June 2, 2023

ஒரு விஷயத்தை நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள்.. 1990-களில் பிறந்த குழந்தைகள் மட்டுமே தொழில் நுட்பம், கலாச்சாரம், பண்பாடு, மனித நேயம் என சகலத்தையும் ஒன்றாக கற்று அறிந்தவர் கள். சோஷியல் மீடியாவை – குறிப்பாக பேஸ்புக்கை இப்போதும் அதிகம் பயன்படுத்துவது 90களில் பிறந்தவர்கள் தான். அவர்களுக்கு என்றே சில சிறப்பு அம்சங்கள் இருப்பதாக அவர்களே அவர் களுக்கு புதுசு புதுசாக மீம் போட்டுக் கொள்வதை இன்றும் காணலாம். ஒருவகையில் அப்போதைய ஜெனரேசன் பெற்ற சந்தோசங்கள் எவையெவை என்று இன்றைய தலைமுறை குழந்தைகள் தெரியாமல் வளர்கிறார்கள் என்ற வருத்தம். மேலும் இன்றைய ஸ்மார்ட் போன்கள் உலகை விரல் நுனிக்கு கொண்டு வந்தாலும். பெத்த அம்மா, கட்டிய மனைவி உள்ளிட்ட உறவுகளையும், உணர்வுகளையும் வாட்ஸ் அப் குழுவில் அடக்கி வைத்து பெருமிதப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை. இதை எல்லாம் புரியாமல் கோமா ஸ்டேஜூல் வாழும் 2k கிட்ஸூகளுக்கு பொடேர் என்று பிடரியில் அடித்து சொல்லும் ரியல் மெசெஜ்தான் ‘கோமாளி’.

அதாவது 16 வருடங்கள் கோமாவில் முடங்கி கிடந்த ஹீரோ ஒற்றை எறும்புக் கடித்ததால் கண் விழித்து இந்த உலகை காணும் போது அவர் சந்திக்கும் திகைப்பும், சிக்கலும் , புரிதலுமே படத்தின் ஒன் லைன் கதை. அதை ஷார்ட் அண்ட் ஃப்ரீப்பாக சொல்வதானால் 1990களின் இறுதியில் பள்ளி யில் +2 படித்துக் கொண்டிருக்கிறார் ரவி (ஜெயம் ரவி). இவருடன் படிக்கும் நெருக்கிய நண்பன் மணி (யோகிபாபு). அதே வகுப்பில் படிக்கும் நிகிதாவை (சக்யுக்தா) லவ்-வுகிறார் ரவி. அந்த காதலை நிகிதாவிடம் நேரில் சொல்லும் போது நடக்கும் விபத்து ஒன்றினால் ரவி கோமா ஸ்டேஜூக்குப் போய் 16 வருடங்கள் கழித்து கோமாவில் இருந்து மீளும் போது நடப்பவையே கோமாளியின் முழுக் கதை.

ஜெயம் ரவி, தனக்கு கிடைத்த ரோலை உணர்ந்து நடித்திருக்கிறார். அதிலும் + 2 பள்ளி மாணவர் வேடத்தில் கூட அசத்தியிருக்கிறார். சம்யுக்தா ஹெக்டே & காஜல் அகர்வால் என் டபுள் ஹீரோயின்கள் இருந்தும் இருவர் கேரக்டரும் ஒட்டவே இல்லை. வில்லன் கதாபாத்திரத்தில் வரும் கே.எஸ்.ரவிக்குமாரின் நடிப்பு பர்பெக்ட். நீண்ட இடைவெளிக்கு யோகி பாபு ஸ்கோர் பண்ணுகிறார். அடுத்தவர் மற்றும் தன் உடல் அமைப்பை சுட்டிக் காட்டி பேசுவதை காமெடி என்று நம்பி பயணப்பட்டுக் கொண்டிருந்தவருக்கு இப்படத்தின் மூலம் புது பாதை கிடைத்திருக்கிறது.. புரிந்து செயல்பட்டால் அவருக்கு நல்லது.

ஹிப்ஹாப் தமிழா ஆதி இசை. பாடல்கள் பாஸ் மார்க் வாங்கவில்லை.ஆனால் பின்னணி இசை ஓகே ரகம். ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவில் படம் கலர் புல்லாக இருக்கிறது. அதிலும் 90-கள் மற்றும் 2கே என இரண்டு விதமான காலகட்டத்தை தனித்துவமாக ஒளிப்பதிவு செய்து தனி கவனம் பெறுகிறார்.

ஆன் லைனில் கடந்த ஆறேழு வருஷமாக ட்ரெண்டாகவே இருக்கும் 90களின் காலக்கட்ட  ஹீரோ மூலம் முதல் பாகத்தை போரடிக்காமல் வழு வழு இடுப்பழகி, பஜ்ஜி துணையுடன் கொண்டு போன இயக்குநர், மனிதம் மனிதர்களை விட்டு இன்னும் அகலவில்லை என்பதைச் சொல்ல 2015 ல் வந்த சென்னை வெள்ளத்தை வைத்து பாரத விலாஸ் பட பாணியில் ஹிந்து – முஸ்லீம் – கிறிஸ்துவர் ரோலையெல்லாம் திணித்து போரடித்து விட்டார். அதே சமயம் பக்கத்து சீட் நண்பர் சொன்னது போல் ‘என்னவோ கோமாளித்தனம் செஞ்சு வச்சிருக்காய்ங்க.. ஓரிரு மாசம் வெயிட் செஞ்சால் டி.வி.யில் திரைக்கு வந்து சில வாரங்களே ஆனா புத்தம் புது படம் என்று சொல்லி போடும் போது ஃபேமிலியோடு பார்க்கலாம்.. ’என்று சொன்னது நிஜம்.

மார்க் 2.75 / 5