இருளுக்குள் ஒளிரும் அசல் பயம்: ‘டார்க்’ திரைப்பட விமர்சனம்!

இருளுக்குள் ஒளிரும் அசல் பயம்: ‘டார்க்’ திரைப்பட விமர்சனம்!

ரு சிறந்த திகில் திரைப்படம் என்பது பேய் அல்லது அமானுஷ்ய சக்திகளை மட்டும் நம்பி உருவாகும் படைப்பு அல்ல; புதுமையான கதை, வலுவான திரைக்கதை, மர்மம் நிறைந்த சூழல், இயல்பான கதாபாத்திரங்கள், பதற்றத்தை மெதுவாக உயர்த்தும் காட்சியமைப்பு என அனைத்தும் ஒன்றிணைந்தால்தான் சாத்தியம். அப்படி மாற முயன்று, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது இந்த ‘டார்க்’ திரைப்படம்.

காமெடி கலந்து பேய் படங்களை கிண்டலடித்துக் கொண்டிருந்த தமிழ் சினிமாவில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு பார்வையாளர்களைத் தியேட்டர் இருக்கையின் நுனிக்கே கொண்டு வந்து, படம் முழுவதும் ஒருவித படபடப்பைத் தக்கவைப்பதில் இந்தத் திரைப்படம் தனித்து நிற்கிறது.

வாடகை வீடும்… தொடரும் மரணங்களும்…

கே.பாக்யராஜின் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் மூன்று இளைஞர்களில் ஒருவர், மற்ற இருவரைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொள்கிறார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அந்த வீடு காலியாகக் கிடக்கிறது. விபரீதம் தெரிந்தும், குறைந்த வாடகை என்பதால் தைரியமாக அந்த வீட்டிற்குள் குடிவருகிறார் நாயகன் அஜய் கார்த்திக்.

சில தினங்களிலேயே அமானுஷ்ய சம்பவங்களை எதிர்கொள்ளும் அஜய், ஒருகட்டத்தில் தன்னைத்தானே கொடூரமாகத் தாக்கிக்கொண்டு இறந்துபோகிறார். வீட்டு உரிமையாளரான பாக்யராஜும் மரணமடைகிறார். இந்த மர்ம மரணங்களை விசாரிக்க வரும் காவல்துறை அதிகாரி நட்டிக்கு, சடலமாகக் கிடந்த அஜய் திடீரென எழுந்து ஒரு எச்சரிக்கை விடுத்து மீண்டும் சரிவது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. அதன் பிறகு நட்டி நடத்தும் தீவிர விசாரணையில் வெளிப்படும் திடுக்கிடும் உண்மைகளே படத்தின் மீதிக் கதை.

நடிப்பில் மிரட்டிய முதன்மைக் கூட்டணி

கதையின் நாயகன் அஜய் கார்த்திக், பேய் வீடு என்று தெரிந்தும் தைரியமாக நுழையும் நடுத்தர இளைஞனாக அறிமுகமாகி, நாளுக்கு நாள் அங்கு நடக்கும் அமானுஷ்யங்களால் மன ரீதியாகப் பாதிக்கப்படும் நிலையைத் தன் அசாத்திய நடிப்பால் கடத்தியுள்ளார். அழுத்தமான கதாபாத்திரத்தை அளவாகக் கையாண்டு படத்திற்குப் பெரும் பலம் சேர்த்துள்ளார்.

காவல்துறை அதிகாரியாக வரும் நட்டி, வழக்கமான வழக்காக விசாரணையைத் தொடங்கி, அதன் விசித்திரப் பின்னணியை உணர்ந்து அதிரும் இடங்களில் அசல் போலீசாக மிளிர்கிறார். வீட்டு உரிமையாளராக வரும் கே.பாக்யராஜ், தனது அனுபவமிக்க திரை இருப்பால் படத்திற்குத் தேவையான முதிர்ச்சியைத் தந்துள்ளார். அஞ்சனா நேத்ரன், விடிவி கணேஷ், இந்துமதி மணிகண்டன், சிபி சக்கரவர்த்தி ஆகியோர் சிறிய வேடங்களில் வந்தாலும் திரைக்கதையோடு கச்சிதமாகப் பயணிக்கிறார்கள்.

தொழில்நுட்பக் கலைஞர்களின் அசாத்தியக் கூட்டணி

இருட்டையே ஒரு கதாபாத்திரமாக மாற்றியுள்ளார் ஒளிப்பதிவாளர் ரவி சக்தி. வெறும் இருளை மட்டும் காட்டாமல், அதற்குள் ஏதோ ஒரு மர்மம் ஒளிந்திருப்பது போன்ற உணர்வை நுணுக்கமான லைட்டிங் மூலம் தந்துள்ளார். பயங்கரமான சத்தங்களை வைத்து மிரட்டும் வழக்கமான பாணியைத் தவிர்த்து, மௌனத்தையும் மெல்லிய ஓசைகளையும் கொண்டே தியேட்டரில் அமைதியின்மையை உருவாக்கியுள்ளார் இசையமைப்பாளர் மனு ரமேஷ்.

எந்த நொடியில் என்ன நடக்கும் என்று கணிக்க முடியாதபடி நேர்த்தியாகப் படத்தொகுப்பு செய்துள்ளார் கதிரேஷ் அலகேஷன். வீட்டைப் பார்த்தாலே ஒருவித நடுக்கத்தை வரவழைக்கும் கலை இயக்குநர் சண்முகராஜாவின் உழைப்பு பாராட்டத்தக்கது.

இயக்குநரின் முத்திரை

எழுதி இயக்கியிருக்கும் கல்யாண் கே.ஜெகன், வழக்கமான பேய் கதையை உளவியல் ரீதியாகக் கையாண்ட விதம் படத்தைக் கூடுதல் உயரத்திற்கு எற்றுகிறது. மௌனத்தை வைத்தே பதற்றத்தை அதிகரிக்கச் செய்த இவரது இயக்கம், படம் முடிந்த பிறகும் மனதில் ஒரு பயத்தை நீடிக்கச் செய்கிறது.

Aanthaiyaar Review Verdict

Dark: Solid Psychological Horror Done Right!

The movie delivers proper scares and a gripping narrative that holds you till the very end. The intense ‘Bhoothakaalam’ vibe is exceptionally strong here!

ஆந்தையார் ரேட்டிங்: 3.75 / 5