பள்ளிகளில் ஊசலாடும் உடற்பயிற்சி துறை! அக்கறை காட்டுவார்களா உதயும், மகேஷூம்?

விளையாட்டு போட்டிகளில் இந்தியா ஒவ்வொரு முறை ஒரு பதக்கத்தை இழக்கும்போதும், `பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகளுக்கு ஒழுங்காக அனுமதி வழங்கி இருந்தால் இந்த நிலை ஏன் ஏற்பட போகிறது?’ என்கிற வசனம் எப்போதும் கேட்டு கொண்டே உள்ளது. பள்ளிகளில் எந்த அளவுக்கு உடற்கல்வி வகுப்புகள் முறையாக நடக்கிறது என்பது குறித்து இந்த இடத்தில் கேள்வி கேட்க வேண்டியதும் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை விளையாட்டு போட்டிகள் என்பது பள்ளிக்கல்வி துறை, உயர்கல்வித்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக நடத்தப்பட்டு வருகிறது.உண்மையில் ஒரு விளையாட்டு வீரரின் அடிப்படை பயணமே பள்ளிகளில் இருந்து துவங்கும் நிலையில், பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஆண்டிற்கு ஒரு விளையாட்டு தொடர் மட்டுமே நடத்தப்படுகிறது. வட்டம், மாவட்டம், மாநில அளவுகளில் பல போட்டிகள் நடத்தப்பட்டு வந்தாலும் தமிழகத்தில் உள்ள 95% பள்ளிகளில் படித்து வரக்கூடிய விளையாட்டு வீரர்களின் விளையாட்டு வாழ்க்கை ஆண்டிற்கு அதிகபட்சமாகவே மூன்று மாதங்கள் மட்டுமே. ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவதே இல்லை. அப்படியே நடத்தபட்டாலும், அவை வெறும் பெயரளவில் மட்டுமே நடத்தப்படுவதுண்டு. பள்ளிகளில் உடற்கல்விக்கு தேவையான அடிப்படை வசதிகளை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் இருந்தே முறையான பயிற்சிகள் வழங்பட்டதால் மட்டுமே, ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் எல்லாம் பங்கேற்க முடியும். ஆகவே பள்ளிகளில் விளையாட்டு போட்டிகளை மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அப்போதுதான் அதிக வீரர்களை உருவாக்க முடியும் என்ற கோரிக்கை சில ஆண்டுகளுக்கு முன்னரே எழுந்தது. அதை ஏற்று . பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் , `பள்ளிகளில் மாணவர்களை ஒழுங்குமுறைபடுத்த விளையாட்டு போட்டிகள் என்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது எனவே உடற்கல்வி வகுப்புகள் முறையாக செயல்படும்’ என்று அறிவித்தார். ஆனால் அந்த அறிவிப்பு பின்னர் காற்றில் பறந்து போய் விட்டது.

தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் 31,336 பள்ளிகளும், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 6,029 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது. தனியார்ப் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளிலும் நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆய்வகங்கள் 6,029 பள்ளிகளில் துவக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. கடந்தாண்டு முதல் 20 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் smart classroom அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனாலும் இவ்வளவு பள்ளிகளில் 1 கோடியே 33 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 5 லட்சத்து 9 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதில் 3,500 உடற்கல்வி ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். மொத்த ஆசிரி யர்களைக் கணக்கிடும்போது ஒரு சதவீதம்கூட உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லை. மாணவர் விகிதாச்சாரப்படி உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லை. அரசு நிர்ணயித்துள்ள பணி யிடங்களின்படியே தமிழகத்தில் 435 உடற்கல்வி ஆசிரியர்கள், 43 கிரேடு-2 உடற்கல்வி ஆசிரியர்கள், 39 கிரேடு-1 உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்கள் காலி யாக இருக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான பள்ளி கள், நடுநிலை, உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த் தப்பட்டுள்ளன. அந்த பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் பணி யிடமே உருவாக்கப்படவில்லை. இருக்கும் ஆசிரியர்களை மற்ற பணிகளுக்கு பயன் படுத்துகின்றனர்.
மாணவர்களின் விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்த ஆண்டுதோறும் வட்டார, மாவட்ட, மண்டல, மாநில அள விலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆனால், அரசுப் பள்ளிகளே தற்போது இப்போட்டிகளில் மாணவர்களை தயார்படுத்தி போட்டிகளில் பங்கேற்கச் செய்ய ஆர்வம் காட்டுவதில்லை. இதற்கான மைதானங்களும், உடற்கல்வி ஆசிரியர்களும் இல்லை. முன் பெல்லாம் பள்ளி ஆண்டுவிழா காலங்களில் விளையாட்டுப் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். தற்போது அவை பெயரளவுக்கே நடத்தப்படுகின்றன என்றனர்.
இன்றைய பள்ளிகளில் நான்கு பிரிவுகளாக விளையாட்டுகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. ஏ பிரிவில் கால்பந்து, கபடி, ஹாக்கி, கோகோ, வாலிபால், பேஸ்கட் பால் உள்ளிட்ட விளையாட்டுகளும், பி பிரிவில் டேக்வாண்டோ, குத்துச்சண்டை, நீச்சல், சிலம்பம், ஜூடோ, கேரம், பீச் வாலிபால், சைக்கிளிங் போன்ற விளையாட்டுகளும், சி பிரிவில் ஓடுதல், தாண்டுதல், தவ்வுதல், எறிதல் போன்ற தடகள விளையாட்டுகளும், டி பிரிவில் சதுரங்கமும் உள்ளன. தற்போது மாணவர்களுக்கு கால்பந்து, வாலிபால், கிரிக்கெட், ஹாக்கி ஆகிய விளையாட்டுகள் மீது அதிக ஆர்வம் இருக்கிறது. ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லாததால், பந்து கொடுத்து விளையாட விடுவதில்லை. விளையாட்டால் படிப்பு பாதிக்கப்படும் என்று 10, பிளஸ் 2 மாணவர்களை விளையாட விடுவதில்லை. மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர்களிடம் பந்து கொடுத்து விளையாட விடுங்கள் என கெஞ்சும் நிலைதான் பள்ளிகளில் உள்ளது. அதற்கான வாய்ப்பு இல்லாததால், மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் குறைந்து சினிமா, இன்டர்நெட், ஃபேஸ்புக், செல்போன் உள்ளிட்டவை மீதான மோகம் அதிகரிக்கிறது.
பள்ளிப் பருவத்திலேயே உடற்பயிற்சி செய்து மாணவ, மாணவியர் உடல் உறுதியுடன் இருந்திட உடற்பயிற்சி அவசியம். பெரும்பாலும் மாநகராட்சிகளில் பயிலும் மாணவர்கள் வாகன வசதிகளைத்தான் உபயோகிக்கிறார்கள். பள்ளிகளை ஆய்வு செய்யும் அதிகாரிகள் பள்ளிகளில் உள்ள கட்டிட கட்டுமான வசதிகள், நூலக வசதிகள், ஆய்வக வசதிகள், கழிப்பறை வசதிகள் குறித்து ஆய்வு செய்கின்றனர். ஆனால் உடற்பயிற்சிக்கு என்று தனியாக அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனரா என்கிற சந்தேகம் வருகிறது. எந்த அடிப்படையில் சென்னை மற்றும் பெருநகரங்களில் விளையாட்டு மைதான வசதி இல்லாமல் பள்ளிகள் செயல்பட அரசு அனுமதிக்கிறது என்கிற ஐயப்பாட்டினை தீர்வுகாண வேண்டும். சென்னை மாநகராட்சி, நகராட்சி, மாவட்ட தலைநகரங்களில் செயல்படும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் விளையாட்டு மைதானங்கள் நிர்ணயிக்கப்பட்ட பரப்பளவு இல்லாத பள்ளிகளின் விவரங்களை பார்வையிட்டு, உடற்பயிற்சி ஆசிரியர் இருப்பதையும், விளையாட்டு சாதனங்கள் போதுமான அளவு இருக்கிறதா என்கிற நிலையையும் அரசு தெரிவிக்கவேண்டும்.
அதே சமயம் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளவும், தமிழக மாணவர்கள் சர்வதேச தரத்துக்கு கல்வி பயில வைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க பள்ளி கல்வித்துறை உத்தேசித்து அதற்காக வரைவு பாடத்திட்டத்தையும் அரசு வெளியிட்ட்டது. இதில் 1 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு உடற்கல்வி பாடங்களும் இடம்பெற்றிருக்கின்றன. உடற்பயிற்சிகளுடன், யோகா, மூச்சுப்பயிற்சி என்று அந்தந்த வயதினருக்கான பயிற்சிகளையும், விளையாட்டுகளையும் இந்த பாடத்திட்டத்தில் கொண்டு வந்துள்ளனர். ஆனால், மற்ற பாடங்களுக்கு புத்தகங்கள் அச்சிட்டு மாணவர்களுக்கு அளிப்பதுபோல் உடற்கல்விக்கான பாடப்புத்தகங்களை அச்சிடவும், பாடத்திட்டத்தை வரையறுத்து உடற்கல்வி ஆசிரியர்களுக்கு அளிக்கவும் கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் சோகம்
காரணம், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகவே தமிழக பள்ளிகளில் உடற்கல்விக்கான பாடத் திட்டங்களோ, பாடப் புத்தகங்களோ இல்லாமல் உடற்கல்வி பாட வகுப்புகள் முடிவுக்கு வந்திருக்கின்றன. இதனால், உடற்கல்வியின் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணரமுடியாத சூழல் நிலவுகிறது. இத்தனைக்கும் கடந்த 19.5.1975-ல் பள்ளி கல்வி இயக்குநரின் செயல்முறைகளுக்கு இணங்க உடற்கல்விக்கு புத்தகங்கள் வழங்க ஆணையிடப்பட்டது. 1975-76-ம் கல்வியாண்டில் உடற்கல்வி கட்டாய பாடமாக்கப்பட்டு, அதில் பெறும் மதிப்பெண்கள் தேர்ச்சிக்கும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் நிலை இருந்தது.1995-ம் ஆண்டுக்கு பின் பாடத்திட்டங்களோ, புத்தகமோ இல்லாத நிலையில் தற்போது வரை உடற்கல்வித்துறை ஊசலாடுகிறது. அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் போது உடற்கல்விக்கு 9-ம் வகுப்புக்கு மட்டும் கையேடு வழங்கப்பட்டது. அதுவும் அந்த ஆண்டிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. இதை எல்லாம் விளையாட்டுத்துறை அமைச்சருடன் கல்வி அமைச்சர் பேசி சீர் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.!