நீலப் புள்ளியிலிருந்து நட்சத்திரங்கள் வரை:உலக விண்வெளி வீரர்கள் தினக் குறிப்பு!
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 12 அன்று, பூமி என்ற இந்தச் சிறிய நீலப் புள்ளியிலிருந்து எழுந்து, முடிவில்லாத கருமை படர்ந்த விண்வெளியின் மர்மங்களைத் துணிச்சலுடன் எதிர்கொண்ட மனிதர்களை உலகம் வியப்புடன் நினைவுகூர்கிறது. இது உலக விண்வெளி வீரர்கள் தினம் (International Day of Human Space Flight). இந்தத் தினம் வெறுமனே தேதியில் குறிக்கப்பட்ட ஒன்றல்ல; இது மனித இனத்தின் அடக்க முடியாத ஆர்வத்தின், அறிவியலின் உச்சத்தின் மற்றும் எல்லைகளற்ற துணிச்சலின் அடையாளம்.
1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 12. உலகம் மூச்சடைக்கி நின்ற நாள். சோவியத் விண்வெளி வீரர் யூரி ககாரின், ‘வோஸ்டோக் 1’ (Vostok 1) விண்கலத்தில் ஏறி, பூமியின் ஈர்ப்பு விசையைத் தூக்கியெறிந்து விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதரானார். வெறும் 108 நிமிடங்கள். ஆனால், அந்தச் குறுகிய காலப் பயணம், “பூமி மிகவும் அழகாக இருக்கிறது, அதை நாம் பாதுகாக்க வேண்டும்” என்ற ககாரினின் வரிகளோடு, மனித வரலாற்றை என்றென்றைக்குமாக மாற்றியெழுதியது. அந்த விண்வெளி யுகத்தின் பிரம்மாண்டமான தொடக்கத்தைக் கொண்டாடவே, 2011-ல் ஐக்கிய நாடுகள் சபை இத்தினத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

2026 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் முழக்கம் மிகவும் ஆழமானது: “A Tribute to Exploration, Unity, and Progress” (ஆய்வு, ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்திற்கான அஞ்சலி). இது விண்வெளிப் பயணத்தின் கடந்த கால வீரத்தையும், நிகழ்காலத்தின் கூட்டு முயற்சியையும், வருங்காலத்தின் தேடலையும் கச்சிதமாக இணைக்கிறது.
விண்வெளி என்பது வியப்புகளின் இருப்பிடம். அங்கே ஒலியும் இல்லை, காற்றும் இல்லை, ஆனால் கோடானு கோடி விண்மீன்களும், கருந்துளைகளும், மர்மங்களும் உள்ளன. ‘ஆய்வு’ என்பது அந்த மர்மங்களை அவிழ்க்கும் ஓயாத முயற்சி. இன்று நாம் வெறும் பூமியைச் சுற்றுவதோடு நின்றுவிடவில்லை. சந்திரனுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் Artemis II போன்ற திட்டங்கள், செவ்வாய் கிரகத்தில் மனிதக் குடியேற்றத்திற்கான கனவுகள் என நமது ஆய்வு எல்லை விரிவடைந்து கொண்டே போகிறது. வியாழனின் நிலவுகளில் உயிர் தேடுவது முதல், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் பிரபஞ்சத்தின் ஆதி காலத்தைப் பார்ப்பது வரை, மனிதனின் தேடல் முடிவற்றது.
பூமியில் நாம் நாடுகளாகவும், மொழிகளாகவும், கொள்கைகளாலும் பிரிந்திருக்கலாம். ஆனால், விண்வெளியிலிருந்து பார்க்கும்போது பூமிக்கு எல்லைகள் இல்லை. அது ஒரு சிறிய, அழகான, உடையக்கூடிய வீடு. சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) இதற்கொரு மிகச்சிறந்த உதாரணம். பகை நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்களும் அங்கே ஒன்றாக இணைந்து, மனிதகுலத்தின் நன்மைக்காகப் பணியாற்றுகிறார்கள். விண்வெளி ஆய்வு என்பது ஒரு தேசத்தின் வெற்றியல்ல, அது ஒட்டுமொத்த மனித இனத்தின் கூட்டுச் சாதனை. இந்த ‘ஒற்றுமை’ தான் அமைதியான விண்வெளி பயன்பாட்டிற்கும், வருங்கால விண்வெளி நிலையங்களுக்கும் அடித்தளம்.
விண்வெளிக்குச் செல்வது என்பது ஏதோ சிலரின் சாகசம் மட்டுமல்ல, அது பூமியில் வாழும் பில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதுமாகும். அதுதான் ‘முன்னேற்றம்’. இன்று நாம் பயன்படுத்தும் GPS, துல்லியமான வானிலை முன்னறிவிப்பு, அதிவேக செயற்கைக்கோள் தகவல் தொடர்பு, பேரிடர் மேலாண்மை என அனைத்தும் விண்வெளி தொழில்நுட்பத்தால் சாத்தியமானவை. மேலும், விண்வெளியின் மைக்ரோ கிராவிட்டி சூழலில் செய்யப்படும் ஆராய்ச்சிகள் மருத்துவத் துறை, புதிய பொருட்கள் உருவாக்கம் மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDGs) எட்ட உதவுகின்றன. பூமியைப் பேணிக் காக்க விண்வெளியை அறிவது இன்றியமையாதது.
உலக விண்வெளி வீரர்கள் தினம் என்பது ஒரு கொண்டாட்டம் மட்டுமல்ல, அது ஒரு நினைவூட்டல். நாம் வெறும் தரையில் ஊர்ந்து செல்பவர்கள் அல்ல, நட்சத்திரங்களை எட்டத் துடிக்கும் விண்மீன் தூசுகள் (Stardust) என்பதை இது உணர்த்துகிறது. யூரி ககாரின் தொடங்கி, இன்று விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள் வரை அனைவரின் துணிச்சலையும் போற்றுவோம். அவர்கள் நமக்காகத் திறந்து வைத்த கதவு வழியே, நாமும் பிரபஞ்சத்தின் வியப்புகளை நோக்கித் தொடர்ந்து பயணிப்போம். நம் தேடல் தொடரும்.
வாத்தீஅகஸ்தீஸ்வரன்


