கஸ்டடி.! – விமர்சனம்!
டோலிவுட் ஹீரோ நாக சைதன்யா நடிப்பில் முதல் தமிழ்ப் படம், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் முதல் தெலுங்குப் படம், என்ற அறிவிப்போடு உருவான இப்படம், முழுக்க முழுக்க தெலுங்குப் படமாக மட்டுமே இருக்கிறது. அதிலும் நாக சைதன்யாவை தமிழ் ரசிகர்கள் நிச்சயம் ஹீரோவாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை இனியாவது புரிந்து கொண்டால் நலம்.

படத்தின் கதை என்னவென்றால் ஆந்திரா போலீஸ் ச்டேஷன் ஒன்றில் கான்ஸ்டபிள் நாக சைதன்யா, நைட் ரவுண்ட்ஸ் போகும் போது, குடிபோதையில் விபத்து ஏற்படுத்திய அரவிந்த்சாமியையும், சம்பத்தையும் பிடித்து, அரெஸ்ட் செய்து ஸ்டேஷனில் அடைக்கிறார். பிறகு சிபிஐ அதிகாரியான சம்பத், ரவுடி அரவிந்த்சாமியை கைது செய்து அழைத்து செல்லும் உண்மையை நாக சைதன்யா தெரிந்துக் கொள்கிறார். இதற்கிடையே, ரவுடி அரவிந்த்சாமியை தேடி வரும் போலீஸ் உயர் அதிகாரி, அங்கிருக்கும் சிபிஐ அதிகாரி சம்பத்தையும் சேர்த்து கொலை செய்ய முயற்சிக்கிறார். அவர்களை காப்பாற்றும் நாக சைதன்யா, இது சாதாரண விவகாரம் அல்ல, முதலமைச்சர் தொடர்புடைய விவகாரம் என்பதை தெரிந்துக்கொள்வதோடு, என்ன நடந்தாலும், அரவிந்த்சாமியையும், சம்பத்தையும் எப்படியாவது காப்பாற்றுவதோடு, கோர்ட்டில் அரவிந்த்சாமியை ஆஜர் படுத்தும் முயற்சியில் இறங்க, அதில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா?. அரவிந்த்சாமியின் பின்னணியில் இருக்கும் பிரச்சனை என்ன?, என்பதை பர பரப்பாக சொல்ல முயன்றிருப்பது தான் ‘கஸ்டடி’
நாக சைதன்யா தமிழில், தெலுங்கு வாடைஇம்சிக்கிறது. இருந்தாலும், தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்காக கடுமையாக உழைத்திருக்கும் நாக சைதன்யா போலீஸ் வேடத்தை விட, பிளாஷ்பேக்கில் அதிகமான முடி மற்றும் தாடியுடன் வரும் போது மட்டும் சற்று கவனம் பெறுகிறார். அதிலும் ஒரு இடத்தில் உதயம் நாகர்ஜுனாவையும் நினைவுப்படுத்தும்படி வருகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் கிர்த்தி ஷெட்டி, நாக சைதன்யாவை காதலிக்கும் வேலையை மட்டும் செய்யாமல், அவருடன் ஓடும் வேலையையும் செய்திருக்கிறார். கிர்த்தி ஷெட்டியின் காதல் காட்சிகள் சில ரசிக்க வைத்தாலும், பல காட்சிகள் படத்தை தொய்வடைய செய்கிறது. எதிர்மறையான கதாபாத்திரத்தில் சரத்குமாரும் கவுரவத் தோற்றத்தில் ராம்கியும் கவனம் ஈர்க்கிறார்கள். சிபிஐ அதிகாரிகளாக சம்பத், ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் குறைசொல்ல முடியாத நடிப்பைத் தந்திருக்கின்றனர். அதே சமயம் வழக்கம் போல் பிரேம் ஜி காமெடி என்ற பேரில் தேவையில்லாத ஆணி..!
வெங்கட் பிரபுவே கதையிலும் திரைக்கதையிலும் சுவாரசியம் காட்டாத காரணத்தால் படம் தொடங்கிய நேரத்தில் இருந்து நமக்கு சோர்வை ஏற்படுத்த தொடங்கி விடுகிறது. ஆக்ஷன் காட்சிகள் மட்டுமே படத்தின் ஒரே ஆறுதல். ஸ்டண்ட் சிவாவும்,மகேஷ் மேத்யூம் தங்களது பணியினை சிறப்பாக செய்திருக்கிறார்கள். கேமராமேன் கதிரின் ஒளிப்பதிவு நம்பகத்தன்மையை கூட்டி இருக்கிறது. பாடல்கள் பெரிதாக மனதில் நிற்கவில்லை.
மொத்தத்தில் இந்த கஸ்டடி- வேஸ்ட்
மார்க் 2/5


