சென்னைவாசிகளில் ஐந்தில் நால்வருக்கு கொரோனா-வா?

சென்னைவாசிகளில் ஐந்தில் நால்வருக்கு கொரோனா-வா?

கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர, குறைந்த பாடில்லை. இதுவரை இந்தியாவில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி உள்ளது. இதேபோல் தமிழகத்திலும் கடந்த சில நாட்க ளாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாகவே, தினமும் சராசரியாக 700-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை இல்லாத புதிய உச்சமாக நேற்று, நேற்று முன் தினம் ஆகிய 2 நாட்களிலும் 1,000 பேருக்கு மேல் தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து 23,000-ஐ தாண்டியுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்திலேயே உள்ளது.

அந்த வகையில் தமிழகத்தில் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், வெளி நாடு, வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் அனைவரும் சோதிக்கப்படும் நிலையிலும் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. சென்னையில் சராசரியாக 4,000 பேர் பரிசோதிக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படும் நிலையில், பரிசோதிக்கப் படுவோரில் 5ல் ஒருவருக்கு தொற்று உறுதியாகி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.  அதிலும் ஒரு பத்திரிகையாளர் குறிப்ப்பிட்டது போல் ஊடகங்களில் சென்னையைப் பற்றி வரும் கொரோனா தொடர்பான செய்திகள் கிராம மக்களைப் பீதியடைய வைத்துள்ளன. போலியான வதந்திகளைப் பரப்புவதற்கு வாட்ஸ் ஆப் பயன்படுகிறது. கொரோனா தொற்றைப் பரவாமல் தடுப்பதற்கான சுகாதார நடவடிக்கைகளை மக்கள் மிகத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். சென்னையில் இருந்து வந்தாலே கொரோனா வந்துவிடும் என்று நம்புகிறார்கள். அரசு நிர்வாகமும் ஊடகங்களும் சேர்ந்துதான் மக்களிடம் உருவாகியுள்ள புரிதல்கள் தவறானவை என்பதை விளக்கவேண்டும். வடமாநிலங்களைப்போல அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கவில்லை என்ற அளவில் மகிழ்ச்சிகொள்ளலாம்.

இன்றைய சிங்காரச் சென்னையில் நடப்பு மாதமான ஜூன் மாதத்திற்குள் இரண்டு லட்சத்துக் கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கண்டுபிடிக்கப்படாமல் இருப்பார்கள் என்றும், 1,400 பேர் உயிரிழப்பார்கள் என்பது மருத்துவ வல்லுநர்களின் கணித்துள்ளனர். இதை கட்டுப்படுத்த பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் எனவும் வல்லுநர் குழுவினர் தெரிவித்து உள்ளனர். நாட்டின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில், சென்னையில் அதிக எண்ணிக்கையில் பரிசோதனை நடத்தப்பட்டாலும், தற்போது அது போதுமானதல்ல என்பதே வல்லுநர்களின் கருத்து.

தமிழ்நாட்டில் ஜுன் 1-ம் தேதி நிலவரப்படி 43 அரசு ஆய்வகங்கள், 29 தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 72 ஆய்வகங்கள் உள்ளன. இந்த ஆய்வகங்கள் மூலம் தினமும் சராசரியாக 30 ஆயிரத்தும் அதிகமான சோதனைகள் மேற்கொள்ள முடியும்.

தமிழகத்தில் அதிகபட்சமாக மே 7ம் தேதி 14,195 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. ஜுன் 1ம் தேதி பரிசோதனை எண்ணிக்கை 11,377 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் ஆய்வங்களை அதிகரித்திருந்தாலும், பரிசோதனைகளை அதிகப்படுத்தப்படாமல் தேக்க நிலை என்பது நீடித்து வருகிறது. அதேவேளையில் நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிகையும் வேகமாக அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் ஏப்ரல் 20ம் தேதி 6,109 பரிசோதனை மேற் கொள்ளப்பட்டதில் 43 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இது மொத்த பரிசோதனை பாதிப்பு விகிதம் என்பது 0.7% ஆகும். அதன்பின் கோயம்பேடு பரவல் ஏற்பட்டபோது பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டது. மே 1ம் தேதி 9,615 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 203 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இது மொத்த பரிசோதனையில், பாதிப்பு விகிதம் 2.1 ஆகும்.

ஆனால் தற்போது மே 31ம் தேதி 12,807 பரிசோதனைகளில் 1,149 பேருக்கு தொற்று கண்டு அறியப்பட்டுள்ளது. இது மொத்த பரிசோதனை பாதிப்பு விகிதம் 8.9% ஆகும். மேலும், ஊரடங்கு அமலில் இருந்த வரை அறிகுறியுடன் இருந்தவர்கள், தொடர்பில் இருந்தவர்கள் என தமிழகத்தில் இருந்தவர்களுக்கு மட்டுமே அனைத்து பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட பின், சிறப்பு ரயிலில் பயணிப்போர், விமானங்களில் பயணிப்போர், சாலை வழியாக வெளி மாநிலங்களில் இருந்து வருவோர் என அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் நாளொன்றிக்கு சராசரியாக 12,000-13,000 என பரிசோதனை எண்ணிக்கை என்பது அதிகப்படுத்தாமல் அதேநிலையில் நீடித்து வருகிறது.

தேதி பரிசோதனை பாதிப்பு:

ஏப் 20 6109 43 (0.7%)

ஏப் 30 9787 161(1.64%)

மே 10 13367 669(5%)

மே 27 11231 817(7.27%)

மே 31 12807 1149(8.9%)

சென்னையில் நாளொன்றுக்கு 4,000 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். சென்னையில் ஜுன் 1ம் தேதி 967 பேருக்கு தொற்று கண்டறியப் பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சென்னையில் சராசரியாக 800 பேருக்கு தொற்று கண்டறியப் பட்டு வருகிறது. இதன் மூலம் சென்னையில் பரிசோதனை மேற்கொள்பவர்களில் சராசரியாக ஐந்து பேரில் ஒருவருக்கு தொற்று கண்டறியப்படுகிறது என்பதும் இன்று மட்டும் 13 பேர் உயிரிழந்தவர்களில் சென்னையில் இன்று மட்டும் 12 பேர் பலி என்ற தகவலும் பல தரப்பிலும் அதிர்ச்சி அளிக்கிறது. கூடவே சென்னையில் இருந்து கிராமங்களுக்கும் சிறு நகரங்களுக்கும் செல்கிறவர்கள் கொரோனா காரணமாக தனிமைப்படுத்துவதோடு, ஊர் மக்கள் செய்யும் அக்கப்போர்கள் ஆபத்தான அளவுக்கு அதிகரித்துவிட்டன. காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேறுவிதமான விளைவுகளை கிராம மக்களிடம் ஏற்படுத்தியுள்ளன. “கொரோனா வீடு. அந்த தெரு பக்கம் போகாதீங்க. சென்னை லேர்ந்து வந்திருக்காங்க” என்பன போன்ற போலியான தகவல்களை வாட்ஸ் ஆப்பில் பரப்புகிறார்கள் என்பதும் கவலைக்குரிய விஷயம்!

error: Content is protected !!