சபரிமலை மண்டல பூஜை தரிசன முன்பதிவு விறுவிறு!
கார்த்திகை மாதம் மாலை அணிந்து, கடும் விரதமிருந்து சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களின் 41 நாட்கள் தவக்காலம் நிறைவுறும் நாள் நெருங்கிவிட்டது. இந்த மண்டல காலத்தின் உச்சகட்ட நிகழ்வான ‘மண்டல பூஜை’ வரும் டிசம்பர் 27-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த முக்கிய தினங்களில் சுவாமி தரிசனம் செய்யத் திட்டமிட்டிருக்கும் பக்தர்களுக்கு ஒரு நற்செய்தியும், அதே சமயம் ஒரு எச்சரிக்கையும் விடுத்துள்ளது திருவிதாங்கூர் தேவசம் போர்டு.
இன்று மாலை 5 மணி – ‘விர்ச்சுவல் கியூ’ ஆபரேஷன்! டிசம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சபரிமலையில் கூட்டம் அலைமோதும் என்பதால், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பக்தர்கள் பாதுகாப்பான தரிசனம் செய்யவும் ஆன்லைன் முன்பதிவு (Virtual Queue) இன்று (டிசம்பர் 11) மாலை 5 மணிக்குத் தொடங்கி உள்ளது.

வழக்கமாக மாத பூஜைகளுக்கு முன்பதிவு திறக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் தீர்ந்துவிடும் நிலையில், மண்டல பூஜைக்கான இந்த ஸ்லாட்டுகள் “நிமிடங்களில் அல்ல, நொடிகளில்” காலியாக வாய்ப்புள்ளது.
ஏன் இந்த கட்டுப்பாடு? – பின்னணி அலசல்: கடந்த காலங்களில் மண்டல பூஜை அன்று கட்டுப்பாடற்ற கூட்டம் கூடியதால், சன்னிதானத்தில் நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் 12 முதல் 18 மணி நேரம் வரை வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனைத் தவிர்க்கவே தேவசம் போர்டு இம்முறை எண்ணிக்கையில் கறாராக உள்ளது.
-
டிசம்பர் 26: மண்டல பூஜைக்கு முந்தைய நாள். அன்று 30,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி.
-
டிசம்பர் 27 (மண்டல பூஜை): ஐயப்பனை தங்க அங்கி அலங்காரத்தில் காணும் பொன்னான நாள். அன்று 35,000 பேருக்கு மட்டுமே அனுமதி.
இந்த இரண்டு நாட்களுக்குமான முன்பதிவுதான் இன்று திறக்கப்படுகிறது.
மண்டல பூஜையின் மகத்துவம்: டிசம்பர் 27-ம் தேதி நடைபெறும் மண்டல பூஜை சாதாரணமானதல்ல. ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலிலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படும், ஐயப்பனுக்கான 420 சவரன் எடையுள்ள “தங்க அங்கி” (Thanga Angi) ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். தீபாராதனைக்குப் பிறகு நடை சாத்தப்படும். இந்த 41 நாள் விரதத்தின் பலனைத் தரும் இந்தத் தரிசனத்திற்காகவே லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருக்கிறார்கள்.
எப்படி முன்பதிவு செய்வது? பக்தர்கள் https://sabarimalaonline.org/#/login என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும்.
முக்கிய குறிப்புகள்:
-
ஆவணங்கள்: முன்பதிவு செய்யும் ஒவ்வொரு பக்தரின் புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை (அல்லது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை) அவசியம்.
-
குழு பதிவு: குழுவாகச் செல்பவர்கள், அனைவரின் விவரங்களையும் தயாராக வைத்துக்கொண்டு ஒரே நேரத்தில் பதிவு செய்வது நல்லது.
-
ஸ்பாட் புக்கிங்: மண்டல பூஜை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், ‘ஸ்பாட் புக்கிங்’ (Spot Booking) கிடைப்பது மிகவும் கடினம் அல்லது ரத்து செய்யப்படலாம். எனவே ஆன்லைனில் முன்பதிவு செய்வதே புத்திசாலித்தனம்.
“கேரளா காவல்துறையும், தேவசம் போர்டும் இணைந்து எடுக்கும் இந்த முடிவு வரவேற்கத்தக்கது என்றாலும், இணையதள சர்வர் முடங்காமல் பார்த்துக்கொள்வது அவசியம். 30,000 மற்றும் 35,000 என்பது சபரிமலைக்கு வரும் கூட்டத்தில் மிகச்சிறிய சதவீதமே. எனவே, டிக்கெட் கிடைக்காத பக்தர்களுக்கு மாற்று ஏற்பாடு என்ன என்பதையும் நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும்.”
தென்காசி தேவா


