சென்னை புத்தக கண்காட்சிக்கு அரசு சார்பில் ஆண்டுதோறும் ரூ.75 லட்சம் நிதி! – முதல்வர் அறிவிப்பு!

சென்னை புத்தக கண்காட்சிக்கு அரசு சார்பில் ஆண்டுதோறும் ரூ.75 லட்சம் நிதி! – முதல்வர் அறிவிப்பு!

தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் (பபாசி) சாா்பில் சென்னை யில் 43 -ஆவது புத்தகக் காட்சியை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை மாலை தொடக்கி வைத்த போது  இனிசென்னை புத்தக கண்காட்சிக்கு அரசு சார்பில் ஆண்டு தோறும் ரூ.75 லட்சம் நிதி வழங்கப்படும்’, என்று கண்காட்சி தொடக்க விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் 43வது சென்னை புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று தொடங்கியது. தொடக்க விழா வுக்கு, ‘பபாசி’ புரவலரும், தொழில் அதிபருமான நல்லி குப்புசாமி செட்டி தலைமை தாங்கினார். பபாசி தலைவர் ஆர்.எஸ். சண்முகம் வரவேற்று பேசினார்.

சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். பின்னர் ரிப்பன் வெட்டி கண்காட்சியை அவர் தொடங்கி வைத்து, கண்காட்சி அரங்குகளில் உள்ள புத்தகங்களை பார்வையிட்டார். இந்த விழாவில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், வி.சரோஜா, கே.பி. அன்பழகன், கே.பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், பாடநூல்-கல்வியியல் பணிகள் கழக தலைவர் பா.வளர்மதி, எம்.எல்.ஏ.க்கள் விருகை ரவி, கே.வி.ராமலிங்கம், தென்னரசு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

43வது புத்தக கண்காட்சியை துவக்கி வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியது இதோ :–

ஆண்டுதோறும், பொங்கல் திருநாளையொட்டி, மக்களின் கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்தளிக் கும் சுற்றுலாப் பொருட்காட்சியும், அறிவுக்கு விருந்தளிக்கும் புத்தகக் காட்சியும் சென்னையில் ஒருசேர நடைபெறுவது ஒரு சிறப்பு அம்சமாகும். மாத்யூவின் முயற்சியால், சில பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு தென்னிந்திய புத்தக விற்பனை யாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம் தொடங்கப்பட்டது. புத்தக ஆர்வலர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு அதிகமாக நூல்களை வெளியிடுவதற்காகவும், புத்தக வாசிப்பை பரவலாக்கு வதற்காகவும், புத்தகங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் 24.8.1976ல் ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்தக் கூட்டமைப்பு, முதன்முதலில் 1977ம் ஆண்டு சென்னை புத்தகத் திருவிழாவை நடத்தியது. இந்தப் புத்தகக் காட்சி பெற்ற வரவேற்பினைத் தொடர்ந்து, இந்திய மொழிகளில் குறிப்பாக தமிழ் மற்றும் இதர தென்மொழிகளில் நூல்களை வெளியிடும் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இந்தக் கூட்டமைப்பில் சேர்ந்தனர்.

ஆண்டுதோறும்…

தமிழ்நாட்டில் புத்தகத்திற்கு என்று ஒரு பொருட்காட்சி தனியாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இது பெருமைப்படத்தக்க ஒரு விஷயமாகும். இந்தப் புத்தகக் காட்சி சென்னையில் மட்டுமல்லாமல், ஆண்டுதோறும், மதுரை மற்றும் கோவை ஆகிய இடங்களில் இந்த அமைப்பால் நடத்தப்பட்டு வருவது என்பது உண்மையிலேயே பாராட்டுக்குரியது.

மக்களின் வாசிக்கும் பழக்கத்தை பரவலாக்கும் இந்தத் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் 43வது புத்தகக் காட்சியை தொடங்கி வைப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்தப் புத்தகக் காட்சி அனைத்து வயதினரும் கொண்டாடும் ஆனந்தத் திருவிழா. இந்தப் புத்தகக் காட்சி 21ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்தப் புத்தகக் காட்சியில் இடம் பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள் சிலவற்றை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.

கீழடி, அகழ்வாராய்ச்சி

கீழடி, அகழ்வாராய்ச்சி பற்றிய தமிழக தொல்லியல் துறையின் சிறப்பு அரங்கம் 3000 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. கீழடி, அகழ்வாராய்ச்சி அமைக்கப்பட்ட அரங்கு நம்முடைய மூதாதையர்கள் என்னென்ன பயன்படுத்தினார்கள், கிட்டத்தட்ட 2500 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி வாழ்ந்தார்கள் என்ற வாழ்க்கையை நாம் எண்ணிப் பார்க்கின்ற அளவிற்கு, அப்பொழுதே நம்முடைய நாகரிகம் இன்றைய மக்கள் புகழ்கின்ற அளவிற்கு அந்தக் காலக்கட்டத்திலே இருக்கிறது என்று சொன்னால் நம்முடைய பெருமை, என் தமிழகத்தினுடைய பெருமை எந்தளவிற்கு இருக்கிறது என்பதை உணர்த்துகின்ற அளவிற்கு இந்தக் கீழடி அகழ்வாராய்ச்சி அப்படியே தத்ரூபமாக அரங்குகளை அமைத்திருக்கின்றார்கள். அவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருவள்ளுவர் மணற் சிற்பம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. அப்படியே தத்ரூபமாக திருவள்ளு வரை உரித்து வைத்த மாதிரி மணலில் அந்தச் சிற்பக் கலையைச் செய்தவருக்கு என்னுடைய பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

15 லட்சம் தலைப்புகளில், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடும் இலக்கியம், கலை, அறிவியல், தொழில் நுட்பம், வரலாறு, பொது அறிவு, விளையாட்டு, உணவு, உடல் நலம் உள்ளிட்ட பல பிரிவுகளுக்கான புத்தகங்கள் இந்தக் காட்சியில் இடம் பெற உள்ளது.

10,000 மாணவர்கள் பங்கு பெறும் ‘‘சென்னை வாசிக்கிறது” என்ற ஒரு புதிய நிகழ்வு இந்த ஆண்டு நடைபெற உள்ளது.

புத்தகம் – சிறந்த நண்பன்

இந்தப் புத்தகக் காட்சியில், அறிவு சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளும், மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி போன்ற பல்வேறு நிகழ்வுகளும் நடைபெறுகின்றன என்பதை அறிவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

உலகப் பொதுமறையான திருக்குறள், பல்வேறு உலக மொழிகளில் வெளிவந்துள்ள நூல்களின் முகப்பு அட்டவணையை காட்சிப்படுத்துதல் என பல்வேறு புதுமையான நிகழ்ச்சிகள் இந்தப் புத்தக காட்சியில் இடம் பெற்றுள்ளன.

மனிதனின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு ‘‘புத்தகம்” என்றார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். புத்தகம் என்பது மனிதர்களிடையே வாய் திறந்து பேசாமல் பேசுகின்ற நண்பன். அதேபோல், நம்மை ஒருபோதும் ஏமாற்றாத சிறந்த நண்பன். மனிதனுக்கும், இந்த உலகத்துக்கும் இடையில் பிணைப்பை ஏற்படுத்துவது புத்தகங்கள் மட்டுமே. புத்தகம் என்பது ஒரு அலங்காரப் பொருள் அல்ல. அது நம்மை நேர்மையான வழியில் வாழ்வதற்கு வழி நடத்துகின்ற தோழன். புத்தகங்கள் இல்லையெனில், மனிதகுலம் இத்தகைய வளர்ச்சியைக் கண்டிருக்க முடியாது. உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ, அதுபோலவே மனப் பயிற்சிக்கு புத்தக வாசிப்பு அடிப்படையானது. புத்தகத்தினை தனது உயிர் நண்பனாக ஏற்றுக் கொண்டவர்கள், புகழின் உச்சியில் அமர்ந்திருக்கிறார்கள். பலர் சாதனையாளர் களாகவும் மாறியிருக்கிறார்கள்.

புத்தகம் படித்து உயர்ந்தவர்கள்

‘அடிமைகளின் சூரியன்’ என போற்றப்பட்ட ஆபிரகாம் லிங்கன், புத்தகங்களைப் படித்தே உயர்ந்தவர். அத்தகைய பெருமைக்குரிய புத்தகக் காட்சி இன்றைக்கு திறக்கப்படுகிறது. ஜார்ஜ் வாஷிங்டன், வரலாறு என்ற புத்தகத்தை இரவல் வாங்கிப் படித்தவர். பிற்காலத்தில் அமெரிக்கா நாட்டின் அதிபராக உயர்ந்து சரித்திரம் படைத்திருக்கிறார்.

லண்டன் நூலகத்தில், இருபது ஆண்டுகள், பல அரிய நூல்களை படித்து ஆய்வு செய்த காரல் மார்க்ஸ் உலகின் பொதுவுடமை தந்தையாக உயர்ந்தார்.

‘‘காஞ்சிபுரத்தில் இருந்து, முதுகலை பட்டதாரியான ஓர் இளைஞன், சென்னை நோக்கிச் சென்றான். முடிவில் தமிழ்நாட்டின் முதல்வராக திரும்பினார்” என்று பேரறிஞர் அண்ணாவை புகழ்வார்கள். அவர் சென்னை கன்னிமாரா நூலகத்தில் உள்ள பெரும்பாலான புத்தகங்களை படித்தவர். நூலகம் திறக்கும்போது உள்ளே நுழைபவர், இரவில் அது மூடப்படும்போது தான் வெளியே வருவாராம்.

மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமின் பதவிக் காலம் முடிந்தபின், அவர் சொந்த இடத்திற்கு எடுத்துச் சென்றது 1000க்கும் மேற்பட்ட புத்தகங்களை மட்டும்தான். ஜனாதிபதியாக அவர் இருந்தபோதும், அவர் நேசித்ததும், வாசித்ததும் புத்தகங்கள்தான்.

புத்தகம் படிப்பதில் ஆர்வம்

நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி, தனது வாழ்க்கையை திருப்பிப் போட்ட புத்தகம் என, ஜான் ரஸ்கின் எழுதிய Unto this last எனும் புத்தகத்தை குறிப்பிட்டதோடு, அந்தப் புத்தகத்தை ஒரு பயணத்தின்போது படித்து முடித்தேன். அதன் தாக்கத்தால் அன்று இரவு முழுவதும் தன்னால் தூங்க முடியவில்லை”, என குறிப்பிட்டுள்ளார்.

விமானத்தில் போகாமல் பம்பாய்க்கு காரில் மூன்று நாள் பயணம் செய்தது ஏன்?” என வினவிய போது பத்து புத்தகங்கள் படிக்க வேண்டியிருந்தது,” என பதிலளித்தார் பேரறிஞர் அண்ணா

எங்கே தங்க விரும்புகிறீர்கள்?” என்று லண்டன் தோழர்கள் கேட்டபோது,  “எது நூலகத்திற்கு அருகில் உள்ளது,” என கேட்டார் டாக்டர் அம்பேத்கர்.

தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது, அழுது புலம்பாமல், மன்னிப்புக் கடிதம் எழுதி உயிர்ப் பிச்சை கேட்காமல் தான் தூக்கிலிடுவதற்கு முன்பு வரை புத்தகத்தை படித்துக் கொண்டு இருந்தவர், மாவீரன் பகத்சிங்.

தான் சிறையில் இருந்தபொழுது, தமக்கு வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம், சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் தனக்கு அனுமதிக்க வேண்டும்” எனக் கேட்டவர் நெல்சன் மண்டேலா.

தமிழ் இலக்கியங்களை, நூல்களை – ஒரு மாணவன் நூறு ஆண்டு காலம் படித்தாலும், படித்து முடிக்க முடியாது. அந்த அளவிற்கு தமிழ் இலக்கியம் நம்மிடம் நிறைந்திருக்கிறது என்றார் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

ஜெயலலிதா இல்லத்தில் நூலகம்

புரட்சித் தலைவி அம்மா தனது இல்லத்திலேயே நூலகம் வைத்திருந்தார். அதில் 1,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றிருந்தன. அதனால்தான் பல்வேறு மொழிகளில் அம்மா புலமைமிக்கவராக திகழ்ந்தார். அதிகளவில் அவர் நூல்களை படித்ததன் காரணமாக, அவரால் சிந்தித்து உருவாக்கப்பட்டது தான் ‘‘தொலைநோக்குப் பார்வை – 2023″ என்ற திட்டமாகும். இதன் மூலம் அவர் தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் சென்றார் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும்.

மக்களிடையே படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் நூலகத் துறையில், அம்மாவின் அரசின் சாதனைகள் சிலவற்றை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.

தமிழ்நாடு அரசினால் தற்போது 4,634 நூலகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மக்களிடம் புத்தகம் படிக்கும் பழக்கத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு நூலகர் தினம், நூலக தினம், தேசிய நூலக வார விழா, உலக புத்தக தினம் ஆகிய நிகழ்ச்சிகள் வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றன.

மாநிலம் முழுவதும் உள்ள பொது நூலகங்களின் பயன்பாட்டிற்கு 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

புரட்சித்தலைவி அம்மா 2004ம் ஆண்டு கன்னிமாரா பொது நூலகத்தில் ஒரு நிரந்தர புத்தகக் கண்காட்சியை அமைத்தார். அக்கண்காட்சி கடந்த 16 ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வருகிறது.

சிறந்த செயல்திறனைக் கொண்ட நூலகர்களை கௌரவிக்க ஆண்டுதோறும், எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது, நூலகங்கள் சிறப்பாக பராமரிக்கப்படுவதை ஊக்குவிக்க அம்மாவின் ஆணையின்படி நூலகங்களுக்கு கேடயம் வழங்குதல், நூலக ஆர்வலர் விருது ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழ்ச் சங்கத்தில் 1 லட்சம் நூல்கள்

மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிதி உதவியுடன் 5 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு லட்சம் நூல்கள் அடங்கிய ஒரு மாபெரும் நூலகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஒரு லட்சம் அரிய வகை உலகத் தமிழ் நூல்கள் சேகரிக்கப்பட்டு, இலங்கையில் உள்ள தமிழர்கள் பயன்பெறும் வகையில் யாழ்ப்பாணம் நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள், பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த உலக அளவிலான பத்திரிகைகள், இதழ்களை பதிவிறக்கம் செய்வதற்கான வசதிகளுடன் அனைத்து மாவட்ட மைய நூலகங்களும், திறன்மிகு நூலகங்களாக மேம்படுத்தப்பட்டுள்ளன.

நூலக இயக்ககத்தின் மேம்பட்ட செயல்பாட்டிற்காக இந்த ஆண்டு 125 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை அம்மாவின் அரசு நூலகத் துறையில் செயல்படுத்தி வருகிறது.

வீட்டுக்கொரு நூலகம்

திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொலி வழி கற்றல் என்ற நிலையை நாம் எட்டியிருந்தாலும், வீட்டுக்கொரு நூலகம் அமைக்க வேண்டும் என்ற சிந்தனை நம் மனதில் உருவாக வேண்டும். மனிதன் மிகச்சிறந்த வாய்ப்புகளை பெற வேண்டுமெனில், அவனது தனிமனித கோட்பாடுகள் கண்ணியமானவையாக உருவாக வேண்டுமெனில், புத்தக வாசிப்பை அனுதின சுவாசிப்பாக மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்

வன்மையுள் எல்லாம் தலை.”

அதாவது தம்மை விட, எல்லாவற்றிலும் சிறந்த பெரியவர்களை துணையாய் கொண்டு அவர் வழி நடப்பது, வலிமை அனைத்திலும் பெரிய வலிமை ஆகும் என்றார் வள்ளுவர். அதுபோல், புத்தகங் களின் துணை கொண்டு, அதில் கூறியுள்ள நெறிகளின் வழிநடப்பதே மக்களுக்கு, குறிப்பாக இளைய சமுதாயத்தினருக்கு சிறந்த வலிமையையும், எதிர்காலத்தையும் தரும்.

நாட்டிலுள்ள நூலகங்கள் மற்றும் அடிக்கடி நடைபெறும் புத்தக காட்சிகளுக்குச் சென்று புத்தகத் துறையில் ஏற்பட்டுள்ள பரிணாம வளர்ச்சியை அறிந்து கொண்டும், அன்றாடம் வெளியாகும் புத்தகங்களை வாங்கிப் படித்தும் தங்களது திறமையையும், அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று மக்களை, குறிப்பாக இளைய சமுதாயத்தினரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் தனிநபர் மட்டுமல்லாமல், நாட்டின் சிந்தனை திறனும் உயர்வு பெறும்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் நடத்தும் புத்தகக் காட்சிக்கு ஆண்டுதோறும் மக்களின் வருகை உயர்ந்து வருவது, மக்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கம் அதிகரித்திருப்பதையே காட்டுகிறது. இந்த வருடம் நடைபெறும் 43வது புத்தக காட்சியிலும் மக்கள் வருகை அதிகரித்து, இந்தப் புத்தகக் காட்சி நன்முறையில் நடைபெற்று, வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இந்த விழாவில் அறிஞர்களை சிறப்பிக்கும் வகையில், அவர்கள் ஆற்றிய பணிகளுக்காக இன்று விருதுகள் வழங்கி சிறப்பித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். விருதாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த 43வது புத்தகக் காட்சியை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கத்திரை நான் பாராட்டி, அதே வேளையில் உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் இனிய பொங்கல் வாழ்த்துக்களையும் கூறுகிறேன்.

அதேபோல, இங்கே பேசுகின்ற இந்த நிகழ்ச்சியினுடைய செயலாளர் எஸ்.கே.முருகன் குறிப்பிட்டதைப் போல, இந்தப் புத்தகக் கண்காட்சி சீரும், சிறப்போடும் இருப்பதற்கு அரசினுடைய நிதி தேவை என்று சொன்னார். அடுத்த ஆண்டிலிருந்து இந்த புத்தகக் கண்காட்சிக்கு அரசு சார்பாக 75 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த நேரத்தில் தெரிவித்து, இந்தப் புத்தகங்கள் மூலமாக அறிவுபூர்வமான நிலையை உருவாக்க அற்புதமான களஞ்சியமாக திகழ்கின்ற இந்தப் புத்தகத் திருவிழாவில் நான் கலந்துகொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

கீழடி அகழாய்வு அரங்கம்

கண்காட்சிக்கு அரங்கத்துக்கு வெளியே ‘கீழடி–ஈரடி தமிழ் தொன்மங்கள்’ எனும் தலைப்பில் அமைக்கப்பட்ட கீழடி அகழாய்வு தொடர்பான சிறப்பு அரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது. தொல்லியல் துறை கமிஷனர் த.உதயசந்திரன் மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட இந்த அரங்கில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட சுடுமண் குழாய், நீர் மேலாண்மை திட்டம், கருப்பு சிவப்பு குவளைகள், உறை கிணறு உள்ளிட்ட பொருட்களின் மாதிரி வைக்கப்பட்டிருந்தது. கீழடி அகழாய்வு பணிகள் குறித்த ஒளிப்பட காட்சி கூடமும் அமைக்கப்பட்டிருந்தது. அதேபோல ஒடிசாவை சேர்ந்த பிரபல மணல் சிற்பக்கலைஞர் சுதர்சன பட்நாயக் வடிவமைத்த திருவள்ளுவர் மணற்சிற்பமும் அமைக்கப்பட்டிருந்தது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

Related Posts

error: Content is protected !!