32°C
விளம்பரம்
Advertisement

17-வது தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை-முக்கிய அம்சங்கள்!

admin Published: June 18, 2026 6 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


மிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய திருப்பமாக, நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய 17-வது சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. இக்கூட்டத்தொடர், அண்மையில் ஆளுநர் மாளிகை நிகழ்வுகளில் ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மரபுப்படி தமிழ்த் தாய் வாழ்த்துடன் முறைப்படி தொடங்கி, இரண்டாவதாகத் தேசிய கீதம் பாடப்பெற்றது.

அதனைத் தொடர்ந்து, தமிழக ஆளுநர் . ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்  புதிய அரசின் கொள்கைத் திட்டங்கள் அடங்கிய தனது உரையை 39 நிமிடங்களில் வாசித்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள  முதலமைச்சர்  ச. ஜோசப் விஜய்  அரசின் முதல் ஆளுநர் உரை இதுவாகும். பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராசர், அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட கொள்கைத் தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு ஆளுநர் தனது உரையை எவ்வித மாற்றமுமின்றி முழுமையாக வாசித்தார்.

மாபெரும் சரித்திரப் புரட்சி: அரசியல் மாற்றம்

ஆளுநர் தனது உரையின் தொடக்கத்தில், அண்மைய தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு புதிய மறுமலர்ச்சியையும், மாற்றத்தையும் ஏற்படுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டார்.

  • விசில் புரட்சி: கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில், மக்களின் பேராதரவுடன், பணநாயகத்தை ஒழித்துத் தனித்துப் போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்திருக்கும் முதலமைச்சரின் சாதனையை 1967-ல் பேரறிஞர் அண்ணாவும், 1977-ல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும் ஏற்படுத்திய அரசியல் புரட்சியின் வரிசையில் வைத்து “மகத்தான மாபெரும் விசில் புரட்சி” என ஆளுநர் உரை புகழ்ந்தது.

  • கூட்டணி ஆட்சித் தத்துவம்: கடந்த 74 ஆண்டுகால தமிழக அரசியல் வரலாற்றில் இல்லாத விந்தையாக, “ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு” என்ற தத்துவத்தின்படி இந்த அரசு கூட்டணி ஆட்சியின் இலக்கணமாகத் திகழ்கிறது.

மாநில உரிமைகளும் நிதிப் பகிர்வுப் போராட்டமும்

ஒன்றிய அரசுக்கும் தமிழ்நாட்டிற்குமான நிதிப் பகிர்வு மற்றும் மாநில உரிமைகள் குறித்து ஆளுநர் உரையில் மிகக் கடுமையான நிலைப்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டன.

  • வரிப் பகிர்வுத் தீர்மானம் மற்றும் உச்ச நீதிமன்ற நடவடிக்கை: ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய நியாயமான வரிப் பகிர்வைப் பெறச் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்படும். அதோடு நின்றுவிடாமல், சட்டரீதியாக நிதிப் பகிர்வைப் பெற உச்ச நீதிமன்றம் வரை செல்வதற்காகச் “சட்ட வல்லுநர்கள் அடங்கிய சிறப்புக்குழு” அமைக்கப்படும். ஒன்றிய அரசின் பாரபட்சமான அணுகுமுறை தனி அறிக்கையாகவும் வெளியிடப்படும்.

  • நீட் மற்றும் தேசிய கல்விக் கொள்கை (NEP) எதிர்ப்பு: கல்வியானது பொதுப் பட்டியலில் இருப்பதால்தான் நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கைத் திணிப்பு போன்ற சிக்கல்கள் எழுகின்றன. எனவே, கல்வியை மீண்டும் “மாநிலப் பட்டியலுக்கு” மாற்ற அரசு முயலும். தேசிய கல்விக் கொள்கை 2020-ஐக் கடுமையாக எதிர்க்கும் இந்த அரசு, மும்மொழிக் கொள்கையைத் திணித்தால் மட்டுமே தர வேண்டிய ₹3,458 கோடி கல்வி நிதியை விடுவிக்க முடியும் என்ற ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை ஏற்காது; தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடரும்.

  • முதலமைச்சரின் டெல்லி பயணம்: முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்து ஓசூர் வான்வழி அமைப்பு மையம் (CABS), மேகதாது அணைத் தடுப்பு, மீனவர் விடுதலை மற்றும் ஓசூர், கோவை, மதுரை மெட்ரோ இரயில் திட்டங்களுக்கான ஒப்புதல் அடங்கிய கோரிக்கைகளை நேரில் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த கால நிதிச் சீர்கேடு: வெள்ளை அறிக்கை விவரங்கள்

தமிழகத்தின் தற்போதைய நிதிநிலை மோசமான சீர்கேட்டைச் சந்தித்துள்ளதை விளக்கும் வெள்ளை அறிக்கையை இந்த அரசு வெளியிட்டுள்ளது.

  • ரூ. 10 லட்சம் கோடி கடன்: கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் கடனின் அளவு இரண்டு மடங்காக உயர்ந்து 10 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 28.3 சதவீதமாகும். இதன் மூலம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு தனிநபர் மீதும் ₹1 லட்சத்திற்கும் அதிகமான கடன் சுமை உள்ளது.

  • வருவாய்ப் பற்றாக்குறை: 2024-25 இல் 48,840 கோடியாக இருந்த வருவாய்ப் பற்றாக்குறை, 2025-26 இல் 78,324 கோடியாக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் மொத்த வருவாயில் 23 சதவீதம் வட்டி செலுத்துவதற்கே செலவிடப்படுகிறது.

  • வருவாய் மீட்பு நடவடிக்கை: தடம்மாறிச் சென்ற வருவாயை மீட்க, மதுபான உற்பத்தியாளர்களுக்கான கூடுதல் சிறப்புக் கட்டணம் (Privilege fee) விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ₹1,000 கோடி வரை கூடுதல் வருவாய் கிடைக்கும். கனிமவளத் துறை ஊழல்களை ஒழித்து அதன் மூலமான வருவாயை இரட்டிப்பாக்க அரசு முயன்று வருகிறது.

புதிய அரசின் முதல் மூன்று அதிரடி உத்தரவுகள்

ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கையெழுத்திட்ட முதல் மூன்று முக்கிய உத்தரவுகள் குறித்து ஆளுநர் உரையில் விவரிக்கப்பட்டது:

  1. 200 யூனிட் இலவச மின்சாரம்: நுகர்வோரின் மின் கட்டணத்தைக் குறைக்கும் வகையில், இரு மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் (இதற்காக அரசிற்கு ₹1,730 கோடி செலவு ஏற்படும்).

  2. போதைப் பொருள் தடுப்பு சிறப்புப் படை: தமிழ்நாட்டில் வேரூன்றியுள்ள போதை கலாச்சாரத்தை முற்றிலுமாக ஒழிக்க அனைத்து மாவட்டங்களிலும் போதைப் பொருள் தடுப்பு சிறப்புப் படை உருவாக்கப்படும்.

  3. சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை: பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 2,545 புதிய பணியிடங்கள், 319 நான்கு சக்கர ரோந்து வாகனங்கள், 101 இரு சக்கர வாகனங்கள் மற்றும் ட்ரோன்களுடன் ₹354 கோடி நிதி ஒதுக்கீட்டில் இந்தச் சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது.

விவசாயம் மற்றும் நீர் மேலாண்மை

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

  • பயிர்க்கடன் தள்ளுபடி: கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் ₹75,000 வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு 100% முழுமையாகவும், மற்ற விவசாயிகளுக்கு ₹35,000 வரையிலும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 14.43 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர் (அரசிற்கு ₹6,000 கோடி கூடுதல் செலவு ஏற்படும்).

  • நீர்நிலைகள் தூர்வாருதல்: ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகள், மட்பாண்டத் தொழிலாளர்கள் இலவசமாக எடுக்க 18,274 நீர்நிலைகள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.

  • முல்லைப் பெரியாறு & மேகதாது: முல்லைப் பெரியாறில் கேரளா புதிய அணை கட்டுவதைத் தடுக்கவும், நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். கர்நாடகாவின் மேகதாது அணைத் திட்டத்தைத் தடுக்கச் சட்ட நடவடிக்கைகள் தொடரும்.

இதர முக்கியத் திட்டங்கள் மற்றும் கொள்கைகள்

  • மதுக்கடைகள் மூடல்: வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500 மீட்டர் தொலைவில் இருந்த 717 மதுபானச் சில்லறை விற்பனைக் கடைகள் முதற்கட்டமாக மூடப்பட்டுள்ளன.

  • செயற்கை நுண்ணறிவு (AI) கவனம்: தகவல் தொழில்நுட்பத் துறையின் வரம்பு செயற்கை நுண்ணறிவையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டு, மின்-ஆளுமைச் சேவைகளில் AI கருவிகள் பயன்படுத்தப்படும்.

  • தொழில் வளர்ச்சி: 2036-க்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி, ₹200 கோடிக்கும் மேல் முதலீடு செய்யும் நிறுவனங்களை ஈர்க்கத் தலைமைச் செயலாளர் தலைமையில் “தமிழ்நாடு முதலீட்டாளர் ஊக்குவிப்பு ஆணையம்” அமைக்கப்படும்.

  • தமிழர் நாகரிக மீட்டுருவாக்கம்: கீழடி, ஆதிச்சநல்லூர் ஆகிய தளங்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற முயற்சிப்பதோடு, ஆதிச்சநல்லூர், கொடுமணல், கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய பண்பாட்டுத் தளங்களில் மிகை மெய்ம்மை மற்றும் மெய்நிகர் தோற்றம் (AR/VR) தொழில்நுட்பங்கள் மூலம் தமிழர் நாகரிகம் காட்சிப்படுத்தப்படும்.

  • ஒலிம்பிக் உயர்திறன் மையங்கள்: எதிர்கால ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர்களை உருவாக்க உலகத்தரம் வாய்ந்த “Olympic Centres of Excellence” அமைக்கப்படும்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப, படை பலம், பண பலம், அதிகார பலத்தைத் தாண்டி மக்களின் பேராதரவோடு அமைந்துள்ள இந்த அரசு, ஊழலற்ற, நேர்மையான, வெளிப்படையான மக்கள் நல அரசாகத் திகழும் என்ற உறுதியோடு ஆளுநர் தனது உரையை நிறைவு செய்தார்.

உடனடி செய்திகள்