June 7, 2023

வன்முறைக் களமான டெல்லி : கண்ணீர்ப் புகை, தடியடி, உயிரிழப்பு! – வீடியோக்கள்!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் சார்பில் இன்று நடந்துவரும் டிராக்டர் பேரணியில் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, கூட்டத்தைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். இந்நிலை யில் இந்த பேரணியின்போது, சில விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் செங்கோட்டைக்குள் தடையை மீறி நுழைந்தனர். அங்குள்ள கொடிக் கம்பத்தின் மீது ஏறி கொடிகளைப் பறக்க விட்டனர். இந்த கொடி காலிஸ்தான் கொடி என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. சிலர் இந்தியாவை காலிஸ்தான் பயங்கரவாதிகள் கைப்பற்றி விட்டனர். செங்கோட்டையில் கொடியேற்றி விட்டனர் என்று கூறத்தொடங்கினர். இதற்கு சிலர் இந்திய கொடியும் அங்க பறக்கிறது என்று எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்நிலையில் அங்கிருந்த செய்தியாளர்கள் அவை காலிஸ்தான் கொடி அல்ல என உறுதி செய்துள்ளனர்.

மோடி அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் சீர் திருத்த புதிய சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், குடியரசுதினமான இன்று, டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தினர். அவர்கள், பல்வேறு குழுக்களாகப் பிரிந்து டெல்லிக்குள் நுழைந்தனர். ஆனால் டெல்லி முபாரக் சவுக் பகுதியில் போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை மீறி விவசாயிகள் உள்ளே வர முயன்றனர். அப்போது போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், கூட்டத்தினரைக் கலைக்க கண்ணீர் புகைகுண்டுகளை போலீசார் வீசினர்.

சில பகுதிகளில் கற்களை வீசித் தாக்கியதில் அரசுப் பேருந்துகளும் போலிஸ் வாகனங்களும் சேதமடைந்தன. டிராக்டர்களுடன் செங்கோட்டைக்குள் நுழைந்த விவசாயிகள், அதன் உச்சியில் கொடியையும் ஏற்றினர். கண்ணீர்ப் புகைக் குண்டு ஒன்றைப் பிடித்து போலிசார் இருக்கும் பக்கத்திலேயே விவசாயி வீசினார். விவசாயிகள்-போலிசார் இடையிலான மோதலால் டெல்லி வன்முறைக் களமாகக் காட்சியளித்தது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் பத்து மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. சிங்கு, திக்ரி, காசிப்பூர், முகர்பா சௌக், நாங்லோய் ஆகிய எல்லைகளிலும் அதையொட்டிய பகுதிகளிலும் இணையச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

விவசாயிகளுக்கு ஆதரவாக வந்திருந்த ஆயுதம் தாங்கிய சீக்கிய வீரர்கள் (குதிரையில்), போலிசாரை விரட்டி அடிக்க முயற்சி செய்தனர். டெல்லி ஐடிஒ பகுதிக்கு அருகே டிராக்டர் கவிழ்ந்ததில் உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நவநீத் சிங் என்ற விவசாயி இறந்து விட்டதாக போலிஸ் தெரிவித்தது. ஆனால், அவர் டெல்லி போலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட தாக போராடிய விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.

பேரணியின்போது இடம்பெற்ற வன்முறை நிகழ்வுகளுக்குக் கண்டனம் தெரிவித்த விவசாயச் சங்கங்கள், தீங்கு விளைவிக்கும் நோக்குடன் சமூக விரோதிகளும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தோரும் பேரணிக்குள் ஊடுருவிவிட்டதாகத் தெரிவித்தன. கிசான் மஸ்தூர் சங்கர்ஸ் அமைப்பின் தலைவர் சத்னம் சிங் பன்னு கூறுகையில், “திக்ரி எல்லையில் வந்த எங்களை ரிங்ரோடு பகுதிக்குச் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. முபாரக் சவுக் பகுதியிலேயே தடுப்புகளை அமைத்துத் தடுக்கிறார்கள். அமைதியான முறையில்தான் பேரணி நடக்கிறது. போலீசாருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

போலீஸ் இணை ஆணையர் எஸ்.எஸ்.யாதவ் கூறுகையில், “போலீசாருடன் விவசாயிகள் ஒத்துழைத்து வருகிறார்கள். எந்தப் பிரச்சினையும் இல்லை” எனத் தெரிவித்தார்.

இதனிடையேதான் பேரணியின்போது, சில விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் செங்கோட்டைக்குள் தடையை மீறி நுழைந்தனர். அங்குள்ள கொடிக் கம்பத்தின் மீது ஏறி கொடிகளைப் பறக்க விட்டனர்.இந்த கொடி காலிஸ்தான் கொடி என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. சிலர் இந்தியாவை காலிஸ்தான் பயங்கரவாதிகள் கைப்பற்றி விட்டனர். செங்கோட்டையில் கொடியேற்றி விட்டனர் என்று கூறத்தொடங்கினர். இதற்கு சிலர் இந்திய கொடியும் அங்க பறக்கிறது என்று எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்நிலையில் அங்கிருந்த செய்தியாளர்கள் அவை காலிஸ்தான் கொடி அல்ல என உறுதி செய்துள்ளனர்.