்கிறது. பிறருடைய வெற்றியில் இருந்து தான் பாடம் படிக்க வேண்டும் என்பது இல்லை. ஹங்கேரி, வெனிசுவலா, துருக்கி போன்ற நாடுகளில் நடக்கும் எச்சரிக்கைக் கதைகளும் நமக்கு பல பாடங்களை சொல்லித் தரும்.

* புடின் ஒரு காலத்தில் ரஷ்ய உளவு படையான கேஜிபியின் ஆபீசராக கிழக்கு ஜெர்மனியில் வேலை செய்தார் என்று புத்தகத்தில் எழுதி இருந்தீர்கள். அந்த காலகட்டம் அவரிடம் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்கிறீர்கள்?

** உலகத்தை பற்றிய புடின் பார்வையை செதுக்கியதே அந்த காலகட்டம் தான். அவரே 24 வருடம் முன்பு ஒரு பேட்டியில் இதை சொன்னார். தன்னை சுற்றிலும் நடக்கிற விஷயங்களை மிகவும் குறுகிய கண்ணோட்டத்தில் பார்க்க புடின் பழகியது அப்போது தான். ஒரு உதாரணம் சொல்கிறேன். 2014-ல் உக்ரைனில் மக்கள் எழுச்சி நிகழ்ந்தது. (மைதான் அப்ரைசிங் என்று அதை குறிப்பிட்டார்கள். ரஷ்யாவுக்கு தாளம் போடும் அதிபருக்கு எதிராக மைதானத்தில் மாணவர்கள் தொடங்கிய ஆர்ப்பாட்டம் பெரும் போராட்டமாக மாறி ஆட்சி மாற்றத்தில் முடிந்த சம்பவம்.) அது இயற்கையாக நடந்த விஷயம், அரசின் செயல்களால் மக்களிடம் உண்டான அதிருப்தியின் வெளிப்பாடு என்பதை புடின் ஏற்கவே இல்லை. ரஷ்யாவுக்கு எதிரான அந்நிய சக்தி எதோ தூண்டி விட்டு தான் நடந்திருக்க முடியும் என்று அவர் நம்பினார். ஏன் என்றால், கேஜிபி அவரை அப்படி மூளைச்சலவை செய்திருந்தது. மாயத் தோற்றம் ஒன்றை உருவாக்கி மக்களை நம்ப வைப்பதும், பற்றி எரியும் ஒரு பிரச்னையில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப வேறு ஒரு பிரச்னையை உருவாக்குவதும் கேஜிபியின் பால பாடங்களில் முக்கியமானது. அப்படி மூளை கண்டிஷன் செய்யப்பட்ட காரணத்தால் தான் உக்ரைன் விஷயத்தில் அடுத்தடுத்து பல தப்புகளை அவர் செய்துகொண்டே போனார். அது கடைசியில் உக்ரைன் மீது படையெடுப்பில் வந்து நிற்கிறது

கதிர்

Related Posts