’எக்ஸ்ட்ரீம்’ -பட விமர்சனம்!

’எக்ஸ்ட்ரீம்’ -பட விமர்சனம்!

மிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் ஓவ்வொரு 2 மணி நேரத்திற்கும் ஒரு பெண் குழந்தை மீது பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்படுவதாக தெரிகிறது. தமிழகத்தில் மகளிருக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவது கவலையளிக்கும் சூழலில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பது மற்றும் போதை கலாச்சாரம் அதிகரிப்பது போன்ற விசயங்களை பிரச்சாரமாக அல்லாமல் கமர்ஷியலாகவும், கதைக்கு தேவையானதாகவும் காட்சிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார் டைரக்டர் ராஜவேல் கிருஷ்ணா. பொதுவாக பாலியல் வன்கொடுமைகளின் பின்னணியாக சொல்லப்படும் பல காரணங்கள் உண்டு. ஆனால் இதுவரை திரையில் சொல்லப்படாத ஒரு காரணத்தை கதைக்கருவாக வைத்துக்கொண்டு மக்களுக்கு கருத்து தேவையானதை சொல்லியிருப்பதோடு, சினிமா ரசிகர்களை திருப்திப்படுத்தும் கமர்ஷியல் படமாகவும் ‘எக்ஸ்ட்ரீம் என்ற டைட்டிலில் கொடுத்து கவர்ந்து விட்டார்.

கதை என்னவென்றால் புதிதாக கட்டிடம் கட்டும் இடத்தில் கான்கிரீட் தூணில் இருந்து ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்படுகிறது. கொலை செய்யப்பட்டு, அந்த பெண்ணை கான்கிரீட் கலவையோடு சேர்த்து அதில் வைத்துள்ளனர். இந்த வழக்கை விசாரிக்கிறார் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் நாகராஜ். விசாரணையில் கொல்லப்பட்டது வீட்டு வேலை செய்யும் பெண்ணின் மகளான அபிநக்‌ஷத்ரா என்று தெரிய வருகிறது. தொடர்ந்து இந்த கொலையை செய்தது யார் என்று தெரியாமல் அழைந்து கொண்டிருக்கிறார் ராஜ்குமார். இச்சமயத்தில், அந்த காவல்நிலையத்திற்கு புதிதாக சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு வருகிறார் ரச்சிதா. அபி நக்‌ஷத்ராவின் கொலை வழக்கை ரச்சிதாவும் விசாரிக்க ஆரம்பிக்கிறார். இறுதியில் குற்றவாளிகளை இருவரும் கண்டுபிடித்தார்களா இல்லையா.? எதற்காக இந்த கொலை சம்பவம் நடந்தது என்பதே எக்ஸ்ட்ரீம்.

சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சின்னத்திரை பிரபலம் ரச்சிதா மகாலட்சுமி, போலீஸ் உடையில் கம்பீரமாக இருக்கிறார். விஜயசாந்தி போல் அதிரடியான சண்டைக்காட்சிகள் இல்லை என்றாலும், ஒரு கொலை வழக்கை விசாரிக்கும் பெண் போலீஸ் கதாபாத்திரத்தை கவனமுடன் கையாண்டு நியாயம் சேர்த்திருக்கிறார். கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணாக நடித்திருக்கும் அபி நட்சத்திரா, சில பெண்கள் செய்யும் தவறால் பாதிக்கப்படும் அப்பாவி ஏழை பெண்களை பிரதிபலிக்கும்படி நடித்திருக்கிறார்.

இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ராஜ்குமார் நாகராஜ், பார்ப்பதற்கு சீமான் போல் இருக்கிறார். போலீஸ் வேடம் மட்டும் அல்ல அரசியல்வாதி உள்ளிட்ட அனைத்து குணச்சித்திர வேடங்களுக்கும் சரியாக பொருந்தக்கூடிய முகம். சத்தய சீலான் என்ற கதாபாத்திரத்திற்கு சத்தியமாக இவரை விட்டால் வேறு ஆள் இல்லை, என்பது போல் பொருந்துவதோடு, அளவாக நடித்து திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்.

இசை மற்றும் ஒளிப்பதிவு இரண்டுமே படத்திற்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது. ஒரு சில செயற்கையான காட்சிகளை தவிர்த்திருந்திருக்கலாம்.

மாடர்ன் ட்ரெண்ட் என்ற பெயரில் சில பெண்கள் ஆபாசமாக ஆடை அணிவது, சுதந்திரம் என்ற பெயரில் பொதுவெளியிலும், சமூக வலைதளப் பக்கங்களிலும் மேற்கொள்ளும் நாகரீகமற்ற செயல்கள் சில அப்பாவி பெண்களை எப்படி ஆபத்தில் சிக்க வைக்கிறது என்பதை கருவாக கொண்டுள்ளதே இப்படத்தின் சிறப்பு. கூடவே அதை ராஜவேல் கிருஷ்ணா எழுதியிருக்கும் திரைக்கதை சுவாரஸ்யமான கிரைம் திரில்லராக மட்டும் இன்றி பெண்களை யோசிக்க வைக்கும் நல்ல படைப்பாகவும் கவனம் ஈர்க்கிறது.

மொத்தத்தில் இந்த எக்ஸ்ட்ரீம் – ஒர்த் ஃபிலீம்

மார்க் 3.5/5

Related Posts