இந்தியாவில் சுகாதார உரிமையை நிலைநாட்டிய முதல் மாநிலமானது ராஜஸ்தான்!

ராஜஸ்தான் சட்டமன்றத்தில் சுகாதார உரிமை மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. சுகாதார உரிமை சட்டம் அனைத்து பொது மருத்துவமனைகளிலும் ஆலோசனை, நோயறிதல், மருந்துகள் அவசர சிகிச்சை ஆகிய அனைத்தையும் குடிமக்கள் இலவசமாகப் பெறும் உரிமையை உறுதிசெய்துள்ளது. ராஜஸ்தான் சுகாதார உரிமைச் சட்டம், 2022 எனப்படும் மக்களின் ஆரோக்கியத்திற்கான உரிமையை உறுதி செய்யும் சட்டத்தை அறிமுகப்படுத்தியதால் ராஜஸ்தான் இந்தியாவில் சுகாதார உரிமையை நிலைநாட்டிய முதல் மாநிலமாகத் திகழ்கிறது. மாநிலத்தின் குடிமக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ வசதி கிடைப்பதை உறுதி செய்வதே இச்சட்டத்தின் நோக்கமாகும்.
ராஜஸ்தான் சுகாதார உரிமை மசோதா, செப்டம்பர் 2022 இல் ராஜஸ்தான் சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு மார்ச் 21 அன்று சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம், ராஜஸ்தானில் உள்ள மக்களின் மருத்துவச் செலவுகளைக் குறைக்க மாநில அரசு மேற்கொண்ட முந்தைய முயற்சிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் சுகாதார உரிமைச் சட்டம், பொது, தனியார் சுகாதார நிறுவனங்களால் வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகளுக்கான அரசு-ஆதரவு சுகாதார காப்பீட்டு முறையை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நோயாளிகளின் பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல், அரசு மருத்துவமனைகளில் அவர்களுக்கு இலவச சுகாதார சேவைகளை வழங்குவதன் மூலம், அவர்களின் தனிப்பட்ட செலவினங்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கூடுதலாக, சுகாதார நிபுணர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், மாநிலத்தின் கிராமப்புற, தொலைதூரப் பகுதிகளில் சுகாதார சேவைகளை சிறந்த முறையில் அணுகுவதை உறுதி செய்வதும் சட்டத்தின் சிறப்பு அம்சங்களாக உள்ளன. இச்சட்டத்தின் படி சுகாதார சேவைகளின் தரத்தை கண்காணிப்பதற்கும், குடிமக்கள் அனைவருக்கும் தரமான சுகாதார சேவை கிடைப்பதை உறுதி செய்வதற்கும் பொறுப்பான மாநில சுகாதார முகமை நிறுவப்படும். மாநில சுகாதார நிதியம் உருவாக்கப்படும், இது சுகாதார சேவைகளை வழங்குவதற்கு நிதியளிக்கும்.
மருத்துவ சேவைகளை இலவசமாகப் பெற விரும்பும் அனைவருக்கும் அத்தியாவசிய சுகாதார சேவைகள் வழங்கப்படும். ராஜஸ்தான் மக்கள் தங்கள் சிரஞ்சீவி அட்டைகளைப் பயன்படுத்தி அணுகக்கூடிய சுகாதார சேவைகளின் வரம்பும் விரிவுபடுத்தப்படும். சுகாதார சேவைகளின் செயல்திறனைக் கண்காணிக்கவும் மதிப்பீடு செய்யவும் ஒரு சுகாதார தகவல் அமைப்பு நிறுவப்படும்.. சுகாதார சேவைகளின் தரத்தை மேம்படுத்த சுகாதாரப் பணியாளர்களின் பயிற்சி, கல்விக்கான திட்டம் உருவாக்கப்படும்.விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் சமூக பங்கேற்பு மூலம் நோய்தடுப்பு சுகாதார பராமரிப்பு, ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் மேம்படுத்தப்படும்.
மருத்துவ அலட்சியம், முறைகேடில் ஈடுபடும் எந்தவொரு சுகாதார பணியாளருக்கும் தண்டனை அளிக்கப்படும். சுகாதார சேவைகளுக்கான அணுகல் மறுக்கப்பட்ட குடிமக்களிடமிருந்து புகார்களைக் கையாள ஒரு குறை தீர்க்கும் பொறிமுறை நிறுவப்படும். ஆனால் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை வரவேற்கவேண்டிய மருத்துவர்கள் இச்சட்டத்தை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நோயாளிகளுக்கான சிகிச்சை,பராமரிப்பிற்கான செலவை மருத்துவமனைகளுக்கு அரசு எவ்வாறு திருப்பிச் செலுத்த திட்டமிட்டுள்ளது என்பதே அவர்களது கவலை. முன்மொழியப்பட்ட முறையின் கீழ் சரியான தொகை சரியான நேரத்தில் செலுத்தப்படாது என்றும், மருத்துவக் காப்பீட்டு முறை செயலிழந்தால், அவர்களின் சம்பளம் தாமதமாகலாம் அல்லது குறைக்கப்படலாம் என்றும் மருத்துவர்கள் கவலை தெரிவித்தனர்.
இந்தச் சட்டம் மருத்துவர்களை அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய கட்டாயப்படுத்தும் என்றும், அதன் மூலம் அவர்களின் நடைமுறையைப் பற்றி சுதந்திரமாக முடிவெடுக்கும் திறனைப் பறிக்கும் என்றும் அவர்கள் கவலையைத் தெரிவித்துள்ளனர். தனியார் மருத்துவமனைகள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுமோ என்ற ஐயத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.”அவசரநிலை” என்றால் என்ன என்பது குறித்த வரையறையை தெளிவுபடுத்தவேண்டும் என்றும் கேட்டுள்ளனர். நோயாளிகளுக்கு சார்பாக உள்ள இச்சட்டம் மருத்துவர்களை உழைப்புச்சுரண்டலுக்கு உட்படுத்தும் என்ற ஐயத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆன போதும், அரசுக்கும் மருத்துவர்கள் சங்கங்களுக்கும் இடையே நடந்த நீண்ட விரிவான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. அதில் மருத்துவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் அளிக்கப்படுவதற்கு இணையான ஊதியம் வழங்க அரசு ஒப்புக்கொண்டது. மேலும், அரசு ஆதரிக்கும் மருத்துவக் காப்பீட்டு முறை செயலிழந்தால் மருத்துவர்களுக்கு உரிய நேரத்தில் பணம் செலுத்தவும் ஒப்புக்கொண்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் சுகாதாரப் பணியாளர்கள் பணிபுரியவேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதற்கும் அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. தமிழ்நாட்டிலும் குடிமக்களின் சுகாதார உரிமையை உறுதிசெய்வதற்கான சட்ட முன்னெடுப்பு செய்யப்படவேண்டும்.