இறந்த பிறகும் உயிரோடிருக்கும் மரபணுக்கள் – லேட்டஸ்ட் ரிசர்ச் ரிசல்ட்!

இறந்த பிறகும் உயிரோடிருக்கும் மரபணுக்கள் – லேட்டஸ்ட் ரிசர்ச் ரிசல்ட்!

வாழும் காலங்களில் நம்மை எதிர்கொள்ளும் முதன்மையான கேள்வி, பிறப்பிற்கு முன் நாம் எங்கிருந்து வந்தோம்? மேலும் இறப்பிற்கு பின் நாம் எங்கே செல்கிறோம்? என்பதாகத்தான் இருக்கும். பிறப்புக்கு முந்தைய நிலை என்ன என்று உணர்ந்தால், இறப்புக்கு பிறகான நிலையை எளிதில் அறியலாம். பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலம், வாழும் காலம் என்பது யாவரும் அறிந்ததே. அறிந்தும், பிறப்பு – இறப்பு பற்றிய கேள்விகளுக்கு பதிலாய் கேள்விகள் இருக்கின்றன, பதில்களுக்கான கேள்விகள் ஏதுமில்லை.

edit nov 10

நாம் யார்? உயிரும் உடலும் சேர்ந்த பொருளே நாம் என்போம். உடல் நம் கண்களுக்கு புலப்படுகிறது, உயிரை உணரவோ, பார்க்கவோ முடிவதில்லை என்பதே நிதர்சனம். ஆக உடலும் உயிரும் சேர்ந்த தன்மையையே தான் நான் ஆகிறேன் அல்லது நாம் ஆகிறோம். உயிரை ஆன்மா என்று ஆன்மிகம் கொண்டாடுகிறது. முதலில் சில கேள்விகள்…

ஆன்மாவிற்கு ஆண் பெண் என இன வேற்றுமை உண்டா? உண்டு எனில் அது எவ்வாறு தம் இனத்தை தேர்வு செய்கிறது. ஆன்மா எவ்வாறு பயணிக்கிறது? ஆன்மாவின் இயக்கம் எவ்வாறானது? ஆன்மாக்களுக்கு இடையே உரையாடல் உண்டா? உண்டு எனில் அதன் மொழி என்ன? நமது ஆன்மா, நம் உடம்புக்கு சொந்தமானதா? சொந்தம் எனில் அது ஏன் உடலை விட்டு பிரிந்து செல்கிறது? உடலை விட்டு பிரிந்தவுடன் இவர்களுக்கு இடையேயான உறவு என்ன? ஆன்மா உடலை இயக்குகிறதா அல்லது உடல் ஆன்மாவை இயகுக்கிறதா?

இது போன்ற கேள்விகளில் சில அபத்தமாக கூட இருக்கலாம். இக்கேள்விகளுக்கு விடை கூற முயலும் எவரும் ஆத்ம தத்துவத்தை அறிந்தாகவேண்டும். இருப்பினும் இக்கேள்விகளுக்கு எளிய ஆன்மிகம் தனது மொழில் விடையளிக்க முனைகிறது. அதாவது ஆன்மாவை பாலுடன் ஒப்பிட்டு ஒரு அறிஞர் கூறியது நினைவுக்கு வருகிறது. நெய் பாலுக்குள் இருக்கிறது, அனால் அது நம் கண்களுக்கு தெரிவதில்லை. பாலை நாம் பாலக வைத்திருந்தால் அது ஒரு நாளில் கெட்டுவிடுகிறது, மாறாக பாலை காய்ச்சி சற்று உறை ஊற்றி வைத்தால் மறுநாள் அது கெட்டுவிடாமல் தயிராக வாழ்ந்து கொண்டிருக்கும். மேலும் இதே தயிரைக் கடைந்து மோரும் வெண்ணையுமாய் பிரித்துவிட்டால், அதே பால் அதற்கு அடுத்த நாளும் தனது நிலைகளை மாறி வாழ்ந்து கொண்டிருக்கும். வெண்ணையை ஒரு வாரம் வரை கெடாமல் பாதுக்காக முடியும், பிறகு வெண்ணை கெட்டு விடும். ஆக இதை அழிவிலிருந்து முழமையாக பாதுகாக்க வேண்டுமெனில் இதை நெய்யாக்கிவிட வேண்டும். நெய்யின் சிறப்பியல்பு யாதெனில் உலகம் அழியும் வரை நெய்யும் அழிவதில்லை.

ஆக ஒரே நாளில் கெட்டுப்போக கூடிய பாலுக்குள்ளே உலகம் அழியும் வரை கெடாமல் இருக்கும் நெய் மறைந்திருக்கிறது. இதை பிரித்து எடுக்காமல் அப்படியே விட்டுவிட்டால் பாலுடன் சேர்ந்து நெய்யும் அழிந்துவிடுகிறது. ஆக இதை தனித்து பிரித்துவிட்டால் அழிவற்றதன்மையை பெற்று விடுகிறது. இதன் கருத்தாக்கம், அழியக்கூடிய உடலுக்குள் அழிவற்ற ஆன்மா இருக்கிறது, அந்த ஆன்மாவே தான் என்று யாரொருவன் உணர்கிறானோ அவன் அழிவற்ற நிலை அடைகிறான். இதை உணர்ந்தவர்களுக்கு மரணம் என்பதே இல்லை.

இதற்கிடையில் , இறப்புதான் மனித வாழ்க்கையின் முற்றுப்புள்ளியா என்று கேட்டால், அது விவாதத்துக்கு உட்பட்டது என்றுதான் கூற வேண்டும். ஆனால், எலி மற்றும் மீன் ஆகிய உயிரினங்கள் மீதான சமீபத்திய ஆய்வு ஒன்றில், உயிரிழப்பு அல்லது இறப்புக்குப் பின் சில நாட்கள் வரை உடலிலுள்ள மரபணுக்கள் தொடர்ந்து செயல்படுகின்றன எனும் அதிசயமான அறிவியல் உண்மை, உலகில் முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நுண்ணுயிரியல் ஆய்வாளர் பீட்டர் நோபல் மற்றும் அவரது ஆய்வுக்குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், அடிப்படையில் மரபணு செயல்பாடுகளை அளவிடக்கூடிய ஒரு புதிய தொழில்நுட்பம் பரிசோதிக்கப்பட்டது.

ஆனால் ‘இந்த பரிசோதனையை ஒரு இறந்த உடல் மீது மேற்கொண்டு பார்த்தால் என்ன?’ எனும் ஆர்வத்தின் காரணமாக, இறப்புக்குப் பின் ஒரு உயிரினத்தின் உடலில் மரபணு செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதைக் கண்டறிய முற்பட்டது ஆய்வாளர் நோபல்லின் ஆய்வுக்குழு. ஆனால், மனித சடலங்களில் இருந்து எடுக்கப்பட்ட ரத்தம் மற்றும் கல்லீரல் திசுக்கள் மீதான இதற்கு முந்தைய ஆய்வு ஒன்றில், சில மரபணுக்கள் செயல்படுவது கண்டறியப்பட்டு உள்ளது என்பதால், சுமார் 1000 மரபணுக்களின் செயல்பாடுகளை பரிசோதிக்க முடிவு செய்தனர் நோபல் தலைமையிலான ஆய்வாளர்கள்.

இறந்துபோன எலிகள் மற்றும் வரிக்குதிரை மீன்கள் ஆகியவற்றின் உடல்களில் உள்ள, தேர்ந்தேடுக்கப்பட்ட 1000 மரபணுக்களின் செயல்பாடுகள் எலிகளில் சுமார் 2 நாட்கள் வரையிலும், வரிக்குதிரை மீன்களில் நான்கு நாட்கள் வரையிலும் ஆய்வு செய்யப்பட்டது.

தொடக்கத்தில், இறப்புக்குப் பின் சில நிமிடங்கள் முதல் சில மணி நேரங்களுக்குள் எலிகள் அல்லது மீன்களின் மரபணுக்களுடைய செயல்பாடுகள் நின்றுபோகும் என்றுதான் நினைத்தனர் ஆய்வாளர்கள். ஆனால் மிகவும் ஆச்சரியப்படும் விதமாக, எலிகள் மற்றும் வரிக்குதிரை மீன்களின் பெரும்பாலான மரபணுக்களின் செயல்பாடுகள், அவை இறந்த பின் முதல் 24 மணி நேரங்களில் மிகவும் அதிகமானதும், அதன் பின்னர் மெல்ல மெல்ல குறைந்ததும் தெரியவந்தது.

முக்கியமாக, வரிக்குதிரை மீன்களில் மட்டும் சில மரபணுக்கள் தொடர்ந்து நான்கு நாட்கள் செயல்பட்ட வண்ணமாய் இருந்தது கண்டறியப்பட்டது. சுவாரசியமாக, இறப்புக்குப்பின் செயல்பட்ட மரபணுக்களில் திசுக்காயத்தை அதிகப்படுத்துகின்ற, நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிற மற்றும் உளைச்சலுக்கு எதிராக செயல்படுகின்ற மரபணுக்கள் ஆகியவை அதிகமாக இருந்தது தெரியவந்தது.

ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக, பிறப்புக்குப்பின் அவசியப்படாத, சிசுக்களில் மட்டுமே இயங்கக்கூடிய பல மரபணுக்கள் இறப்புக்குப் பின்னும் செயல்பட்டது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த வினோதமான மரபணு செயல்பாட்டுக்கான திட்டவட்டமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. என்றாலும், இறந்த உடல்களில் உள்ள உயிரணு சூழல்கள் சிசுக்களில் உள்ளது போலவே இருக்கும் என்பதால், அதன் காரணமாகக் கூட இந்த மரபணு செயல்பாடுகள் நிகழலாம் என்று விளக்குகின்றனர் ஆய்வாளர்கள்.

இது ஒரு புறமிருக்க, அதிர்ச்சியூட்டும் விதமாக, இறந்த உடல்களில் புற்றுநோயைத் தூண்டும் மரபணுக்களின் செயல்பாடுகள் அதிகமானதும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

இறந்தவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டு பொருத்தப்படும் மாற்று பாகங்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்துகள் அதிகம் இருப்பதற்கு காரணம் என்ன என்பது இதுவரை தெரியாமல் இருந்து வந்தது.

ஆனால் இறந்த உடல்களில் புற்றுநோயை தூண்டும் மரபணுக்களின் செயல்பாடுகள் அதிகமாக இருப்பதன் காரணமாகக் கூட, மாற்று பாகங்களில் புற்றுநோய் ஏற்படலாம் என்கிறார் ஆய்வாளர் நோபல். ஆக, இறந்த உடல்களின் மரபணு செயல்பாடுகள் குறித்த இந்த ஆய்வின் மூலமாக, மாற்று பாகங்களின் தரம் குறித்த புதிய உண்மைகளை இனி கண்டறிய முடியும் என்கின்றனர் பிற ஆய்வாளர்கள்.

அதுமட்டுமல்லாமல், ஒருவர் இறந்துபோன நேரத்தை துல்லியமாக கணக்கிடவும் இந்த புதிய ஆய்வு முடிவுகள் உதவும் என்கிறார் ஹவாயில் உள்ள ஹோனோலூலூ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தடயவியல் விஞ்ஞானி டேவிட் கார்டர்.

முக்கியமாக, ஒரு உயிரினம் உயிருடன் இருக்கும்பொழுது, உயிரணு வளர்ச்சியை தூண்டுகிற மரபணுக்கள் உள்ளிட்ட பல மரபணுக்களின் செயல்பாடுகள், புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் திறன்கொண்ட சில சக்திவாய்ந்த மரபணுக்களால் தடை செய்யப்பட்டு, அதே நிலையில் தொடர்ந்து பராமரிக்கப்படும்.

ஆனால் அதே உயிரினம் இறந்துபோன பின்னர், புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் மரபணுக்கள் போன்ற பல சக்திவாய்ந்த மரபணுக்கள் செயலிழந்து போய் விடுவதால், புற்றுநோய் ஏற்படுத்துகிற மரபணுக்கள் உள்ளிட்ட பல ஆபத்தான மரபணுக்கள் செயல்படத் தொடங்கிவிடும் என்பதும் இந்த ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது என்கிறார் ஆய்வாளர் நோபல்.

ஆக மொத்தத்தில், ‘ஒரு உயிரினத்தின் இறப்பை ஆய்வு செய்வதன் மூலம், உயிர்வாழ்க்கைத் தொடர்பான பல அறி வியல் உண்மைகளை கண்டறிய முடியும்’ என்பதே இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ள உண்மை’ என்கிறார் ஆய்வாளர் பீட்டர் நோபல்!

Related Posts

error: Content is protected !!