மார்கன் – விமர்சனம்!

ஒரு த்ரில்லர் படத்துக்கு தேவையான முக்கிய அம்சங்கள் என்று சொல்வதானால் விறுவிறுப்பான மற்றும் சுவாரசியமான கதைக்களம் அவசியம். அந்த கதையும் ஒரு மர்மம் அல்லது புதிரைத் தீர்ப்பது போலவோ அல்லது ஒரு தொடர் குற்றங்களைத் துரத்துவது போலவோ இருக்க வேண்டும்.படம் முழுவதும் பார்வையாளர்களை ஒருவித பதற்றத்தில் வைத்திருக்கும் வண்ணம் புது லாஜிக்குடன் சஸ்பென்ஸை உருவாக்க வேண்டும்.கூடவே பின்னணி இசை படத்தின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிணைக்கவும் வைக்க வேண்டும். இந்த சங்கதிகள் எல்லாம் நன்றாக புரிந்த ஒரு டீம் தங்களால் முடிந்த அளவு மேற்படி மசாலாக்களை அளவாக கலந்து மார்கன் என்ற பெயரில் வழங்கி உள்ளார்கள்.அதிலும் இப்படம் ஆரம்பித்தது முதல் முடிவு வரை ஒரு இடத்தில் கூட போரடிக்காமல் பார்த்து கொண்டார்கள் என்பதே பெரும்பலம்
அதாவது படத்தின் புரொடியூஸரும், மியூசிக் டைரக்டரும் மெயின் ரோலில் வருபவருமான விஜய் ஆண்டனி விஷ ஊசியால் பாதிக்கப்பட்டு போலீஸ் டிபபார்ட்மெண்டில் இருந்து விலகி ஓய்வில் இருக்கிறார். அச்சூழலில், இவருக்கு நேரிட்டது போலவே விஷ ஊசி பயன்படுத்தி ஒரு பெண்ணை கொன்ற சம்பவம் நடக்கிறது.மும்பையில் தன்னுடைய மகளையும் இதேபோல் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்து தன்னையும் கொலை செய்ய முயற்சித்ததால் அந்த கொலையாளியை கண்டுபிடிக்க ஓய்வில் இருந்தாலும் உரிய அனுமதி வாங்கி சென்னை வந்து இந்த கேஸை கையில் எடுக்கிறார் விஜய் ஆண்டனி. வந்த இடத்தில் ‘தமிழறிவு’ என்ற நாமம் கொண்ட அஜய் தீஷன் மீது சந்தேகம் வருகிறது. அவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணை நடத்துகிறார். அந்தாஜய் தீஷனிடன் ஏதோ ஒரு சக்தி இருப்பதை உணரும் போது இன்னொரு பெண் மர்மமான முறையில் அதே பாணியில் இறந்து போன செய்தி கிடைக்கிறது. இதை அடுத்து எக்ஸ்டாரனரி பவர் கொண்ட அஜய் துணையுடன் கொலையாளியை கண்டுப்பிடிப்பதுதான் மார்கன் படக் கதை.
முக்கிய கதாபாத்திரத்தில் வரும் விஜய் ஆண்டனி அதிசயமாக சில பல எக்ஸ்பிரஷன்கள் எல்லாம் கொடுத்து அசத்தியிருக்கிறார். நிறைய பேசாமல் , உடலில் ஒரு பக்கம் கருப்பாகிப் போன கையோடு துருவித் துருவி விசாரிக்கும் காட்ச்கள் எல்லாம் சபாஷ் சிரில் ராஜா.. ஸாரி விஜய் அண்டனி என்று சொல்ல வைத்து விடுகிறார். இதை எல்லாம் தாண்டி தனக்கு இணையாக அஜய் தீஷனுக்கு இடம் கொடுத்து விளையாட விட்டிருப்பதற்கும் ஒரு பொக்கே பார்சல்.
சந்தேக வளையத்துக்க்ள் சிக்கி இன்னொரு பரிணாமம் எடுக்கும் அஜய் தீஷன் கோலிவுட்டுக்கு தேவையான வரவு தான். உடல் மொழியால் பல இடங்களில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்.கொலையாளியோ என்ற டவுட்டை ஆரம்பத்தில் கொடுக்கும் அவர் பிளாஷ் பேக்கில் கலங்கடித்து விடுகிறார். அத்துடன் அஜய் நிஜமான நீச்சல் வீரரா என்பதை விசாரிக்க வேண்டும். அந்த அளவுக்கு நீரில் மிதந்து, மூழ்கி, மூச்சடக்கி தன் பாத்திரத்தை நியாயப் படுத்தி இருக்கிறார் அஜய். அவரது சகோதரப் பாசமும் பொருந்திப் போய் கவர்கிறது.
இன்ஸ்பெக்டராக வரும் முன்னாள் டீச்சர் பிரகிடா, போலீஸாக வரும் மகாநதி சங்கர் இருவரும் பங்களிப்பும் பர்ஃபெக்டாக உள்ளது.தீப்ஷிகா ஓகே.
கொஞ்சமும் எதிர்பாராதா கேரக்டரான வெண்ணிலா என்ற ரோலில் வரும் கனிமொழி கண்களில் நிற்கிறார். இவர்களுடன் வினோத் சாகர், நடராஜ், அருண் ராகவ், கதிர், ராஜாராம், அபிஷேக், நிஹாரிகா தத்தம் பாத்திரங்களில் பொருந்தியிருக்கிறார்கள்.
கேமராமேன் எஸ்.யுவாவின் ஒளிப்பதிவு மார்கனின் தரத்தை சில படிகள் மேம்படுத்திக் காட்டியிருக்கிறது.
கொலை விசாரணையில் தமிழில் இதுவரை யாரும் தொடாத ஈடிடிக் நினைவகம் (Eidetic memory) என்னும் ஒரு அரிய வகை நினைவாற்றலை அதாவது ஒரு படத்தையோ அல்லது காட்சியையோ ஒரு முறை பார்த்த பிறகு, அதை மிகத் துல்லியமாக, சில நிமிடங்கள் முதல் சில மணிநேரம் வரை மனதிலேயே ஒரு “புகைப்படம்” போல வைத்திருக்கும் திறனைக் கோர்த்து பின்னி இருக்கும் திரைக்கதை பலே சொல்ல வைக்கிறது. கூடவே மனதையும், உடலையும் கட்டுப்படுத்தி, இயற்கைக்கு அப்பாற்பட்ட செயல்களைச் செய்யும் திறன் பெற்ற சித்தர்கள் சக்தியும் படத்துக்கு எக்ஸ்ட்ரா வெயிட் கொடுக்கிறது.
வழக்க்மான சில குறைகள் இருந்தாலும் ஒரு பக்கா க்ரைம் த்ரில்லர் கதையில் நீர் மற்றும் இனம் குறித்த பார்வை மற்றும் சித்த மருத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆரம்ப பேராவில் சொனது போல் ஒவ்வொரு பார்வையாளனுக்கு ஒரு நல்ல படம் பார்த்தோம் என்ற திருப்தியைக் கொடுத்து விடுகிறான் மார்கன்
மார்க் 4/5