சந்திரமுகி 2 – விமர்சனம்!

சந்திரமுகி 2 – விமர்சனம்!

தினெட்டு ஆண்டுகளுக்கு முன்னால்- அதாவது 2005 இல் வெளியான சந்திரமுகி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கேரியரிலேயே அதிக நாட்கள் ஓடி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம். இத்தனைக்கும் அந்த ‘சந்திரமுகி’ திரைப்படம் 1993-இல் மலையாளத்தில் வெளிவந்த ‘மணிச்சித்திரத்தாழு’ என்ற திரைப்படத்தின் மறு உருவாக்கம். மணிச்சித்திரத்தாழு படம் பிரபல இயக்குநர் ஃபாஸிலின் டைரக்‌ஷனில் மோகன்லால், ஷோபனா, சுரேஷ் கோபி, நெடுமுடி வேணு உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி சுமார் 300 நாட்கள் ஓடியது. மலையாளத்தில் மணிச்சித்திரத்தாழு சூப்பர் ஹிட் ஆகியதால், பி. வாசு அதன் உரிமையைப் பெற்று, 2004ஆம் ஆண்டு கன்னடத்தில் ‘ஆப்தமித்ரா’ என்ற பெயரில் விஷ்ணுவர்தன், சௌந்தர்யா, ரமேஷ் அரவிந்த் உள்ளிட்டோரின் நடிப்பில் ரீமேக் செய்தார். அத்திரைப்படம் மாபெரும் ஹிட் அடிக்க, ரஜினியை வைத்து, தமிழில் எடுக்கலாம் என முடிவானது. எதிர்பார்த்தபடியே சந்திரமுகி திரைப்படமும் பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. தன் முதலில் தமிழ் சினிமாவில் காமெடி பேய் படம் என்ற புதிய ஜானரை இந்தப் படமே அறிமுகம் செய்து வைத்தது. அதன் பின் இந்த ஜானரை பின்பற்றி வெளியான முனி, காஞ்சனா சீரிஸ் உட்பட பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தன. அந்த வகையில் தற்பொழுது ரஜினி ஏற்று நடித்த கதாபாத்திரத்தை ராகவா லாரன்ஸ் ஏற்று நடித்து சந்திரமுகி 2 பாகம் தற்பொழுது ரிலீஸ் ஆகி இருக்கிறது.

இப்படத்தின் கதை என்னவென்று கேட்டால் பணக்காரக் குடும்பத் தலைவியான ராதிகாவுக்கும் அவர் குடும்பத்தாருக்கு தொடர்ந்து சில அசம்பாவிதங்கள் நடக்கின்றன. இதற்கு காரணம் குலதெய்வத்தை வழிபடாதது தான் என்று சாமியார் ஒருவர் சொன்னதை அடுத்து குலதெய்வத்தை வழிபடுவதற்காக ராதிகா மற்றும் குடும்பத்தார் வேட்டையபுரத்திற்கு செல்கிறார்கள். கூடவே காதல் திருமணத்தால் ராதிகாவை விட்டு பிரிந்த அவரது மகளின் பிள்ளைகளும், அவர்களின் பாதுகாப்பாளரான ராகவா லாரன்ஸும் அவர்களுடன் வேட்டையபுரத்திற்கு செல்கிறார்கள். போன இடத்தில் அவர்கள் சந்திரமுகி ஆவியை தூண்டி விட்டு மறுபடியும் வெளியே வர வைத்து விடுகின்றனர். அதன் பின் சந்திரமுகி ஆவி ராதிகாவின் பெரிய குடும்பத்தை அழிக்க திட்டமிடுகிறது. இதை தடுக்க வேட்டையன் ஆவியும் களம் இறங்குகிறது. இதையடுத்து இந்த ஆவிகளிடமிருந்து அந்த குடும்பம் தப்பித்ததா, இல்லையா? வேட்டையனுக்கும், சந்திரமுகிக்கும் நடக்கும் சண்டையில் யார் ஜெயித்தார்? என்பதே சந்திரமுகி 2 ஸ்கிரீன் பிளே.

ஹீரோவான ராகவா லாரன்ஸ் ரஜினியின் சாயல் தன் நடிப்பில் வராமல் இருக்க ரொம்ப கஷ்ட்டப்பட்டதாக சொல்லியிருந்தார். ஆனால், அவர் நடிக்கவே ரொம்ப, ரொம்ப கஷ்ட்டப்பட்டு இருப்பது ஒவ்வொரு காட்சிகளில் தெரிகிறது. முதல் பாதி முழுவதும் அவரது நடிப்பு ரசிகர்களை கடுப்பேற்றி விடுகிறது. இரண்டாம் பாதியில் வேட்டையனாக சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் நடித்திருந்தாலும், காமெடி என்ற பெயரில் அவர் வெளிப்படுத்தும் நடிப்பு கோராமையாக இருக்கிறது. சந்திரமுகி ரோலில் நடித்திருக்கும் கங்கனா ரணாவத் நடிப்பு மற்றும் நடனம் இரண்டையும் அறைகுறையாக செய்திருக்கிறார். நடிப்பு தான் இப்படி என்றால் சந்திரமுகி என்ற நடிகை கொஞ்சமும் பொருந்தவில்லை.

ஃபர்ஸ்ட் பார்ட்டில் ரஜினியும், வடிவேலும் கேஷூவலாக லூட்டி அடித்து நம்மை ரசிக்க வைத்தது போன்று இந்த படத்தில் பாகத்தில் ராகவா லாரன்ஸும் வடிவேலும் லூட்டி அடித்து சிரிக்க வைக்க முயற்சி மட்டுமே செய்கிறார்கள். முதல் பாகத்தில் காமெடியில் இருந்த இளமையும், துடிப்பும் இந்தப் படத்தில் முழுக்க காணாமல் போய் விட்டது. ராதிகா, மக்ஹிமா நம்பியார், ஸ்ருதி டாங்கே, சுபிக்‌ஷா, சுரேஷ் மேனன், ரவி மரியா, விக்னேஷ் என படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் இருந்தாலும், படத்தில் அவர்களுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

கேமராமேன் ஆர்.டி.ராஜசேகர் காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கி, படம் முழுவதையும் கலர்புல்லாக காட்சிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார். ம்.எம்.கீரவாணியின் இசையில் பாடல்கள் எதுவுமே எடுபடவில்லை.. அதிலும் முதல் சந்திரமுகியை நினைவூட்டும் வகையிலேயே இதிலும் ஏகப்பட்ட பாடல்கள் உள்ளது. குறிப்பாக படத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “ரா ரா”பாடலை இரண்டு வெர்ஷனில் உருவாக்கி கடுபேற்றி விடுகிறார்(கள்). பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

அதிலும் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக மட்டுமின்றி அதே கதையை அதில் வந்த கதாபாத்திரங்களை மட்டும் மாற்றியமைத்து இயக்கியிருக்கும் டைரக்டர் பி.வாசு, காட்சிகளை கூட அப்படியே காப்பியடித்திருப்பது ரசிகர்களுக்கு வெறுப்பை தந்து விட்டது.. அதே சமயம் 2ஆம் பாகத்தில் சந்திரமுகி மற்றும் வேட்டையன் பற்றி விவரிக்கப்படுவதும், பிளாஷ்பேக் காட்சியில் காட்டப்படும் ட்விஸ்ட்டும் ரசிகர்கள் நிச்சயம் எதிர்பாராத ஒன்றாக இருக்கும்.

மொத்தத்தில் படத்தில் குறைகள் இருந்தாலும் குடும்பமாக சென்று பார்க்க கூடிய விதத்தில் ஒரு ஜாலி மூவி என்பதில் சந்தேகமில்லை

மார்க் 3/5

error: Content is protected !!