தேவையா இது மாதிரியான ஆணையம் – சுப்ரீம் கோர்ட் கேள்வி!

தேவையா இது மாதிரியான ஆணையம் – சுப்ரீம் கோர்ட் கேள்வி!

றுமுகசாமி ஆணையம் என்ன மாதிரியான விசாரணை முறைகளை கடைபிடிக்கிறது என்பது தொடர்பாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கு விசாரணைய நாளைக்கு ஒத்தி வைத்தது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடைகோரி சுப்ரீம் கோர்ட்டில் அப்போலோ மருத்துவமனை சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில், ஆறுமுகசாமி ஆணையம் உண்மை கண்டறியும் குழு தானே தவிர நிபுணர் குழு அல்ல என்றும், அதில் மருத்துவர்கள், நிபுணர்கள் இருக்க வேண்டியது கட்டாயம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பான உண்மைகளை மக்களுக்கு சொல்வது மிக மிக முக்கியம். மருத்துவமனை தரப்பில் என்ன மருந்துகள் ஜெயலலிதாவிற்கு கொடுத்தது, என்ன சிகிச்சையை வழங்கியது போன்ற விவரங்கள் எல்லாம் வெளிப்படையாக தெரியவேண்டும். அதை தான் ஆணையம் செய்து வருகிறது. ஆறுமுகசாமி ஆணையம் ஓர் உண்மை கண்டறியும் ஆணையம். அதன் வேலை உண்மைத் தகவல்களை திரட்டி வழங்குவது மட்டும்தான். ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்க எந்த மறுப்பும் இல்லை.

சுப்ரீம் கோர்ட் விரும்பினால் அதனை செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால், எய்ம்ஸ் போன்ற மருத்துவமனையில் இருந்து நாங்கள்தான் அந்த மருத்துவர்களைத் தேர்ந்தெடுப்போம். அதில் அப்போலோ தலையிடக் கூடாது. ஆணையத்தில் ஏதேனும் தவறுகள் இருப்பதை சுட்டிக்காட்டினால் அதனை சரி செய்ய தயாராக இருக்கிறோம். ஆணையத்தை விரிவாக்க வேண்டும் என நீதிமன்றம் சொன்னால் அதனை செய்வதற்கும் தயாராக உள்ளோம்.

ஆணையம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறது என்பதை ஏற்க முடியாது. மனு மீது மனுவை தாக்கல் செய்து ஆணையத்தின் செயல்பாட்டை தடுக்கவே அப்பல்லோ முயற்சிக்கிறது. ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்பதும் நிராகரிப்பதும் அரசின் முடிவு. அதில் கூட ஆணையம் தலையிட முடியாது. இவ்வாறு தமிழக அரசு வாதிட்டது.

இதனை தொடர்ந்து பேசிய நீதிபதிகள், பெரும்பாலான ஆணையங்களின் முடிவுகள் எதுவுமே தெரியாமல்தான் இருந்துள்ளது. அதன் முடிவுகள் எதுவும் பொதுமக்கள் பார்வைக்கு கொடுக்கப்படவில்லை. பிறகு எதற்கு இத்தகைய ஆணையங்களை அமைக்கிறீர்கள்?,’ எனக் கேள்வி எழுப்பி இந்த ஆணையத்தின் அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டவுடன் அதன் மீது விவாதம் நடக்குமா என கேள்வி எழுப்பினர். நிச்சயம் விவாதம் நடக்கும் எனக்கூறிய தமிழ்நாடு அரசு, அந்த விவாதத்தில் எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி அரசும் கூட கேள்விகளை கேட்கும் என குறிப்பிட்டது. குறிப்பாக கிரிமினல் நடவடிக்கையா? சிவில் நடவடிக்கையா? அல்லது ஆணையத்தின் முடிவுகளை நிராகரிப்பதா? என்பது அப்போதுதான் முடிவு செய்யப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஆறுமுகசாமி ஆணையம் என்ன மாதிரியான விசாரணை முறைகளை கடைபிடிக்கிறது என்பது தொடர்பாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

error: Content is protected !!