ஹிஜாப் அணியாத பெண்களைக் கண்காணிக்க கேமரா- ஈரான் போலீஸ் தகவல்!

ஈரானில் ஹிஜாப் அணியாமல் செல்லும் பெண்களைக் கண்காணிக்கும் வகையில் நாடு முழுதும் பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்காசிய நாடான ஈரானில் பொது இடங்களுக்கு வரும் பெண்கள் மற்றும் 7 வயதைக் கடந்த சிறுமியர், தலை மற்றும் முகத்தை மூடும் வகையிலான ஹிஜாப்பை கட்டாயம் அணிய வேண்டும் என்பது சட்டம்.இதை எதிர்த்து போராட்டம் நடத்திய மஹ்சா அமினி என்ற இளம்பெண், அந்நாட்டு அறநெறி காவல்துறை தாக்கியதில் கடந்த ஆண்டு உயிரிழந்தார். இதையடுத்து, நாடு முழுதும் ஹிஜாப் அணிவதற்கு எதிரான போராட்டம் வெடித்தது.
நாளுக்குநாள் அதிகரித்த போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாததால், ஆடை கட்டுப்பாட்டைக் கண்காணிக்கும் அறநெறி காவல்துறை அமைப்பு கலைக்கப்பட்டது. இருப்பினும், ஹிஜாப் அணிவது தொடர்பான கட்டுப்பாடுகள் அங்கு நீடிக்கின்றன. இந்நிலையில், ஹிஜாப் அணியாமல் செல்லும் பெண்களைக் கண்காணிக்கும் வகையில் நாடு முழுதும் பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இது குறித்து ஈரான் போலீஸார் தரப்பில் கூறும்போது, “பொது இடங்களில் ஹிஜாப் அணியாத பெண்கள் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு, அவர்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்படும். ஹிஜாப் அணியாமல் பொதுவெளிக்குச் சென்றால் என்ன விளைவுகள் ஏற்படும் என்றும் அவர்களுக்கு தெரிவிக்கப்படும். இதன் மூலம் ஹிஜாபை எதிர்ப்பது குறையும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் அரசின் இந்த நடவடிக்கை, பெண்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக மாஷா அமினி என்ற இளம்பெண்ணின் மரணத்தைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்தது. மூன்று மாதங்களுக்கும் மேலாக நடந்த இந்தப் போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 15,000 பேர் வரை கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பலருக்கு ஈரான் தூக்குத் தண்டனை அறிவித்தது. ஆனால், இவற்றின் அதிகாரபூர்வ எண்ணிக்கை இதுவரை தெரியவில்லை. மேலும், போராட்டக்காரர்களில் 400 பேருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் இந்தச் செயலுக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தது. எனினும், ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட அனைவருக்கும் தண்டனை வழங்குவது தொடரும் என்று ஈரான் அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்கள் உட்பட 10,000 பேருக்கு மன்னிப்பு வழங்க இருப்பதாக ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி கடந்த பிப்ரவரி மாதம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.