புது சீஃப் செக்ரட்டரியானார் கிரிஜா வைத்திய நாதன்! – கொஞ்சம் டீடெய்ல்
தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதனை, ஆளுநர் வித்யாசாகர் ராவ் நியமித்திருப்பதாக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருந்த கிரிஜா வைத்தியாநதன், நில நிர்வாகத் துறை ஆணையராக பதவி வகித்தார்.மேலும், நிர்வாக சீர்திருத்தம் மற்றும் கண்காணிப்பு ஆணையர் பதவிகளையும் அவர் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தியதைத் தொடர்ந்து, கிரிஜா வைத்தியநாதன், புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே கிரிஜா வைத்தியநாதன், பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி. சேகரின் தம்பி மனைவியாவார். இந்த பின்னணியை மட்டும் எடுத்துக் கொண்டு, கிரிஜா வைத்தியநாதன் மூலமாக, தமிழக அரசின் நடவடிக்கைகளை பாஜக கைப்பற்ற நினைப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, தமிழக அரசில் பாஜக தலைமையிலான மத்திய அரசு தலையிட முயற்சிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகள், எஸ்வி சேகரின் உறவினர் என்ற ஒரே காரணத்துக்காக தற்போது கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு ஊடகங்களில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
ஆனால், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளும், கிரிஜா வைத்தியநாதன் குறித்து பேசும் போது, மிகச் சரியான நபரை தமிழக அரசு தேர்வு செய்திருப்பதாகக் கூறுகின்றனர்.மேலும், ஐஏஎஸ் அதிகாரிகளிலேயே மிகவும் மூத்தவரும், ஏராளமான முக்கியத் துறைகளில் அனுபவம் நிறைந்தவராகவும் இருக்கும் கிரிஜா வைத்தியநாதன், இப்பதவிக்கு மிகச் சரியானவர் என்று கூறுகிறார்கள்.
பணியில் அப்பழுக்கற்றவரும், மிகச் சிறந்த நிர்வாகத் திறமை கொண்டவருமாக கிரிஜா வைத்தியநாதன் விளங்குவதாகவும் கருத்துத் தெரிவித்துள்ளனர். மேலும் நில நிர்வாக கமிஷனராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் புதிய தலைமை செயலாளருக்கு தகுதியான நபர். அவர் எந்த சர்ச்சையிலும், குற்றச்சாட்டுக்களிலும் சிக்காதவர். மேலும் கிரிஜா வைத்தியநாதனுக்கு எந்த அரசியல் பின்புலமும் கிடையாது. தான் உண்டு, தன்வேலை உண்டு என்று பணிகளில் மட்டுமே சிறப்பு கவனம் செலுத்துவார். தேவையில்லாத விஷயங்களில் கூட தலையிட மாட்டார். அவர் வகித்து வந்த அனைத்து துறைகளிலும் தனித்துவம் இருக்கும். தற்போது கூட அவர் வகித்து வரும் துறையையும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் என்று ஆலோசனை கூட்டத்தில் பாராட்டு பத்திரம் வாசிக்கப்பட்டது.
இத்தனைக்கும் தற்போதைய நியமன குறித்த தகவல் கிரிஜா வைத்தியநாதனிடம் தெரிவித்த போது முதலில் அவர் தயங்கி உள்ளார். அப்போது, டெல்லி நிலவரத்தை அவரிடம் சொல்லி சம்மதிக்க வைத்துள்ளனர். ஏற்கனவே இரண்டு முறை தலைமைச் செயலாளர் வாய்ப்பு கிரிஜா வைத்தியநாதனுக்கு வந்தபோது கூட அவர் அதை விரும்பாத நிலையில் தற்போது அவர், அந்த பதவியை ஏற்றுக் கொண்டு இருக்கிறாராம். அதே சமயம், திமுக, அதிமுக என எந்த கட்சிப் பின்னணியும் இல்லாதவர் கிரிஜா வைத்தியநாதன் என்றும் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள் கோட்டை அதிகார தகவல் அறிந்தவர்கள்.