சமாதி 4 டி – மரண அனுபவம் எப்படியிருக்கும்! – ஆய்வு + கேம் வீடியோ
மரணம் என்பது தவிர்க்க முடியாது. இப்பூவுலகில் பிறந்த ஒவ்வொருவரும் பிறந்த பின் கண்டிப்பாக என்றாவது ஒருநாள் இறந்துதான் ஆக வேண்டும். இதையடுத்து அந்த இறப்பிற்குப் பின் என்ன நடக்கிறது, அதுவரை மனித உடலில் அவனது எண்ணங்களாக வாழ்ந்த அந்த உயிர் என்னவாகிறது என்பதை அறிந்து கொள்ள பலரும் ஆர்வம் காடுவது இயல்புதான்
இப்படி இறந்து போனால் எப்படி இருக்கும் என்று உணர விரும்பும் மனிதர்களுக்காகவே `சமாதி 4டி மரண அனுபவம்’ என்ற பெயரில் சீனாவில் ரியாலிட்டி கேம் ஷோ நடைபெற்று வருகிறது. இன்றளவும் சீனாவில் நடக்கும் அந்த கேம் ஷோவில் பேய், பிசாசு முகமூடி அணிந்த உருவங்கள் ஒரு அறைக்குள் நடமாடுகிறார்கள். அந்த கேம் ஷோவில் கலந்து கொள்ளும் மனிதர்களுக்கு மரண பயத்தை ஏற்படுத்த வெட்டப்பட்ட கை, கால்களைப் போன்று ஆங்காங்கே பிளாஸ்டிக் உறுப்புகள் ஆகியவற்றை விழா ஏற்பாட்டாளர்கள் தொங்கவிட்டுள்ளனர்.
அதாவது மரணத்தில் இருந்து தப்பிப்பது எப்படி என்ற போட்டி இங்கே நடத்தப்படுகிறது. அந்த போட்டியில் தோற்றவர்கள் போலி மரணத்தை அனுபவிக்க வேண்டும்.அந்த நபர்களை சவப்பெட்டிக்குள் படுத்தவுடன் மூடிவிடுவார்கள். வெப்பக் காற்றை பெட்டிக்குள் அனுப்புவதோடு, நெருப்பு எரிவது போல விளக்கு வெளிச்சம் பெட்டிக்குள் பாயும். 4டி எனப்படும் நான்கு பரிணாமம் மூலம் சில காட்சிகள் கண்களுக்குத் தெரியும். பிறகு ஒரு மாத்திரை வடிவிலிருந்து மறுபிறப்பு உருவாகுவது போல் அந்த ஹேம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அந்த மறுபிறப்பு தோற்றத்தின் மூலம், நல்லவேளை மீண்டும் பிறந்துவிட்டோம் என்று பெட்டிக்குள் படுத்திருந்த நபருக்குச் சந்தோஷம் உண்டாகும். பிறகு பெட்டியைத் திறந்து வெளியே அனுப்புவார்கள்.மேலும், பலர் இந்த அனுபவத்தை மிகவும் ரசிப்பதோடு சிலர் மரண பயத்தில் வெளியேறுவதையும் அறியமுடிகிறது.
இதனிடையே விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறும் போது மூளை உயிருடன் இருக்கும் வரைதான் எல்லாமே. அது செயலிழந்து விட்டால் அனைத்தும் முடிந்து போய் விடும். அதன் பிறகு எதுவுமே கிடையாது. மரணம்தான் இறுதியானது. சொர்க்கமும் கிடையாது, நரகமும் கிடையாது, மறுபிறவியும் கிடையாது.என்கிறார்.
இருந்தாலும் ஒவ்வொரு நாட்டிலும் மரணத்திற்கு பின் என்ன என்பதற்கான் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த 2011 ஆம் வருடம். இங்கிலாந்து நாட்டில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனையில் இதய நோய் காரணமாக ஒரு நோயாளியை ஐ.சி.யூவில் வைத்து சிகிச்சை பார்த்து கொண்டிருந்தார்கள் மருத்துவர்கள்.
அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட, மருத்துவர்களில் முயற்சியால் அவர் காப்பாற்றப்பட்டார். பின்னர் மயக்கத்திலிருந்து அவர் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் கேட்பவர்களை நடுநடுங்க வைத்தது.அதாவது, மாரடைப்பு ஏற்பட்டவுடன் தன் உடலிலிருந்து தான் வெளியில் வந்ததாகவும், இந்த அறையின் ஓரத்தில் நின்று கொண்டு தனக்கு வழுக்கைத்தலை மருத்துவர் ஒருவர் சிக்கிச்சையளிப்பதை தானே பார்த்ததாகவும் கூறியுள்ளார்.அவர் வீட்டிலிருந்து மயக்கநிலையில் வந்து மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். பின்னர் எப்படி அவர் சரியாக மருத்துவரை பற்றி கூறியுள்ளார் பார்த்தீர்களா? அதான் ஆச்சரியம்!

இன்னொரு சம்பவம், கடந்த 1977 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஒரு பெண்ணுக்கு கடுமையான மாரடைப்பு வந்து இதயதுடிப்பு நின்றவரை உயிர்ப்பிக்கும் முயற்சியில் மருத்துவர்கள் இருந்தபோது, நடந்ததை பற்றி அவரே கூறுகிறார்.என் உடலைவிட்டு நான் அப்படியே மேலே போனேன், மருத்துவமனை மொட்டை மாடியில் ஒரு செருப்பும், பூக்களும் இருப்பது எனக்கு தெரிந்தது என அவர் கூறினார். அங்கு போய் மருத்துவர்கள் பார்த்த போது உண்மையிலேயே அங்கு அந்த பொருட்கள் இருந்துள்ளது.
இது போல பல உண்மை சம்பவங்கள் உலகெங்கிலும் இங்கொன்றுமாக, அங்கொன்றுமாக நடந்து கொண்டிருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.இது சம்மந்தமாக மாரடைப்பு வந்து செத்துப் பிழைத்த 101 நோயாளிகளிடம் ஓர் ஆராய்ச்சி நடத்தப் பட்டது. மாரடைப்பு வரும் நேரத்தில், இதயம் கொஞ்ச நேரம் துடிக்காமல் பின்னர் இயங்க ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் விலங்குகள் அல்லது செடிகொடிகளை பார்த்தல், அவர்கள் அறைகளில் நடப்பது தெரிவது, அவர்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் மறுபடி நடத்தல் போன்ற பல விஷயங்கள் தாங்கள் உணர்ந்ததாக அவர்கள் கூறியுள்ளார்கள்.


