வாச்சாத்தி வன்கொடுமை – தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்!

வாச்சாத்தி  வன்கொடுமை – தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்!

ர்மபுரி மாவட்டத்தில், அரூர் அருகே உள்ள வாசாத்தி மலைக் கிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. அதனால் 1992-ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி வாசாத்தி பகுதியில் வனம், காவல், வருவாய் துறைகளின் அதிகாரிகள் திடீர் சோதனையும் நடத்தப்பட்டது. அந்த சோதனையின் போது வாச்சாத்தி கிராமத்தில் இருந்த இளம் பெண்கள் 18 பேரை அந்த அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், கிராம மக்களை அடித்து துண்புறுத்தி வன்முறையில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையான நிலையில் இது குறித்து விசாரித்த சிபிஐ அமைப்பு, இந்திய வனப் பணியை சேர்ந்த 4 அதிகாரிகள் உள்பட 155 வனத்துறையினர், 108 காவல்துறையினர், 6 வருவாய் துறையினர் என 269 பேர் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. வழக்கு விசாரணையின்போது, குற்றச்சாட்டப்பட்ட 52 பேர் இறந்துவிட்ட நிலையில், மீதமுள்ளவர்களுக்கு ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் 2011ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அவற்றை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்குகளின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். மேலும், தீர்ப்பு வழங்குவதற்கு முன் பாதிக்கப்பட்ட மலைகிராம மக்களையும், அப்பகுதியையும் நேரில் ஆய்வு செய்யப்போவதாக தெரிவித்திருந்தார். அதன்படி, கடந்த மார்ச் 4ம் தேதி வாச்சாத்தி மலை கிராமம் மற்றும் அதை ஒட்டிய கலசப்பாடி, அரச நந்தம் உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு சென்று ஆய்வு செய்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் விசாரணையும் செய்தார்.

அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிந்த நிலையில் மேல்முறையீடு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், வாச்சாத்தி மலைக் கிராம மக்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 215 பேர் குற்றவாளிகள் என தருமபுரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. வழக்கில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ள வாச்சாத்தி கிராமத்தை சேர்ந்த 18 பேருக்கு உடனடியாக தலா 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தவிட்ட நீதிபதி வேல்முருகன் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளார். மேலும், குற்றவாளிகள் தொடர்ந்த அனைத்து மேல்முறையீடு மனுகளையும் தள்ளுபடி செய்த நீதிபதி, சம்பவம் நடந்த போது பணியில் இருந்த எஸ்.பி, மாவட்ட ஆட்சியர் மற்றும் வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஏற்கெனவே குற்றம் சட்டப்பட்டவர்களில் 12 பேருக்கு 10 ஆண்டு சிறை, 5 பேருக்கு 7 ஆண்டு சிறை, மற்றவர்களுக்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளாக நீதிக்காக காத்திருந்த வாச்சாத்தி கிராம மக்கள், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!