‘டபுள் ஆக்குபன்சி’ ஆடியோ மற்றும் டீசர் வெளியீட்டு விழாத்துளிகள்!
அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘டபுள் ஆக்குபன்சி’ (Double Occupancy) திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. புதுமையான கதையம்சம் கொண்ட ரொமாண்டிக் ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகியுள்ள இப்பாடத்தின் மூலம் அஸ்வின் கந்தசாமி இயக்குநராக அறிமுகமாகிறார். ‘பொன்னியின் செல்வன்’ புகழ் சந்தோஷ் கதாநாயகனாகவும், ‘கட்சி செரா’ பாடல் புகழ் சாம்யுக்தா விஸ்வநாத் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்தின் விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டு தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இது ஒரு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் போன்ற குழு: கிரியேட்டிவ் புரடியூசர் ஆனந்திதா சுந்தர்
இந்த படத்தில் கிரியேட்டிவ் புரடியூசராக பணிபுரிந்துள்ளேன். இந்த படக்குழு எனக்கு ஒரு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் போல அமைந்தது. மிகவும் கஷ்டப்பட்டு இந்த படத்தை எடுத்துள்ளோம். ஏசி சண்முகம் அவர்கள் மிகவும் சப்போர்ட் செய்தார்கள்; அவர் இல்லை என்றால் நாங்கள் யாரும் இணைந்து இருந்திருக்க மாட்டோம். இந்த நேரத்தில் எனது அப்பா, அம்மா மற்றும் படத்தில் பணிபுரிந்த இயக்குநர், தொழில்நுட்பக் குழுவினர், நடிகர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் எங்களது நன்றி. இந்த படம் அனைவரது கனவு, கண்டிப்பாக அனைவரும் திரையரங்கில் பார்த்து சப்போர்ட் செய்யுங்கள்.

அடுத்த ஜெனரேஷனுக்கான கதை சொல்லல்: பகவதி பெருமாள் (பக்ஸ்)
அவ்னி மூவிஸில் எனக்கு இது இரண்டாவது படம். இந்த கதையை முதல் முறை கேட்கும் போது மிகவும் சர்ப்ரைஸ் ஆக இருந்தது. அடுத்த ஜெனரேஷனுக்கான கதை சொல்லல் ஆரம்பமாகி இருக்கிறது என்று உணர்ந்தேன். நிறைய கடின உழைப்பில் இந்த படத்தை எடுத்து உள்ளோம். சாம் சிஎஸ் அவர்களின் இசையில் முதல்முறையாக நடித்துள்ளேன், நன்றி.
என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி: ரேஷ்மா வெங்கடேஷ்
குஷ்பு மேடம் மற்றும் இயக்குநர் அஸ்வின் கந்தசாமிக்கு எனது பெரிய நன்றி. என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. இது ஒரு ஒன்றரை வருட பயணம். சந்தோஷ் அவர்களுக்கு இது முதல் படம் போல தெரியவில்லை. பிரியா என்ற கதாபாத்திரத்தில் சாம்யுக்தா சிறப்பாக நடித்துள்ளார். வினோத் கிஷனுடன் நடித்ததில் பெருமை. சாம் சிஎஸ் இசையில் பணிபுரிந்தது மகிழ்ச்சி. நான் இதில் ‘ரஜினி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன், உங்கள் அனைவருக்கும் அது பிடிக்கும் என்று நம்புகிறேன்.
வித்தியாசமான கதைகளுக்கு அவ்னி மூவிஸ் என்றும் முக்கியத்துவம் தரும்: சாம்யுக்தா விஸ்வநாத்
இந்த படம் எனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அவ்னி மூவிஸ் வித்தியாசமான கதைகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். இயக்குநர் அஸ்வின் முதல் முறை கதை சொல்லும்போதே நான் படத்திற்குள் வந்துவிட்டேன், அந்த அளவுக்கு இந்த கதாபாத்திரம் எனக்கு பிடித்தது. சந்தோஷ் உடன் நடித்தது மகிழ்ச்சி. ரேஷ்மாவுடன் படப்பிடிப்பு தளத்தில் நிறைய பேசியுள்ளேன். இந்த படத்தில் எனக்கு பின்னால் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி.
பில்லராக இருந்த குஷ்பு மேடம்: நடிகர் சந்தோஷ்
ஆனந்திதா சுந்தர் எனது பள்ளித் தோழி, இந்த வாய்ப்பளித்ததற்கு நன்றி. குஷ்பு மேடம் எனக்கு மிகப்பெரிய பில்லராக இருந்துள்ளார்கள். இயக்குநர் அஸ்வின் எனக்கு அண்ணன் போல, என்னை தேர்வு செய்ததற்கு நன்றி. ஒளிப்பதிவாளர் சாந்தகுமார் உழைப்பு மிகப்பெரியது. VFX டீம் குறைந்த நேரத்திலும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். சாம் சிஎஸ் இசையில் இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். பக்ஸ் சார், வினோத் கிஷன், ரேஷ்மா, சாம்யுக்தா என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். பிருந்தா மாஸ்டர் எனக்கேத்த ஸ்டைலை கண்டுபிடித்து கொரியோகிராபி செய்துள்ளார். கதைக்கு ஓகே சொன்ன சுந்தர் சாருக்கும், எனது பெற்றோருக்கும் நன்றி.
வாழ்நாள் முழுக்க நன்றி கடன்பட்டிருக்கிறேன்: ஒளிப்பதிவாளர் சாந்தகுமார்
தினேஷ் குமார் தான் இந்த படத்தை எனக்கு அறிமுகம் செய்தார். குஷ்பு மேம் மற்றும் சுந்தர் சாருக்கு நன்றி. இந்த படத்தின் போது எனது பெற்றோர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டனர். அப்போது குஷ்பூ மேடம், “நீ எப்போது சரியாக வருகிறாயோ அப்போது ஷூட்டிங் போகலாம்” என்று கூறினார்கள். அதற்கு நான் எப்போதும் நன்றி கடனாக இருப்பேன். இயக்குநர் அஸ்வின் மற்றும் சலிக்காமல் நடித்த நடிகர்களுக்கும், என் உதவியாளர்களுக்கும் நன்றி.
குறும்படமாக திட்டமிட்டு திரைப்படமாக மாறிய கதை: இயக்குநர் அஸ்வின் கந்தசாமி
ஒன்பது வருடமாக சினிமாவில் இருக்கிறேன், மேடையில் பேசுவது இதுதான் முதல் முறை. இந்த மேடையில் ஏற வைத்த குஷ்பூ மேடத்திற்கும், மேடையில் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த சுந்தர் சாருக்கும் நன்றி. சாம் சிஎஸ் பின்னணி இசை சிறப்பாக அமைந்துள்ளது. படத்தில் VFX காட்சிகள் அதிகமாக இருக்கும். பிருந்தா மாஸ்டருடன் வேலை செய்தது பெருமை. இந்த படத்தை முதலில் ஒரு ஷார்ட் பிலிம் ஆகத்தான் எடுக்க திட்டமிட்டோம், சந்தோஷ் தான் இதனை படமாக எடுக்கலாம் என்று முழு கான்பிடண்ஸ் கொடுத்தார். சாம்யுக்தா, ரேஷ்மா, வினோத் கிஷன் என அனைவரும் சிறப்பான நடிப்பை தந்துள்ளனர். ஏசி சண்முகம் சாருக்கு மிகப்பெரிய நன்றி.
ஒரு தாயாக எனக்கு பெருமையாக இருக்கிறது: தயாரிப்பாளர் குஷ்பு
இது ஒரு நல்ல ராம்-காம் படம். கடவுள் எழுதி வைத்த கனெக்சன் இது. சந்தோஷும் ஆனந்திதாவும் பள்ளி காலத்தில் ஆகாது, ஆனால் இப்போது எப்போதும் பேசிக்கொள்கிறார்கள். எனக்கு பையன் கிடையாது, ஆனால் சந்தோஷ் போன்ற ஒரு அழகான பையன் கிடைத்துள்ளார். சந்தோஷை அவ்னியில் அறிமுகப்படுத்துவதில் ஒரு தாய்க்கு எந்த அளவுக்கு பெருமை இருக்குமோ அந்த அளவிற்கு எனக்கும் பெருமை உள்ளது அவரிடம் அந்த வெறித்தனம் உள்ளது. இயக்குநர் அஸ்வினிடம் நிறைய கான்ஃபிடன்ஸ் உள்ளது. சம்யுக்தா, ரேஷ்மா சிறப்பாக நடித்துள்ளனர்.
என்னுடைய மகள் ஆனந்திதா இந்த படத்தில் ஒரு கிரியேட்டிவ் ப்ரொடியூசராக அறிமுகமாகிறார். பொன்னியின் செல்வன் 2 படத்திலும் வேலை பார்த்தார், ஆனால் பெயர் போட மறந்துவிட்டார்கள். இந்த படத்தில் அவர் பெயரை பார்க்கும்போது நிறைவாக உள்ளது. அவரை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. டபுள் ஆக்குபன்சி படத்தை அனைவரும் திரையரங்கில் பார்க்க வேண்டும், வெளியில் வரும்போது நிச்சயம் கண் கலங்கி வருவீர்கள்.


