என்ஜினீயரிங் படிப்புக்கான கவுன்சிலிங் ஜூலை 7 தொடக்கம்!

அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற சுமார் 445 அரசு மற்றும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ. மற்றும் பி.டெக். படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் (2025–2026) என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த மே 7ம் தேதி தொடங்கி, கடந்த 6ம் தேதி முடிவடைந்தது. அதன்படி 3 லட்சத்து 2 ஆயிரத்து 374 மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தனர். அவர்களில் 2 லட்சத்து 49 ஆயிரம் பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர். இவர்களிலும் 2 லட்சத்து 26 ஆயிரம் பேர் உரிய சான்றுகளையும் பதிவேற்றி உள்ளனர். கடந்த 11ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று காலை தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்திருந்தது. அதன்படி 2025–26ம் ஆண்டு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். மேலும் கலந்தாய்வு கால அட்டவணையையும் அமைச்சர் வெளியிட்டார். மாணவ, மாணவியர் தங்களது தரவரிசை எண்ணை www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். மேலும் ஜூலை 7–ம் தேதி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு (கவுன்சிலிங்) நடைபெறும் என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:–
என்ஜினீயரிங் தர வரிசைப் பட்டியலில் 145 பேர் 200க்கு 200 கட் ஆப் எடுத்துள்ளனர். இவர்களில் 140 பேர் தமிழ்நாடு பாட வாரியத்தின் கீழ் படித்தவர்கள் ஆவர்.
பொதுப்பிரிவில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சகஸ்ரா மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். தொடர்ந்து கார்த்திகா (நாமக்கல்), அமலன் ஆன்டோ (அரியலூர்), கிருஷ்ணபிரியன் (தாராபுரம்), தீபா (கடலூர்), தீபிகா (கடலூர்), விஷால்ராம் (திருப்பூர்), பவித்ரா (திண்டுக்கல்), சுபஸ்ரீ (திருப்பூர்), கோதை காமாட்சி (திருப்பூர்) ஆகியோர் தரவரிசையில் 10 இடங்களை பிடித்துள்ளனர். இதில் 7 இடங்களை மாணவிகள் பெற்றுள்ளனர்.
7.5% இடஒதுக்கீட்டில் தாரணி (கடலூர்), மைதிலி (சென்னை), முரளிதரன் (கடலூர்), வெற்றிவேல் (திருவண்ணாமலை), பச்சையம்மாள் (திருவண்ணாமலை), அக்ஷயா (கடலூர்), நிதிஷ் (செங்கல்பட்டு), ரோஹித் (சேலம்), ஹரிணி (நாமக்கல்), ப்ரவீன் (திருவண்ணாமலை) ஆகியோர் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 51,004 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தார்கள்.
தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 14 தொடங்கி ஆகஸ்ட் 17ம் தேதி வரை நடைபெறும்.சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 7ம் தேதி தொடங்கி 11ம் தேதி வரை நடைபெறும். துணை கலந்தாய்வு ஆகஸ்ட் 21 முதல் 23 வரை நடைபெறும். இவ்வாறு அமைச்சர் கோவி.செழியன் கூறினார். www.tneaonline.org இணையதளத்தில் மாணவர்கள் தங்களது ரேங்க் மதிப்பெண்களை அறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரவரிசை பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து நாளை முதல் ஜூலை 2ம் தேதி வரை மாணவர்கள் குறை தீர்க்கும் சேவை வழங்கப்படும்.மாணாக்கர்கள் விண்ணப்பித்திருந்து, தரவரிசை பட்டியலில் தங்களது பெயர் விடுபட்டு இருந்தாலோ அல்லது வேறு குறைகள் இருந்தாலோ, இன்று முதல் 5 நாட்களுக்குள் (02.07.2025-க்குள்) தங்கள் அருகாமையில் உள்ள தமிழ்நாடு பொறியியல் மாணாக்கர் சேர்க்கை சேவை மையத்தினை (TFC’s) அணுகி தங்கள் குறைகளை பதிவு செய்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று அரசு ஒதுக்கீடான 7.5 சதவீதத்திற்கு கோராமல் விடுபட்ட மாணாக்கர்களும் தங்களுக்கு அருகாமையில் உள்ள தமிழ்நாடு பொறியியல் மாணாக்கர் சேர்க்கை சேவை மையத்திற்கு சென்று 02.07.2025-க்குள் தங்களது பெயரை இணைத்துக்கொள்ளலாம்.
சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு 07.07.2025 முதல் 11.07.2025 வரை நடைபெறும். பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு 14.07.2025 முதல் 19.08.2025 வரை நடைபெறும். துணை கலந்தாய்வு 21.08.2025 முதல் 23.08.2025 வரை நடைபெறும்” என்று கோவி.செழியன் தெரிவித்தார்.