விஜய் சேதுபதி-க்கும் வில்லனாகிறார் கெளதம் வாசுதேவ் மேனன்!
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் எல் எல் பி இணைந்து ‘மைக்கேல்’ என்ற புதிய ஆக்சன் எண்டர்டெய்னர் படத்தை தயாரிக்கிறது. இதில் இளம் நட்சத்திர நடிகர் சந்தீப் கிஷன் முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி அதிரடியான சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தை இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கவிருக்கிறார்.
இந்த படத்தில் தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும், நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடிக்கிறார். பல சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் சில படங்களிலும், வலைத்தளத் தொடர்களிலும் நடித்து தன்னுடைய நடிப்புத்திறமையையும் வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். அவர் இந்த படத்தில் இணைந்திருப்பது ‘மைக்கேல்’ படத்தைப் பற்றிய எதிர்ப்பார்ப்பை எகிறவைத்திருக்கிறது.
நல்ல திரைக்கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் தனி முத்திரை படைத்து வரும் இளம் நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதியுடன் கௌதம் வாசுதேவ் மேனனும் இந்த படத்தில் இணைந்திருப்பதால் ‘மைக்கேல்’ படத்தின் நட்சத்திர அந்தஸ்து உயர்ந்து, மல்டி ஸ்டார் படமாகவும், திறமையான கலைஞர்கள் இணைந்து பணியாற்றும் படைப்பாகவும் உருவாகிறது.
இந்த படத்தில் முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடிக்கும் சந்தீப் கிஷன் புரட்சிக்கரமான எழுத்தாளர் ஒருவரின் தீவிர ஆதரவாளராக நடிக்கிறார். ‘மைக்கேல்’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக வெளியிடப்பட்ட போஸ்டரில் இரத்தம் தோய்ந்த கையும், கைவிலங்கும் இடம்பெற்றிருந்தது. இது படத்தின் கதாப்பாத்திரங்களைப் பற்றி ரசிகர்களிடத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி, வரவேற்பையும் பெற்றது.
இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி ‘மைக்கேல்’ படத்திற்கு வித்தியாசமான திரைக்கதையை எழுதியிருக்கிறார். பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகவிருக்கும் இந்த படத்தை தயாரிப்பாளர்கள் பரத் சௌத்ரி மற்றும் புஷ்கர் ராம்மோகன் ராவ் ஆகியோர் தயாரிக்க, நாராயண் தாஸ் கே நரங் வழங்குகிறார்.
சந்தீப் கிஷன், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் இணைந்திருப்பதால் ‘மைக்கேல்’ படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் ஆர்வமும், எதிர்பார்ப்பும் உருவாகியிருக்கிறது.