முதல்–அமைச்சர் கணினித்தமிழ் விருது வேணுமா? ; தமிழக அரசு அழைப்பு
சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்கியவர்கள் முதல்–அமைச்சர் கணினி தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அழைப்புவிடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “முதல்–அமைச்சர் ஜெயலலிதா, தஞ்சையில் நடைபெற்ற எட்டாம் உலகத்தமிழ் மாநாட்டில் அறிவியல் தமிழை வளர்த்தெடுக்கும் வகையில் ‘‘அறிவியலிலும் தமிழ், அனைத்திலும் தமிழ்’’ என்ற லட்சிய வாசகத்தை மாநாட்டின் அறிவிப்பாக வெளியிட்டார்.
அதனடிப்படையில், அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கான பல்வேறு செயற்பாடுகள் செயல்படுத்தப்பட்டன. அதன் ஒரு பகுதியாக கடந்த 2013–ம் ஆண்டு முதல்–அமைச்சர் ஜெயலலிதா, வளர்ந்து வரும் கணினியுகத்திற்கு ஏற்ப தமிழ்மொழி வளர்ச்சியைக் கணினியில் அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தும் வகையில், சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குபவர்களுக்கு முதல்–அமைச்சர் கணினித் தமிழ் விருது வழங்கப்படும் என்றும், விருது பெறுபவர்களுக்கு விருதுத் தொகையாக ஒரு லட்சம் ரூபாயும், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
அந்த அறிவிப்பின்படி, ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகையில், 2016–ம் ஆண்டு முதல்–அமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
போட்டிக்குரிய மென்பொருள்கள், 2013, 2014, 2015–ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருக்கவேண்டும். இந்த விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளைத் தமிழ் வளர்ச்சித்துறையின் வலைதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மேலும் தகவலுக்கு…
விருதுக்கான விண்ணப்பம் தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கு வந்து சேரவேண்டிய இறுதி நாள் 31.12.16 ஆகும்.
தமிழ் வளர்ச்சி இயக்குனர்,
தமிழ் வளர்ச்சி வளாகம்,
தமிழ்ச் சாலை, எழும்பூர்,
சென்னை – 600 008 என்ற முகவரிக்கு விருதுக்கான விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்கள்: 044–28190412, 044–28190413.
மின்னஞ்சல் : tamilvalarchithurai@gmail.com;
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


