மரித்தோரிடையே வாழும் தேசம் – சாகித்ய அகாடமி விருது பற்றி ஒரு குறிப்பு – ரவிக்குமார்
கடந்த ஒரு வாரமாகவே தமிழ் எழுத்தாளர்கள் முக்கியமானதொரு பிரச்சனைக்காக உயிரைக்கொடுத்துப் போராடிக்கொண்டிருந்தார்கள். அது வேறு ஒன்றுமல்ல, சாகித்ய அகாடமி விருது யாருக்குக் கிடைக்கும் என்பதுதான் அந்தப் பிரச்சனை. விருது என்று வந்துவிட்டால் வெட்கத்துக்கு இடமில்லை என்ற கொள்கையைக் கொடியாக ஏந்தி வாள் சுழற்றினார்கள்.
சமூகப் பார்வையோடு எழுதினால் அது அரசியல் பிரச்சாரம் , கமுக்கமான சாதிப் பற்றும் , வெளிப்படையான சமயச் சார்பும் கொண்டு எழுதினால் அது ‘சுத்த இலக்கியம் ‘ என்ற கோட்பாடு தமிழ் இலக்கிய உலகின் மாற்றப்பட முடியாத விதியாக நிலைபெற்று இருக்கும் நிலையில், அதற்கு வெகுசன ஊடகங்களும் வெளி அமைத்துக்கொடுக்கும் நிலையில் தமிழில் சாகித்ய அகாடமி விருது எப்படியானவர்களுக்குக் கிடைக்கும் என்பது ஊர் அறிந்த ரகசியம் தான் .
நேற்று விருதுக்கான பெயர் அறிவிக்கப்பட்டதும் சுத்த / சத்த இலக்கியவாதிகளின் கூப்பாடு காணாமல் போய்விட்டது.எல்லோரும் கவலையை மறைத்துக்கொண்டு ‘அண்ணாச்சிக்கு ‘ கைகுலுக்கக் கிளம்பிவிட்டார்கள்.
இந்த ஆண்டு வண்ணதாசனுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. தோழர் திகசி யின் மகனாயிற்றே என இடதுசாரிகளும், விஷ்ணுபுரம் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவராயிற்றே என வலதுசாரிகளும், எந்தப் பிரச்சனையிலும் ஈடுபடாதவர் என்று நடுநிலைவாதிகளும் இந்த அறிவிப்பை வரவேற்றுவிட்டார்கள்.
வண்ணதாசனை நானும் வாழ்த்துகிறேன். அவர் தனக்கு விருது வேண்டும் என யாரிடமும் ‘லாபி’ செய்கிறவரல்ல. அப்படி ‘லாபி’ செய்யாத ஒருவருக்கு இந்த ஆண்டு விருது கிடைத்திருக்கிறதே என்பதில் எனக்கு மகிழ்ச்சி.
இறுதித் தேர்வுக்கு இன்குலாப்பின் பெயரும் வண்ணதாசனின் பெயரும் வந்ததாகவும் இன்குலாப் இறந்துவிட்டார் என்ற காரணத்தால் வண்ணதாசன் தேர்வுசெய்யப்பட்டார் எனவும் ஒரு தகவல் நேற்றிலிருந்து பரவிக்கொண்டிருக்கிறது.
இறப்புக்குப் பின் விருது கொடுக்கக்கூடாது என்ற விதி சாகித்ய அகாடமியில் இல்லை.தமிழில் இதுவரை ஐந்துபேருக்கு அப்படி விருது வழங்கப்பட்டுள்ளது. இன்குலாப்புக்கு தரக்கூடாது என்பதற்காகவே ஜூரிகளில் இருவர் இறப்பைக் காரணம் காட்டி வண்ணதாசனின் பெயரை முன்மொழிந்ததாகவும் சொல்கிறார்கள்.
இந்த வதந்திகள் ஒருபுறமிருக்க , வண்ணதாசனுக்குவிருது கொடுக்கப்பட்டதாலேயே சாகித்ய அகாடமியின் செயல்பாடு ஜனநாயகமாகிவிட்டதா ? என்ற கேள்வியை நான் எழுப்ப விரும்புகிறேன்.
இந்த ஆண்டு இறுதிப் பட்டியலில் இடம்பெற்ற பத்து நூல்களின் பட்டியலை சாகித்ய அகாடமி வெளிப்படையாக அறிவிக்கவேண்டும். அவற்றைத் தேர்ந்தெடுத்தவர்களின் பட்டியலையும் வெளியிட வேண்டும். அப்போதுதான் இந்தத் தேர்வு முறையில் இருக்கும் குளறுபடிகள் வெளிப்படும்.
இலக்கியத்தோடு தொடர்பே இல்லாதவர்கள் , இலவசமாக புத்தகம் தந்தாலும் படிக்காதவர்கள் – இப்படியானவர்கள்தான் விருதுக்கான நூலைப் பரிந்துரைக்கிறார்கள். சாகித்ய அகாடமிக்கு நேரடியாக இதில் தொடர்பில்லை என்றாலும் ஆலோசனைக்கு குழு உறுப்பினர்களை நியமிப்பதிலிருந்தே இந்தக் குளறுபடி ஆரம்பித்துவிடுகிறது.
சாகித்ய அகாடமி விருது குறித்து கூப்பாடு போட்டவர்கள் எவருக்கும் விருதுக்கான தேர்வுமுறையை ஜனநாயகப் படுத்தவேண்டும் என்ற அக்கறை கிடையாது.தனக்கு அல்லது தனது குழுவைச் சேர்ந்த ஒருத்தருக்கு இந்த விருது கிடைக்கவேண்டும் என்பதே அவர்களது கவலை.
இன்குலாப் உயிரோடு இருந்திருந்தால் தனக்கு விருது கிடைக்காததைப்பற்றி வருந்தியிருக்க மாட்டார் . ஏனென்றால் இந்த தேசம் ‘மரித்தோரிடையே வாழ்கிறது’ என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.