’கட்டா குஸ்தி 2’ – விமர்சனம்!
முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அதே சுவாரஸ்யத்துடனும் கூடுதல் குடும்ப செண்டிமெண்ட்டுடனும் வெளியாகியிருக்கிறது ‘கட்டா குஸ்தி 2’. முதல் பாகத்தின் முடிவில் நாயகன் சொல்லும் ஒரு சிறிய வசனத்தை அடித்தளமாக வைத்துக் கொண்டு, இரண்டரை மணி நேரத்திற்கான ஒரு முழுமையான திரைக்கதையை அமைத்து, அதில் தம்பதியினர் இடையே ஏற்படும் மோதல்களுக்கான காரணங்களையும் தீர்வையும் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் செல்லா அய்யாவு.
கணவன் – இல்லத்தரசன்; மனைவி – தேசிய வீராங்கனை!
முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே இந்த இரண்டாம் பாகத்தின் கதையும் பயணிக்கிறது. குழந்தை பிறந்ததால் இனி தன்னால் குஸ்தி விளையாட்டில் பங்கேற்க முடியாது என்று கவலைப்படும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு, “முயற்சித்தால் சாதிக்க முடியும்” என்ற நம்பிக்கையையும் ஊக்கத்தையும் கொடுக்கிறார் கணவர் விஷ்ணு விஷால். வெறும் வார்த்தைகளோடு நின்றுவிடாமல், மனைவிக்காக வீட்டையும் குழந்தையையும் விஷ்ணு விஷாலே கவனித்துக் கொள்கிறார்.
விஷ்ணுவின் இந்த ஆதரவால் ஐஸ்வர்யா லட்சுமி தொடர்ந்து போட்டிகளில் வென்று தேசிய அளவிலான போட்டிக்குத் தயாராகிறார். இதற்கிடையே, இவர்களது மகள் சரியாகப் படிக்கவில்லை என்ற தகவல் தெரிய வருகிறது. அப்பா செல்லத்தால் மகள் கெட்டுப் போய்விடுவாளோ என்ற அச்சத்தில், அவளைக் கண்டிப்புடன் வளர்க்கத் தொடங்கும் ஐஸ்வர்யா லட்சுமி, மகளையும் ஒரு குஸ்தி வீராங்கனையாக்க முயல்கிறார்.
குழந்தையின் விருப்பத்திற்கு மாறாக நடக்கும் ஐஸ்வர்யா லட்சுமிக்கும், விஷ்ணு விஷாலுக்கும் இடையே இதனால் கருத்து வேறுபாடு எழுகிறது. இந்தச் சிறு விரிசல், ஐஸ்வர்யாவின் விளையாட்டு கனவைச் சிதைப்பதோடு விவாகரத்து கேட்கும் சூழல் வரை கொண்டு செல்கிறது. சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்பட்ட இந்தத் தவறுகளைச் சரிசெய்து, விஷ்ணு விஷால் மீண்டும் மனைவியுடன் இணைந்தாரா இல்லையா என்பதை குடும்பங்கள் கொண்டாடும் வகையில் நகைச்சுவையோடும் உணர்வுப்பூர்வமாகவும் சொல்கிறது மீதிக்கதை.
விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமியின் மிரட்டல் கூட்டணி
நாயகன் விஷ்ணு விஷால், மாஸ் ஹீரோ என்ற பிம்பத்தைத் தள்ளிவைத்துவிட்டு, மனைவியின் திறனை மதித்து அவளது வெற்றிக்குப் பக்கபலமாக இருக்கும் ஒரு சிறந்த கணவராகப் பெண்கள் மனதில் இடம்பிடிக்கிறார். அதே சமயம், ஆக்ஷன் காட்சிகளிலும், “அப்படி போடு.. போடு..” பாடலுக்கு டீச்சருடன் போடும் ஆட்டத்தின் மூலமும் திரையரங்கையே அதிர வைக்கிறார். ஒரு முழுமையான இல்லத்தரசன் கதாபாத்திரத்தை மிகக் கச்சிதமாகக் கையாண்டு அசத்தியிருக்கிறார்.
ஐஸ்வர்யா லட்சுமி இந்தத் திரைக்கதையின் மிகப்பெரிய பலம். குஸ்தி களத்தில் எதிராளியுடன் மல்லுக்கட்டும் முரட்டுத்தனத்தை வெளிப்படுத்தும் அவர், கணவரிடம் காதலை வெளிப்படுத்தும் “சம்பவக்காரி…” பாடலில் தனது நடன அசைவுகள் மூலம் தரமான சம்பவம் செய்திருக்கிறார். கிளைமாக்ஸில் கணவருக்கு எதிராக குஸ்தி களத்தில் எண்ட்ரி கொடுத்து, புடவையோடு அவர் மல்லுக்கட்டும் காட்சிகள் மிரட்டல் ரகம்.
அப்ளாஸ் வாங்கும் சாரா மற்றும் நகைச்சுவைக் பட்டாளம்
விஷ்ணு – ஐஸ்வர்யா தம்பதியின் மகளாக நடித்திருக்கும் குழந்தை நட்சத்திரம் சாரா, நடிப்பில் பெற்றோரையே மிஞ்சும் அளவுக்கு ஸ்கோர் செய்திருக்கிறார். அம்மாவுக்கு இணையாகக் கோபம் கொள்வது, அப்பாவுடன் ஆட்டம் போடுவது, நீதிமன்றத்தில் நீதிபதியிடம் முறையிடுவது என அவரது சுட்டித்தனம் அனைத்தும் அக்மார்க் அழகு.
முதல் பாகத்தைப் போலவே கருணாஸ் தன் நகைச்சுவை காட்சிகள் மூலம் சிரிப்புச் சரவெடியைக் கொளுத்திப் போட்டிருக்கிறார். ஆண் பெருமை பேசிக் கொண்டிருந்த அவருக்கு ஏற்படும் நிலைமையும், அதை அவர் வெளிப்படுத்தும் விதமும் தியேட்டரில் அனல் பறக்கும் சிரிப்புக்கு உத்தரவாதம்.
டீச்சர் கதாபாத்திரத்தில் வரும் மோக்ஷா, ‘நாட்டாமை’ டீச்சரின் பாதிப்பாக வலம் வந்தாலும் தனது அளவான ஆட்டத்தின் மூலம் கவனம் ஈர்க்கிறார். முனிஷ்காந்த், காளி வெங்கட், லிஸி ஆண்டனி, கஜராஜ், ஸ்ரீஜா ரவி, கருணாகரன் ஆகியோர் டைமிங் காமெடி வசனங்கள் மூலம் படத்திற்குப் பலம் சேர்த்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் வரும் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு இருவரின் பங்களிப்பும் படத்திற்குப் கூடுதல் சிறப்பு.
தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு
ஒளிப்பதிவாளர் கே.எம்.பாஸ்கரன் படம் முழுவதையும் கண்களுக்குக் காட்சி விருந்தாகப் படைத்திருக்கிறார். குறிப்பாகக் கிளைமாக்ஸ் குஸ்தி சண்டைக் காட்சியை மிகச் சிறப்பாகப் படமாக்கியுள்ளார். ஷான் ரோல்டனின் இசையில் “சம்பவக்காரி..” பாடல் தியேட்டரில் முணுமுணுக்க வைப்பதோடு, ரீல்ஸ் உலகிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். பின்னணி இசையும் காட்சிகளுக்குத் தகுந்தபடி பயணித்துள்ளது. பரத் விக்ரமனின் படத்தொகுப்பு இரண்டரை மணி நேரப் படத்தை எங்கும் தொய்வில்லாமல் நகர்த்திச் சென்றுள்ளது.
பிளஸ் & மைனஸ்
பலங்கள்:
-
விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமியின் கெமிஸ்ட்ரி மற்றும் இயல்பான நடிப்பு.
-
இரண்டாம் பாதியில் எதைப்பற்றியும் யோசிக்க விடாமல் சிரிக்க வைக்கும் காமெடி காட்சிகள்.
-
இயல்பான குடும்பப் பிரச்சனைக்கு அறிவுரை பாணியில் இல்லாமல் சுவாரஸ்யமாகச் சொன்ன தீர்வு.
பலவீனங்கள்:
-
முதல் பாகத்தில் இருந்த அளவிற்கான பெரிய திருப்பங்கள் (Twists) இதில் இல்லை.
-
சில காட்சிகள் எளிதில் கணிக்கக்கூடிய வகையில் அமைந்திருப்பது.
இருப்பினும், குடும்ப செண்டிமெண்ட் காட்சிகளும், விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் நகைச்சுவையும் இந்தச் சிறு குறைகளை முற்றிலுமாக மறக்கடித்து விடுகின்றன.
தற்போது தமிழ் சினிமாவில் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக்கூடிய சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படங்களின் வருகை குறைந்துவிட்டது என்ற மக்களின் மனக்குறையை இந்தப்படம் போக்கியுள்ளது. முழுக்க முழுக்க நகைச்சுவை பாணியில் ஒரு ஆழமான கருத்தைச் சொன்ன விதத்தில் இயக்குநர் செல்லா அய்யாவு மீண்டும் ஜெயித்திருக்கிறார்.
மொத்தத்தில், ‘கட்டா குஸ்தி 2’ மக்களை குஷிப்படுத்தும்!


